Show all

தமிழர் பெருமிதம்: முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாள் இன்று! கூகுளும் தன் முகப்பில் கோட்டோவியம் முன்னெடுத்து கொண்டாட்டம்.

கொண்டாடி மகிழ்வோம்! ஹிந்தித்திணிப்பு எதிர்ப்பு போராளி, தமிழார்வலர், இந்தியாவின் முதல் பெண் அல்லோபதி மருத்துவர், பெண் உரிமை தன்னார்வலர், எழுத்தாளர், சாதிய மறுப்பாளர், இப்படி போற்றுதற்குரிய அடையாளங்களுக்குச் சொந்தக்காரர் முத்துலட்சுமி ரெட்டிக்கு இன்று பிறந்த நாள்.

14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  ஹிந்தித்திணிப்பு எதிர்ப்பு  போராளி, தமிழார்வலர், இந்தியாவின் முதல் பெண் அல்லோபதி மருத்துவர், பெண் உரிமை தன்னார்வலர், எழுத்தாளர், சாதிய மறுப்பாளர், இப்படி போற்றுதற்குரிய அடையாளங்களுக்குச் சொந்தக்காரர் முத்துலட்சுமி ரெட்டிக்கு இன்று பிறந்த நாள்.

107 ஆண்டுகளுக்கு முன்பு, பிரித்தானிய இந்தியா, சென்னை மாகாண, சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து, இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார். இவர் இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார்.

இவர் புதுக்கோட்டை மன்னராட்சிப் பகுதியில், திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 133 ஆண்டுகளுக்கு முன்பு நாராயண சாமி, சந்திரம்மாள் இணையருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். பார்ப்பனியச் சமூகத்தைச் சேர்ந்தவர். தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். 

பிரித்தானிய இந்தியாவிலும், பார்ப்பனிய ஆளுமைகள் கோலோட்சி வந்த நிலையில், அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்பதான அந்தக் காலக் கட்டத்தில், எதிர் நீச்சல் போட்டு 4 அகவையில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி, தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலட்சுமிக்கு அவரது தந்தை ஊக்கமளித்தார். ஆனால், வெளியூர் கல்லூரிகளில் பெண்களுக்கு விடுதி வசதி இல்லை. உள்ளூர் கல்லூரியிலோ பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடு இருந்தது.

இந்தச் சூழலில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். அப்போது மன்னர் ஆட்சியில் இருந்த அதிகாரிகளில், சில பழைமைவாதிகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு, முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார்.

அதில் வெற்றி பெற்ற பிறகு, சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கல்வி தடைபட்டது. மேலும், அவரது தாய் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்துபோனார். நோயும், அதன் கொடுமைகளையையும் நேரில் அனுபவித்ததால், மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்கு எழுந்தது.

இதைத் தொடர்ந்து, சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாட்டின் முதல் மருத்துவ மாணவியான முத்துலட்சுமி படிப்பில் சிறந்து விளங்கி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புச் சான்றிதழ்களும், தங்கப் பதக்கங்களும் பெற்று, நாட்டின் முதல் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார்.

அவருடைய கணவர் டி.சுந்தரரெட்டி அடையாற்றில் அன்னிபெசன்ட் அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தார். அங்கேதான் முத்துலட்சுமி - சுந்தரரெட்டி திருமணம் நடந்தது. 
பிரித்தானிய இந்தியாவில் இரட்டை ஆட்சி முறையில் சென்னை மாகாண காங்கிரஸ் அரசு ஹிந்தியைத் திணிக்க முற்பட்ட போது, நடந்த ஹிந்திமொழி திணிப்பு எதிர்ப்பு கிளர்ச்சியில் பங்குபெற்றார். தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம் எனத் தமிழ்ப் பணிகள் செய்தார். மாதர் இந்திய சங்கம் நடத்திய பெண்களுக்கான மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்.

இந்திய விடுதலைக்கு இருபத்தியோரு ஆண்டுகளுக்கு முன்பு, 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய சொற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிரித்தானிய சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார். சட்டமன்ற துணைத்தலைவராகவும், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுகளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், இளம் அகவை திருமணத் தடை சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை.

அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி.

சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அமைய காரணமானவர்களில் இவரும் ஒருவர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,229.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.