Show all

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தின் குறைபாடுகளை சரி செய்வதில் அரசு சுணக்கம்

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தின் குறைபாடுகள் அனைத்தும் சரி செய்யாவிட்டால் நீதிமன்றமே முன்னின்று சரி செய்யும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக எஸ்.டி. மனோன்மணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

 

     “அண்ணா நூற்றாண்டு நூலகம் போதிய பராமரிப்பில்லாததால், அங்குள்ள புத்தகங்கள் தூசு படிந்துள்ளன. நாற்காலிகள், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பயன் படுத்த முடியாத நிலையும் உள்ளது. மேலும், நூலக வளாகத்தில் உள்ள 500 கேமராக்களும் பழுதடைந்த நிலையில் உள்ளன.

எனவே, மாணவர்களின் நலன் கருதி நூலகத்தை பழைய நிலைமைக்கு கொண்டு வர போதிய பணியாளர்களை நியமிக்கவும், புதிய புத்தகங்களை வாங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்”

என கோரியிருந்தார்.

 

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நூலகத்தின் உண்மை நிலவரம் குறித்து வழக்கறிஞர்கள் பி.டி.ஆஷா, எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய இரு நபர் குழு நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு நபர் குழு நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. அதில், நூலகத்தில் உள்ள கழிப்பறைகள், கூட்ட அரங்கம் உள்ளிட்டவற்றில் குறைபாடுகள் முழுமையாக நிவர்த்தி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

 

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவில்லை என வாதிட்டார். அதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், எஞ்சியுள்ள குறைபாடுகளை சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

 

இதையடுத்து, எந்த தேதியில் அனைத்து குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு வழக்கறிஞர், வரும் சூன் 30-ம் தேதிக்குள் அனைத்து குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தார்.

 

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அது தொடர்பான புகைப்படங்களையும் அறிக்கையுடன் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு, இரு நபர் குழு மீண்டும் நூலகத்தை ஆய்வு செய்யலாமா என நாங்கள் முடிவு செய்வோம். அவ்வாறு குறைபாடுகளை சரி செய்யா விட்டால் நீதிமன்றமே முன்னின்று சரிசெய்யும்.

 

இந்த உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை சூலை 7-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, சூலை 22-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.