Show all

மாணவர்கள் போராட்டத்தின் நினைவாக மெரினாவில் நினைவு சின்னம் அமைக்கப்படும்

  தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மாணவர்கள் போராட்டத்தின் நினைவாக மெரினாவில் நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று கோவை பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

     கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் சிவானந்தாகாலனியில் நடந்தது.

     இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு 1965-ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டமும் காரணமாக இருந்தது. கடந்த ஒருவார காலமாக தமிழக கலாசாரத்தை, பண்பாட்டை காப்பாற்றுவதற்காக சல்லிக்கட்டை முன்வைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

     என்னை பொறுத்தவரை மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் அதே நேரத்தில் நம்முடைய கலாசாரத்தை காப்பாற்றியிருக்கிற மாணவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள் போராட்டம் அமைதியாக நடந்து வெற்றி பெற்ற பிறகு மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியிருக்கிறார்கள். இதற்கு அவசியம் என்ன?

     முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் டெல்லி சென்று அவசர சட்டம் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு சென்னை திரும்புகிறார். அவர் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை விடுகிறார். மறுநாள் மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டுவீச்சு நடந்திருக்கிறது. இந்த பிரச்சனையில் காவல் துறையினர் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார்கள்.

     மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற்றது என்ற செய்தி வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக கலவரம் காவல்துறை மூலம் ஏற்படுத்தப்பட்டது. சமூக விரோத சக்திகள் மாணவர்கள் போராட்டத்தில் புகுந்து விட்டார்கள் என அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள். பொய் பிரசாரம் செய்கிறார்கள். இது வெட்கக்கேடு. வேதனை அளிக்கிறது.

     இதுபற்றி பேச வேண்டும் என கடந்த 23-ந்தேதி (போராட்டஉணர்வுகளின் கருப்புநாள்) சட்டமன்றம் கூடிய போது நாங்கள் முயன்றோம். ஆனால் அனுமதி தரவில்லை. வெளிநடப்பு செய்தோம். சட்டசபை முடிந்த கையோடு ஆளுநர் மாளிகை சென்று காவல்துறையின் கொடூர தாக்குதல் குறித்து ஆளுநரிடம் ஆதாரத்துடன் புகார் மனு அளித்தோம். பெண் காவலர் ஒருவர் ஒரு வீட்டுக்கு தீ வைக்கிறார். இதுபோன்ற வாட்ஸ்அப் காட்சிகளை ஆளுநரிடம் ஆதாரமாக அளித்தோம். இதை பார்த்து அவரே மிரண்டு போய் விட்டார்.

     அவசர சட்டம் அறிவிக்கப்பட்ட பின்னரும் மாணவர்கள் ஏன் தொடர்ந்து போராட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் சல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வராத நிலையில் 3 நாட்களில் அவசர சட்டம் கொண்டு வந்தது உண்மையா? என்று தான் மாணவர்கள் கேட்கிறார்கள்.

     சட்டமன்றத்தில் சல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் வந்த போது அதை தி.மு.க. மனமுவந்து ஆதரித்தது. டெல்லியில் இருந்து சென்னை வந்த முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக மெரீனா சென்று போராட்டம் நடத்திய மாணவர்களைச் சந்தித்து பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. இதற்கு என்ன காரணம்?

     இந்தியாவிலேயே தமிழக மாணவர்கள் சல்லிக்கட்டுக்காக நடத்திய அறப்போராட்டம் போன்று வேறு எந்த மாநிலத்திலும் நடந்தது கிடையாது. அப்படிப்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டார்கள் என ஆட்சியாளர்கள் பழி போடுகிறார்கள். இது வேதனை அளிக்கிறது.

 

     இன்று தமிழகம் எல்லா துறைகளிலும் புறக்கணிக்கப்படுகிறது. சிறுவாணி ஆறு, பவானி ஆற்றில் அணை கட்ட முயற்சிக்கும் கேரளாவை கண்டிக்காதது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுக்காதது போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அரசுகள் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு காரணமாகத் தான் இந்த போராட்டம் நடந்துள்ளது.

     சல்லிக்கட்டுக்காக தி.மு.க. சார்பில் சென்னையில் உண்ணாவிரதம் நடத்தினோம். அப்போது மாணவர்கள் சிலர் அங்கு வந்து வாழ்த்தி பேசினார்கள். அப்போது மாணவர்கள் நடத்திய போராட்டத்தை நினைவு கூறும் வகையில் மெரினாவில் நினைவுச்சின்னம் அமைக்க துணை நிற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இதை ஆட்சியாளர்கள் தான் செய்ய வேண்டும். செய்ய தவறினால் அடுத்து தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மெரினாவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.