Show all

பற்றத் தொடங்கிருச்சு! காவிரி விவகார, மோடிஅரசுமோசடிக்கெதிரான போராட்டம்

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மோசடி செய்துள்ள மோடி அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் தன்னெழுச்சியாகவும், கட்சிகள் சார்ந்தும் மெல்லக் கொழுந்து விட்டெரியத் தொடங்கியிருக்கிறது.

செல்பேசி கோபுரத்தில் ஏறி- ஆற்றில் இறங்கி- ஒன்று கூட முயன்று கைது-பிச்சை பாத்திரம் ஏந்தி- வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி- என்று அவரவருக்கு தோன்றிய விதமாக போராட்டம் பற்றத் தொடங்கியிருக்கிறது. பாஜக ஆட்சி அமைந்தது முதல், தமிழகத்தின் அத்தனை வாழ்வுரிமை விவகாரங்களிலும் முதுகில் குத்திக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பிரச்சனைக்கும் வீதிகளில் இறங்கி போராடிக் கொண்டே இருக்கிறது தமிழகம்.

சல்லிக்கட்டு உரிமையை மீட்க வரலாறு காணாத அமைதிப் புரட்சியை தமிழகம் முன்னெடுத்தது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக கதிராமங்கலமும் நெடுவாசலும் இன்னும் கனன்று கொண்டே இருக்கின்றன.

நீட் தேர்வுக்கு எதிரான உரிமை முழக்கம் இன்னமும் எதிரொலிக்கிறது. கெயில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து மேற்கு மாவட்டங்கள் போர்க்கோலம் பூண்டுள்ளன. நியூட்ரினோ எனும் நாசகார திட்டத்தைக் கண்டித்தும் ஸ்டெர்லைட் உயிர்க் கொல்லி ஆலையை மூட வலியுறுத்தியும் தென் மாவட்டங்களில் கொந்தளித்து போராடிக் கொண்டே இருக்கின்றன.

சென்னை முதல் குமரி வரையிலான மீனவர்கள் நித்தம் நித்தம் வாழ்வை பணயம் வைத்து கடலுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. எவன் கடலில் நமக்கு தொல்லையாக இருக்கிறானோ அந்தச் சிங்ளவனுக்கு ஒன்றுக்கு இரண்டாய் போர்கப்பல் வழங்கி குதுகலித்துக் கொண்டிருக்கிறது. எந்த திசையிலும் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்வதாக உணரவே இயலவில்லை.

இப்போது உச்சஅறங்கூற்றுமன்றம் 6 வார கெடு விதித்தும் சட்டை செய்யாமல் தமிழகத்தை வஞ்சிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மோசடி செய்திருக்கிறது மோடி அரசு. இப்போது தமிழகம் மட்டுமல்ல புதுவை மாநிலமும் இணைந்து போர்க்களத்தில் இறங்கியிருக்கின்றன.

சல்லிக்கட்டை மீட்டது போல பல்லாயிர மாயிரமாண்டு காவிரி உரிமை மீட்கப்படுமா?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,742.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.