Show all

சிக்கி விட்டோம் நீட் வலைக்குள்! சுற்றிவிடும் யுக்திமூலம், நீட்தேர்வுக்குள் தமிழகமக்களை பிணைத்தது நடுவண்அரசு

21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வே வேண்டாம் என்று போராடிக் கொண்டிருந்த தமிழக மக்களை சுற்றிவிடும் யுக்தி மூலம், நீட் வலைக்குள் சிக்க வைத்து விட்டது நீட் தேர்வு நடத்தும் நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியம். 

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்து, நீட் தேர்வே வேண்டாம் என்று போராடிக் கொண்டிருந்தவர்களை, தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கு என்று போராடச் செய்து நீட் தேர்வை அவர்களை அறியாமலேயே அங்கிகரிக்கச் செய்து விட்டது.  

தமிழக மாணவர்கள் தமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின், அன்புமணி, முத்தரசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி விட்டார்கள். தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்வது மிகப்பெரிய அநீதி என்று கமல்ஹாசன் கீச்சு போட்டு விட்டார். 

தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்வதை எதிர்த்து சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, பிறகு உச்ச அறங்கூற்று மன்றத்தால் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்ததில் தவறு ஒன்றும் இல்லை என்று தீர்ப்பும் கூறியாகி விட்டது.

கண்ணைக் கட்டிக் கொண்டு ஒருவன், சரியாகச் சென்று விளையாட்டில் நிர்ணயிக்கப் பட்ட இலக்கைத் தொடுகிறானா என்று ஒரு விளையாட்டு உண்டு. அந்த விளையாட்டில் கண்ணைக் கட்டிய பிறகு அவரை திசை மயக்கம் ஏற்படும் படியாக சுற்றி விட்டு மாற்று திசை வழிப் படுத்தி அனுப்புவார்கள்; இதற்குதான் சுற்றி விடுதல் என்று பெயர்.

நீண்ட நெடுங்காலமாகவே நடுவண் அரசால் இந்தச் சுற்றி விடும் யுக்தி பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக மரமண்டைத் தலைவர்களும் தமிழ் மக்களை நடுவண் அரசின் சுற்றி விடுதல் யுக்திக்கு தக மாற்றி தமிழனை பின்னுக்குத் தள்ளிக் கொண்டேயிருக்கின்றனர். நமக்கு அறிவார்ந்த தலைவர்களுக்கான வாய்ப்பும் இன்னும் அமையாமலே போய்க் கொண்டிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,777.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.