Show all

கமல் இன்று! கிராம பஞ்சாயத்து என்றொரு அரசின் செயல்பாடு உள்ளதை வெளிக்கொணர்ந்த அரசியல்வாதி

18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மய்யம் விசில் செயலியை அறிமுகப்படுத்தி விளக்கமளித்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் செயலியை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி பேசியதாவது:

இதழியலாளர்கள் செய்யும் வேலையை, சாமானியர்களும் செய்யத் தூண்டும் செயலி இது. இந்தச் செயலி நம்மைச் சுற்றி நடக்கும், நமது சூழலில் நடக்கும் மாசு, குற்றங்கள், ஊழல்கள் இவற்றை எல்லாம் தனி மனிதன் ஒரு அபாயச் சங்கு ஊதி தெரியப்படுத்தும் கருவி தான் இந்த விசில். 

அது எப்படியென்றால், உங்கள் பகுதியில் நடக்கும் தவறு, தொடர்ந்து நடக்கும் தவறுகள் அதை சொல்ல விரும்புபவர்கள், முதலில் செய்தி இதழ்களுக்கு எழுதுவார்கள். தற்போது முகநூலில் பதிவிடுகிறார்கள். அதை தொடர்ந்து வலியுறுத்தவோ, அது நடக்கிறதா, இல்லையா என்று பார்க்கவோ யாரும் கிடையாது. இனி அந்த மையமாக மய்யம், மக்கள் நீதி மய்யம் செயல்படும். இது இருக்கும் குறைகளை ஒரே நொடியில் தீர்த்து விடும் மந்திரக்கோல் அல்ல. இது இருக்கும் குறைகளை செவிசாய்த்து கேட்பதற்கும், கண்கொண்டு பார்ப்பதற்கும் உதவும் ஒருகருவி. 

காது வைத்து கேட்டால் நம் அவலங்களை கேட்கும், ஒரு ரீங்கரிக்கும் ஒரு கருவியாக இது இருக்கும். இது எங்களுக்கும், பிற்பாடு நாங்கள் நினைப்பது நடந்தால், செய்வதை செய்வதற்கு இந்த கருவி மூலம் எங்களுக்கு கிடைக்கும் தகவல்கள் எல்லாம், எங்களுக்கு வீட்டுப்பாடம் ஆகும். நாங்கள் தேர்வு எழுதும் நேரம் வரும் போது, அதற்கான பதில்களெல்லாம் இந்த கருவியின் மூலம் எங்களுக்கு கிடைத்திருக்கும். தற்போதைக்கு இந்தச் செயலி, மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களின் கையில் மட்டுமே கொடுக்கப்படுகிறது. தற்காப்பு கருதியும், மய்ய உறுப்பினர்கள் பெரும் ஆர்வத்துடன் செயல்படுவார்கள் என்பதாலும் தற்போதைக்கு உறுப்பினர்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். 

இது காவல்துறைக்கோ, அதிகாரிகளுக்கோ, அரசுக்கோ மாற்று அல்ல. அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அல்லது அவர்களை விமர்சனம் செய்யும் கருவியாக இருக்கும். மய்யம் செயலி இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இன்று கிராம பஞ்சாயத்துகள் நடக்கிறதா என்பதை கண்காணிக்கவும், நல்லபடி நடந்தால் அதை பாராட்டவும், நடக்கவேயில்லை என்றால் ஏன் என்பதை நீங்கள் எங்களுக்கு தெரியப்படுத்தவும் இது ஒரு பயனுள்ள கருவியாக இருக்கும். நாளை நாங்கள் தத்தெடுத்துக் கொண்ட அதியத்தூர் கிராமத்திற்கு செல்லவிருக்கிறோம் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,774.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.