Show all

தமிழர்கள் யாராக இருந்தாலும் புடம் போட்டுப் பார்ப்பார்கள் கட்ஜு! தமிழர் தருகின்ற இடத்தை உலகில் எந்த இனத்தாலும் தரமுடியாது

28,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் சல்லிக்கட்டுப் புரட்சி வெடித்தபோது மார்க்கண்டேய கட்ஜு போட்ட தொடர் பதிவுகளால் தமிழர்தம் பாராட்டுகளைப் பெற்றார். நானும் தமிழனே என்றும் அவர் உணர்ச்சிகரமாக அறிவித்தார். அந்த அளவுக்கு தமிழகத்தில் நடந்த சல்லிக்கட்டுப் புரட்சி அவரை ஈர்த்தது.

தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்தார். பல ஆலோசனைகளையும் கூறி வந்தார். இந்த நிலையில் அண்;மையில் அவர் போட்ட ஒரு பதிவு பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது. செயலலிதா மரணம் மற்றும் கருணாநிதி மரணம் குறித்து அவர் பதிவு போட்டிருந்தார். அதில் செயலலிதா, கருணாநிதிக்காக ஏன் தமிழக மக்கள் அழுகிறார்கள். கருணாநிதியின் குடும்பம் குறித்தும் அவர்கள் சேர்த்த சொத்துக்கள் குறித்தும் கவலைப்பட வேண்டும். காமராஜர் மரணித்தபோது அவரிடம் சொத்து எதுவும் இல்லை. எத்தனை முரண்பாடு என்று கூறியிருந்தார்.

கட்ஜுவின் இந்தப் பதிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. பலரும் கட்ஜுவின் பதிவில் வந்து கடும் கண்டனங்களைக் குவிக்கத் தொடங்கி விட்டனர். இது பின்னர் கட்ஜூவை சாதி ரீதியாக விமர்சிக்கும் அளவுக்குப் போய் விட்டது. இந்த நிலையில் கட்ஜு போட்ட இன்னொரு பதிவில், நான் கருணாநிதியின் சொத்துக்கள் குறித்துத்தானே கேட்டேன். அதற்கு ஏன் தமிழர்கள் கோபப்படுகிறார்கள் என்று கூறியிருந்தார்.

இந்தப் பதிவிலும் கண்டனங்கள் குவிந்தன. இதனால் அதிருப்தி அடைந்த கட்ஜு தற்போது புதிய பதிவைப் போட்டுள்ளார். அதில் இனிமேல் தமிழர்கள் குறித்துப் பேசப் போவதில்லை என்று கூறியுள்ளார் கட்ஜு. இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பதிவு:

தமிழர்கள் குறித்து நான் இதுவரை போட்ட அத்தனை பதிவுகளையும் எனது முகநூலிலிருந்து அழித்து விட்டேன். இன ரீதியான விவாதங்கள் தொடரக் கூடாது என நான் விரும்புகிறேன். எனது பதிவுக்கு வந்த நூற்றுக்கணக்கான விமர்சனங்களும் மிகவும் மோசமானவை, ஒரே மாதிரி திரும்பத் திரும்ப விமர்சிக்கிறார்கள்.

என்னை சாதி வெறி பிடித்தவனாக சித்தரிக்கிறார்கள். எனது வாழ்க்கை முழுவதும் சாதியம், மதவாதத்திற்கு எதிராக பேசி, போராடி வந்தவன் நான். நான் என்ன சொன்னேன் என்பதை விளக்கி விட்டேன். நான் சொன்னது தவறாகக் கூட இருக்கலாம். நான் தவறே செய்யாதவன் என்று ஒரு போதும் கூறியதில்லை. நானும் தவறு செய்யக் கூடியவன்தான். ஆனால் என்னைப் பற்றிய விமர்சனங்கள் தவறாக இருக்கலாமா?

தமிழர்களின் பல போராட்டங்களில் நான் அவர்களை ஆதரித்து வந்துள்ளேன். சல்லிக்கட்டுப் போராட்டம், உயர்அறங்கூற்றுமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்குவது, நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து உழவர்கள் நடத்திய போராட்டங்கள் என நான் பல போராட்டங்களை ஆதரித்துள்ளேன்.

எல்லாவற்றையும் அவர்கள் மறந்து விட்டார்கள். என் மீது மிகவும் மோசமான தாக்குதலைத் தொடுத்து விட்டனர். என்னை ஒரு பார்ப்பண சாத்தானாக சித்தரித்து விட்டனர். எனவே தமிழர்களே வருகிறேன்! உங்களது விசுவாசத்திற்கு நன்றி என்று கூறியுள்ளார் கட்ஜு.

இவ்வளவு உணர்ச்சி வசப்பட வேண்டியதில்லை கட்ஜு! தமிழர்கள் யாராக இருந்தாலும் புடம் போட்டுப் பார்ப்பார்கள் ; முதல் புடம் போடுதலிலேயே தாங்க முடியாமல் துவண்டு போகின்றீர்களே? உங்களை நோக்கிய தமிழர் கேள்விக் கணை ஒவ்வொன்றும் நீங்கள் உண்மையிலேயே தமிழர் குறித்த புரிதல் உள்ளவரா என்பதற்கான தேர்வுதான்? தமிழர் தேர்வுகள் அனைத்திலும் நீங்கள் வென்று விட்டால் உங்களுக்கு தமிழர் தருகின்ற இடத்தை உலகில் எந்த இனத்தாலும் தரமுடியாது. தமிழர்களை நீங்கள் நிறையப் படிக்க வேண்டும்!

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,878.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.