Show all

ஊழலுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்திற்கு நேரம் வந்துவிட்டதாக, அரசுகளுக்கு அறங்கூற்றுவர் எச்சரிக்கை

23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாட்டு விடுதலை போராட்டத்துக்காக தமிழ்தொடர்ஆண்டு-5045ல் (1943) நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தை தொடங்கிய போது, 14 அகவையில் இருந்த முனுசாமி, அதில் சேர்ந்தார். போராட்டங்களில் ஈடுபட்ட அவரை பிரிட்டீஷ் அரசு கைது செய்து, ரங்கூன் சிறையில் அடைத்த பின்னர், ஓராண்டு சிறைவாசத்திற்குப்பின், தமிழ்தொடர்ஆண்டு-5052ல் (1950) நாடு திரும்பியுள்ளார்.

தமிழ்தொடர்ஆண்டு-5084 முதல் (1982) தியாகிகள் உதவித்தொகை கேட்டு, நடுவண், மாநில அரசுகளை அணுகிய அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால் சென்னை உயர் அறங்கூற்று மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உதவித் தொகை வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி தமிழ்தொடர்ஆண்டு-5110ல் (2008) உத்தரவிட்டது. ஆனால், போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கவில்லை எனவும், 14 அகவையில் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் கூறி, அவரது கோரிக்கை அரசால் மீண்டும் நிராகரிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து முனுசாமி மீண்டும் பதிகை செய்த வழக்கை அறங்கூற்றுவர் எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், ஆவணங்களை பார்க்கும் போது முனுசாமி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

தகுதி பெற்ற நாளில் இருந்து இதுவரைக்கும் அவருக்கு வழங்க வேண்டிய உதவித்தொகை பாக்கியை இரண்டு மாதங்களில் வழங்கவேண்டும். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாளில் தவறாது வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு, நாட்டுக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் அனைவரும் வணக்கம் செலுத்த வேண்டும் என்றும், தெரிவித்ததோடு ஊழலுக்கு எதிரான அடுத்த விடுதலைப் போராட்டத்தை தொடங்குவதற்கான நேரம் வந்துள்ளதை நடுவண், மாநில அரசுகள் உணரவேண்டும் என்றும் அறங்கூற்றுவர் எஸ்.வைத்தியநாதன் பதிவு செய்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,631

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.