Show all

இந்தியா! 70 ஆண்டுகளில் மொட்டு வகுப்பு முடித்து மலர் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றிருக்கிறது

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தைப் பொறுத்த வரை குற்றவாளிகள் உருவாவதில், தனிமனித காரணங்களை விட சமூக காரணங்களே முதன்மைத்துவம் பெற்றிருக்கிறது. 

உலகமே பெண்களை அடிமையாக நடத்தி வந்த காலத்திலேயே பெண்களுக்கு கல்வி கொடுத்து, பெண்பாற் புலவர்களை உருவாக்கி, அவர்கள் வழிகாட்டலில் ஆட்சி நடத்தியமண் தமிழகம். சேயோன், குமரன், பிள்ளையார், உருத்திரன் என்று குழந்தைகளை தெய்வமாக்கி, அவர்களை மதித்து, குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு குடும்பத்தை வலிமையாக முன்னெடுத்தவர்கள் நம் பழந்தமிழர்கள். 

ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,

ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

என்று பெண்பாற் புலவர். பொன்முடியார் பாடுகிறார்.

குடும்பத்தை அடியொற்றி சமுதாயத்தை வடிவமைத்து அழகு படுத்திய தமிழ்ச் சமுதாயம் இன்று,

தமிழ்க் குடும்ப அமைப்புமுறை பத்தாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழமைக்குரியது. குடும்பத்தில் பிள்ளைகளைச் சான்றோர்களாக வளர்த்தெடுப்பதற்கான பொறுப்பை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைப்பாட்டை தமிழ்க் குடும்பம் கட்டமைத்திருக்கிறது. இன்றைக்கு நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற சட்டசமுக அமைப்பு தன் அங்கமாக கருத வேண்டிய குடும்பங்கள்மீது எந்தப் பொறுப்பும் இல்லாமல், கல்வி மறுப்பு, இடம் மறுப்பு, பொருளாதார மறுப்பு, தொழில் மறுப்பு, எல்லையில்லா வரிவிதிப்பு ஆகியவற்றோடு,

அனைத்துக் குற்றப்பின்னனிகளுக்கும் பயிற்றுக் களமாக இருக்கிற சாராயக் கடைகளையும் நடத்திக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழ்க் குடும்பங்களுக்கு தம்பிள்ளைகளை இற்றைச் சமுதாய அமைப்பில் இருந்து காப்பாற்றி சான்றோர்களாக வளர்த்தெடுப்பது கூடுதல் சுமையாக இருக்கிறது. சட்டசமுக அமைப்பை தமிழ்க் குடும்ப அமைப்பைப் போல பொறுப்புள்ளதாக கட்டமைக்க எந்த முயற்சிகளும், நிருவாகங்களும், இல்லாமல், வழமையாக தண்டனை வழங்கும் அமைப்புகளை மட்டும் இந்தியா விடுதலை பெற்ற நாளிலிருந்து இன்று வரை முறை படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்தியா விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுதாம் குற்றவாளியாக்கப் பட்டவர்களின் குழந்தைகள் பற்றிய கவலை வந்திருக்கிறது.

தமிழகச் சிறைகளில் உள்ள ஆயுள் கைதிகளின் குழந்தைகள் நிலையை ஆராய குழு அமைத்து உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செம்புதூரைச் சேர்ந்தவர் சுப்பையா அகவை45 இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே குடும்பத் தகராறு இருந்துள்ளது. பரமேஸ்வரி உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மனைவியை எரித்து கொலை செய்ததாக சுப்பையாவை கொப்பம்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கில் சுப்பையாவுக்கு தூத்துக்குடி மாவட்ட மகளிர் அறங்கூற்றுமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. தாய் இறந்த நிலையில் தந்தையும் சிறைக்கு செல்வதால் அவரது 3 மகன்களையும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு வளர்க்க வேண்டும். சிறையில் இருந்து விடுதலையானதும் குழந்தைகளை சுப்பையாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறங்கூற்றுவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் தண்டனையை எதிர்த்து சுப்பையா உயர் அறங்கூற்றுமன்ற கிளையில் மேல்முறையீடு மனு பதிகை செய்தார். இந்த மனு அறங்கூற்றுவர்கள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். விசாரணையின்போது சுப்பையாவின் 3 மகன்களையும் அறங்கூற்றுவர்கள் அழைத்து விசாரித்தனர்.

பின்னர் அறங்கூற்றுவர்கள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் மனுதாரரின் மனைவி தீக்குளித்து இறந்துள்ளார். அவரது இறப்புக்கு மனுதாரரும் ஒரு காரணமாக இருந்துள்ளார். இதற்கு அவர் இதுவரை சிறையில் அனுபவித்த தண்டனையே போதுமானது. எனவே மனுதாரருக்கு கீழமை அறங்கூற்று மன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 8 நடுவண் சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளின் குழந்தைகள் நிலையை அறிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை கைதிகளின் குழந்தைகள் என்ன செய்கின்றனர், படிக்கிறார்களா, இல்லையா? யார் பராமரிப்பில் உள்ளார்கள் என்ற விவரங்கள் அரசிடமும், சிறைத் துறையிடமும் இல்லை.

இவர்களில் பெண் குழந்தைகள் சட்டவிரோத கும்பல்களிடம் சிக்கி, குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆதரவற்ற 18 அகவைக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசுதான் பாதுகாவலர். சிறையில் இருப்பவர்கள் திருந்தி சமூகத்தில் நல்ல நிலையில் வாழும் வரை குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது முதன்மை.

இதனால் தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் கைதிகளின் குழந்தைகள் தற்போது என்ன செய்கின்றனர், யார் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படுகிறது. இக்குழு அனைத்து விவரங்களையும் வரும் வௌ;ளிக் கிழமை பதிகை செய்ய வேண்டும் என அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,732.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.