Show all

மெரினா வழக்கில் வெற்றி! கருணாநிதி தன்னை வாழ்த்திய பாராட்டு வரிகளை உண்மையாக்கிய வழக்கறிஞர்

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டபோது தமிழக அரசு மறுத்தது. இதை எதிர்த்து திமுக உயர் அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் திமுக சார்பில் திமுகவின் மூத்த வழக்கறிஞர் வில்சன் அணியமானார். வில்சன் திமுக சார்பில் நடக்கும் வழக்குகளில் அணியமாகும் மூத்த வழக்கறிஞர் ஆவார்.

வில்சனின் வாதங்களால் திமுக பல வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளது. அப்படி வெற்றிப்பெற்ற ஒரு சந்தர்ப்பத்தில் கருணாநிதியிடம் வாழ்த்துப்பெறச் சென்ற வழக்கறிஞர் வில்சனை அழைத்த கருணாநிதி தனக்கே உரிய பாணியில்,

'நீ வில்சன் அல்ல தம்பி வின் சன்' என்று நகைச்சுவையாக குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார் கலைஞர்.

ஐந்து முறை முதல்வராக இருந்த முதுபெரும் அரசியல்வாதிக்கு மெரினா கடற்கரையில் அனுமதி மறுத்ததை திமுக தொண்டர்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கண்டித்தனர். ஆனாலும் அரசு அசைந்துக்கொடுக்கவில்லை.

இறுதியில் சட்டப்போராட்டம் நடத்த திமுக தலைவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து மெரினாவில் கருணாநிதி உடல் அடக்கம் நடத்த உத்தரவிடக்கோரி தலைமை அறங்கூற்றுவர் (பொறுப்பு) அமர்வு முன் முறையிடப்பட்டது. இந்த வழக்கில் திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் அணியமாகி ஆணித்தரமான வாதத்தை எடுத்து வைத்தார்.

இதை எதிர்க்கொள்ள முடியாமல் அரசு தரப்பு திணறியது. அவர்கள் எடுத்துவைத்த வாதம் அனைத்தும் வில்சன் உள்ளிட்டோர் வாதங்களால் தவிடு பொடியாகியது. இறுதியில் கருணாநிதி உடல் அடக்கம் மெரினாவில்தான் என்று தீர்ப்பு வந்தது.

கலைஞர் ஏற்கெனவே வாழ்த்தியது போல் வில்சன் அல்ல 'வின்'சன் என்பதை மூத்த வழக்கறிஞர் வில்சன் மீண்டும் நிரூபித்துள்ளதாக திமுகவினர் தெரிவித்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,873.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.