Show all

சாவடி அவனைச் சாவடி என்று எட்டி உதைத்த பெண் காவலர்; நடுக்கம் தீராத நடுகுப்பம்

சென்னை கலவரம் நடைபெற்ற நடுகுப்பத்தில் இன்றும் இயல்பு நிலை திரும்பவில்லை. வீட்டில் இருக்கும் ஆண்களை கைது செய்யப் போவதாக காவலர்கள் மிரட்டியதால் அச்சத்தில் 3 நாட்களாக ஆண்கள் வீட்டிற்கு வரவில்லை.

     கடந்த திங்கள் கிழமை திருவல்லிக்கேணி நடுகுப்பத்தில் கலவரம் வெடித்தது. இதில் காவலர்களே குடிசை மற்றும் ஆட்டோக்களுக்கு தீ வைத்து கொளுத்தினர். மேலும் மீன் சந்தையும் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

     சல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நடுகுப்பத்து வீடுகளில் தஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறி காவலர்கள்-

பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமல் அடித்து தாக்கியுள்ளனர்.

     மேலும், வாகனங்கள், குடிசைக்கெல்லாம் நடுகுப்பத்தில் இருப்பவர்கள்தான் தீ வைத்தார்கள் என்று ஒப்புதல் தர வேண்டும் என்றும் வீட்டிற்கு ஒரு ஆண் காவல்நிலையத்திற்கு வர வேண்டும் என்றும் காவலர் அச்சுறுத்தியதாக அப்பகுதி மக்கள் கூறினார்கள். இதனையடுத்து ஆண்கள் வீட்டிற்கு வர தயங்கி வெளியிலேயே தங்கியுள்ளனர்.

     திங்கள் கிழமை தன் வீட்டில் இருந்து நடு குப்பத்தில் இருக்கும் தனது மாமா வீட்டிற்கு சென்றுள்ளார் பிரேம். அந்த நேரம் பார்த்து காவலர் வீடு வீடாகச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த பிரேம் வெளியே இழுத்து வரப்பட்டு தெருவில் போட்டு 15 காவலர் அவரை கட்டையால் அடித்து தாக்கியுள்ளனர்.

     பிரேமுடன், நிஷாந்த் என்ற இன்னொரு இளைஞரும் வீட்டில் இருந்ததால் அவருக்கும் அடி உதை. இரண்டு பேரையும் குண்டுக்கட்டாக எங்கேயோ ஓர் இடத்திற்கு கூட்டிச் சென்று அங்கு வைத்து காக்கிச் சட்டை போட்ட எல்லோரும் அடித்து உதைத்தார்கள் என்கிறார் பிரேம்.

‘சாவடி அவனை சாவடி’ என்று எட்டி எட்டி பெண் காவலர்களே உதைத்தனர் என்றும் பிரேம் கூறினார்.

     இதில் பலத்த காயமடைந்த பிரேம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தலையில் 18 தையல்கள் போடப்பட்டுள்ளன. நிஷாந்திற்கு 6 தையல்கள் போடப்பட்டுள்ளன. இது போல் பல இளைஞர்களும், குழந்தைகளும், பெண்களும் தாக்கப்பட்டுள்ளதால் ஒரு வித அச்சம் இப்பகுதியில் இன்னும் நிலவி வருகிறது.

     திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வீடு தோறும் சென்ற காவலர் வீட்டிற்கொரு ஆண் காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனால் அங்கிருக்கும் பெண்கள் வேலைக்கு போன தங்களது கணவர்மார்களை வீட்டிற்கு வர வேண்டாம் என்று கூறி வெளியிலேயே தங்க வைத்துள்ளனர்.

     எரிந்து 3 நாட்கள் ஆகியும் தங்களை வந்து பார்த்து ஒரு ஆறுதல் கூட சொல்லாத தமிழக அரசின் மீது மிகுந்த கோபத்தில் இப்பகுதி மீனவப் பெண்கள் உள்ளனர். மேலும், மீன் கடைகளை மீண்டும் தொடங்க முடியாமல் அன்றாட வாழ்க்கை பெரும் கேள்விக் குறியாகி இருப்பதை தெரிவிக்கும் அவர்கள், எரிந்து சாம்பலான தங்களது கடைகளைப் பார்த்து, பார்த்து கதறி அழுகின்றனர்.

     குடியரசு நாள் விழா இன்றோடு முடிவடைந்துள்ள நிலையில், இனி காவலர்களின் தொல்லை தங்களுக்கு இருக்கக் கூடாது என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

     மேலும், தமிழக அரசு தங்களது மீன் கடைகளை சரி செய்து கொடுத்து மீண்டும் தங்களது வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.