Show all

தனிக்கட்சியைத் தொடர்ந்து திணிக்கும் ஊடகங்களுக்கு தினகரன் தெளிவான பதில்

04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தனக்கு தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும், அதிமுகவையும் இரட்டை இலையையும் மக்கள் மன்றம் மூலமாகவும், அறங்கூற்றுமன்றம் மூலமாகவும் மீட்பதே தன்னுடைய நோக்கம் என்றும் தினகரன் ஊடகங்களுக்கு மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார். இரா.கி.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தினகரன் இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி கோத்தகிரியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்பு இதழியலாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, தனக்கு தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் அறவே இல்லை என்று தெரிவித்தார். மேலும், அதிமுக கட்சியையும், இரட்டை இலையையும் மீட்பது குறித்து தொடர்ந்து மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், அறங்கூற்றுமன்றம் உதவியுடன் விரைவில் அதை மீட்போம் என்றும் தெரிவித்து உள்ளார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் இதே போல சிக்கல் எழுந்த போது, ஜெயலலிதா தனியாக வேறு சின்னத்தில் போட்டியிட்டு அதிமுக கட்சியையும், ஆட்சியையும் மீட்டெடுத்தார். அதுபோன்ற நிலையே தற்போது எங்களுக்கும் ஏற்பட்டு உள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு நாங்களும் அதேபோல கட்சியையும் ஆட்சியையும் மீட்டெடுப்போம்.

அதிமுகவை துரோகிகளிடம் இருந்து கைப்பற்ற மக்கள் மன்றத்தையும் அறங்கூற்றுமன்றத்தையும், நாடுவோம் என்று தினகரன் உறுதியாக தெரிவித்து உள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,670

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.