Show all

டெங்குவிலிருந்து குழந்தைகளை எளிதாக பாதுகாக்கலாம்

இன்று 23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: டெங்குக் காய்ச்சலிலிருந்து நம் குழந்தைகளைக் காப்பது எப்படி? குழந்தைகள் நலம் மற்றும் குழந்தைகள் இதய நல மருத்துவர், கார்த்திக் சூர்யா சொல்கிறார்.

குழந்தைகள், விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தில் உடலைக் காத்துக்கொள்வதில் கவனமாக இருக்க மாட்டார்கள். அதனால், பெற்றோரே முழு கவனத்துடன் இருக்க வேண்டும். முதலில், டெங்குக் காய்ச்சல் எவ்வாறு வருகிறது எனப் பார்ப்போம்.

தூய்மையான நீரில் உருவாகும் ஏ.டி.எஸ் கொசு மூலமே டெங்குக் காய்ச்சல் உருவாகிறது. வீடு மற்றும் அருகில் உள்ள வாளி, கொட்டாங்குச்சி, பாலித்தீன் பை போன்றவற்றில் தேங்கியிருக்கும் நீரிலிருந்துதான் இந்தக் கொசு உருவாகிறது. இந்த ஏ.டி.எஸ் கொசு, பகலில்தான் கடிக்கும்.

சளி, இருமல் இருக்கும். இரண்டு, மூன்று நாள்களுக்குக் காய்ச்சல் அடித்துக்கொண்டிருக்கும். உடல் மிகவும் சோர்வாக இருக்கும். தலைவலி, உடல் வலி, உடல் அசதி அதிக அளவில் இருக்கும். கைக்குழந்தை என்றால், தொடர்ந்து அழுதுகொண்டேயிருக்கும். இவை அனைத்துமே சாதாரண காய்ச்சலுக்கும் பொருந்தும். சுமார் 95 விழுக்காட்டினருக்கு டெங்குக் காய்ச்சல், சாதாரண காய்ச்சல் நிவாரணி மூலமே குணமாகிவிடும். அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டால் போதும்.

மீதமிருக்கும் 5 விழுக்காட்டினருக்கு டெங்குக் காய்ச்சலின் வீரியம் அதிகமாகும்போது, உடம்பில் சிவப்பு நிறத்தில் ரேஷ் தோன்றும். அவர்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

டெங்குக் காய்ச்சலால் நமது உடலில் உள்ள பிளேட் லெட் என்று சொல்லப்படும் ரத்தக் கணங்கள் குறையும். ரத்தக் குழாய்களில் உள்ள நீர்ச்சத்து வெளியேறி, உடல் ஊதிய நிலையில் காணப்படும்.

இவை எல்லாம் மேலே குறிப்பிட்ட 5 விழுக்காட்டினருக்குத்தான். அவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டால், 48 முதல் 72 மணி நேரத்தில் குணமடைய வாய்ப்பு உள்ளது. காய்ச்சலின் தீவிரம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், கூடுதலான சிகிச்சை தேவைப்படும்.

கொசுக் கடியிலிருந்து குழந்தைகளைக் காப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். கால்கள், கைகள் ஆகியவற்றை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிவிக்க வேண்டும்.

குழந்தைகள் விளையாட வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது, கொசுக் கடிக்காமல் இருக்க, திரவங்களைப் பூசி அனுப்பவும் (திரவங்கள் உயர்தரமானதாக இருக்க வேண்டும்) தேங்கிய நீரின் அருகே செல்வதைத் தவிர்க்க வைக்கவும்.

அதிக அளவில் நீர் குடிக்கச் செய்யவும். (எப்போதும் வெந்நீரை மட்டுமே குடிக்கச் செய்யவும்)

இவை தவிர, வீட்டைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நீர் தேங்கும் விதத்தில் பொருள்களை வைக்காதீர்கள்.

காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட குழந்தைகளுக்கு, குழந்தைகளின் நீர்ச்சத்தை அதிகரிக்கும் விதத்தில், உணவுகளைக் கொடுக்க வேண்டும். இளநீர் குடிக்கச் செய்யலாம். கடைகளில் விற்கப்படும் ஓ.ஆர்.எஸ் கரைசலைக் கொடுக்கலாம். வீட்டில் தயாரித்த தயிர் மற்றும் மோரில் உப்பு சேர்த்து கொடுக்கலாம். வெந்நீர் குடிப்பதைவிடவும் இவை நல்லது. குளிர்ச்சியான உணவு வகைகளைத் தவிர்க்கவும்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதைக் குறைக்கக்கூடாது.

குழந்தைகள் ஒருநாளில் வழக்கமாக 5 அல்லது 6 முறை சிறுநீர் கழிப்பார்கள். அது தொடர வேண்டும். சிறுநீர் நிறத்தைக் கவனித்து மருத்துவரிடம் கூற வேண்டும்.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு: டெங்குக் காய்ச்சல் ஒரு தொற்றுநோய் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் ஆடைகள் தங்கள் மீது படுவதால் டெங்கு பரவாது. (ஆனால், டெங்குக் காய்ச்சல் உள்ளவரைக் கடித்த கொசு, மற்றவரைக் கடிக்கும்போது பரவும்.)

குழந்தைகளுக்கு இரண்டு நாள்கள் தொடர் காய்ச்சல் இருக்கும்பட்சத்தில் பள்ளிக்கு அனுப்பாமல், உடனடியாக சிகிச்சை அளித்து ஓய்வில் வைத்திருப்பது நல்லது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.