Show all

மின்கட்டணம் 30 விழுக்காடு குறையும்! ஆற்றல் தணிக்கை திட்டத்திற்கு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வரவேற்பு

21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகஅரசு அறிவித்துள்ள

ஆற்றல் பாதுகாப்பு ஊக்குவிப்பு திட்டம்படி, தொழில் நிறுவனங்கள், தங்களிடம் உள்ள இயந்திரங்களை, அரசிடம் பதிவு பெற்ற, ஆற்றல் தணிக்கையாளர்களின் ஆய்வுக்கு உட்படுத்தி, தணிக்கை சான்றிதழ் பெற்றால், அதற்கான செலவில், 50 விழுக்காடு மானியமாக வழங்கப்படும். ஆற்றல் தணிக்கையாளர்கள் அறிவுரைப்படி, இயந்திரங்கள் மாற்றப்பட்டால், 25 விழுக்காடு ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த சிறப்பு திட்டத்துக்கு, தொழில் முனைவோரிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து, தொழில் மற்றும் வணிகத்துறை கூடுதல் ஆணையர், ஏகாம்பரம் கூறியதாவது: ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் பாதுகாப்பு ஊக்குவிப்பு திட்டத்தில் இதுவரை, 328 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தங்கள் இயந்திரங்களை, பதிவு பெற்ற ஆற்றல் தணிக்கையாளர்கள் வாயிலாக தணிக்கை செய்து, சான்றிதழ் பெற்றுள்ளன.

இதற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. தணிக்கை செய்ததற்கான சான்றிதழ் மற்றும் அதற்கான ரசீதை காண்பித்தால், அவை சரிபார்க்கப்பட்டு, உரிய மானியம் வழங்கப்படும். இவ்வாறு தணிக்கை செய்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், மாதம்தோறும், 30 விழுக்காடு வரை, மின் கட்டணம் குறைவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ், மேலும் பல நிறுவனங்கள் பயன் பெற, நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இயந்திரங்களை மாற்றுவதற்கு நான்கில் ஒரு பகுதி மானியமாக கொடுப்பது மிகமிக குறைவு. எண்பது விழுக்காடாக மானியத்தை உயர்த்திக் கொடுக்கலாம் ; அதனால் ஏற்படும், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியால் அரசுக்கு வருமானம் கூடும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,871.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.