Show all

அனைத்துலக மகளிர் நாளான இன்று தனது இரண்டாவது பொதுக்கூட்டத்தை நடத்துகிறார் கமல்

24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கமல் நடத்தும் இரண்டாவது கட்சி மாநாடு அனைத்துலக மகளிர் நாளான இன்று நடைபெறும் நிலையில், மக்களுக்கு இடையூறு இல்லாதிருக்க, சுவரொட்டிகள், விளம்பரத் தட்டிகள், பதாகைகளைத் தவிர்க்க கமல்ஹாசன் கூறியிருக்கிறார். 

செயலலிதா மறைவு, கருணாநிதி உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாக தமிழக மக்களிடையே ஒரு பேச்சு அடிபடுகிறது. அந்த இடத்தை நிரப்பும் விதமாக நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் அவர்களது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கட்சிப்பணிகளை கவனித்து வருகின்றனர். 

நடிகர் கமல் அவரது கட்சிப் பெயர் மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பேசினார். இந்நிலையில், கமல் நடத்தும் இரண்டாவது பொதுக் கூட்டம், அனைத்துலக மகளிர் நாளான இன்று சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடக்கிறது. 

அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். 

இதுகுறித்து கமல் அவரது கீச்சுப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இன்று மாலை நடைபெறும் அனைத்துலக மகளிர் நாள் விழாவிற்கு அனைவரும் வருக. மக்களுக்கு இடையூறு இல்லாதிருக்க, நம்மவர்கள் சுவரொட்கள், விளம்பரத்தட்டிகள், பதாகைகளைத் தவிர்க்கவும்! என்று பதிவிட்டிருக்கிறார்.

இது அவரது கட்சிக்கு வளர்ச்சி தருமா! தளர்ச்சி தருமா என்பதை கற்று அதன் படி மாற்றத்தை முன்னெடுப்பார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,720.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.