Show all

எச்.ராஜாவிற்கு குவியும் கண்டனங்கள்

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கவிஞர் வைரமுத்துவை தரம் தாழ்ந்த சொற்களால் இழிவுபடுத்திய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளனர். எச். ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சட்டமன்றஉறுப்பினர், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் சட்டமன்றஉறுப்பினர், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சட்டமன்றஉறுப்பினர், ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் : “தமிழை ஆண்டாள் என்கிற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கட்டுரையை முன்வைத்து பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா என்பவர் தரம் தாழ்ந்த சொற்களால் அவரை இழிவுப்படுத்தியுள்ளார்.

அது மட்டுமின்றி சம்மந்தமே இல்லாமல், இத்துடன் நபிகள் நாயகத்தையும், அவர்களின் மனைவியரையும் இழிவுப்படுத்தியும், பொது அமைதியும் கெடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

கவிஞர் வைரமுத்து இது குறித்து தன்னிலை விளக்கம் கொடுத்துள்ள நிலையில், அவரை நெருக்கடிகளுக்கு ஆளாக்கி தொடர்ந்து பாஜகவினர் விமர்சிப்பதை ஏற்றக்கொள்ள முடியாது. வைரமுத்து தமிழ் சமூகத்தின் முகவரியில் ஒருவர் என்பதை மறந்துவிடக் கூடாது.

எச்.ராஜா தொடர்ந்து திராவிட இயக்கத்தவர்களையும், தமிழ் உணர்வாளர்களையும், மத சிறுபான்மையினர்களையும், இடதுசாரி ஆதரவாளர்களையும் தரம் தாழ்ந்து பேசி வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இதை பாஜக தலைமை அங்கீகரிக்கிறதா ! என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.

தமிழ் இனத்திற்கும், தமிழுக்கும் எந்த வித தொடர்புமற்ற எச்.ராஜா தமிழ் மண்ணில் சமூக அமைதியை குலைப்பதை தமிழக சமூகம் வேடிக்கை பார்க்க கூடாது..

தனது கேவலமான கருத்துக்கு எச்.ராஜா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வைரமுத்து மீதான தரம் தாழ்ந்த விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்றஉறுப்பினர்கள் எச். ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தலைவர்களை, இயக்கங்களை, சாதி மதவெறியை தூண்டும் விதத்தில் பேசி வரும் எச்.ராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கவிஞர் வைரமுத்து ஒரு நாளேட்டில் ஆண்டாளின் பாடல்கள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரின் கருத்து ஒன்றை மேற்கோள் காட்டியிருந்தார். ஆனால் அந்தக் கருத்தை அவர் வழிமொழிவதாக அக்கட்டுரையில் எங்கும் குறிப்பிடவில்லை. அந்த கட்டுரையைச் சாக்காக வைத்துக்கொண்டு ஆண்டாளை அவதூறு செய்துவிட்டார் என கவிஞர் வைரமுத்துவின் மீது எச்.ராஜா பழிபோட்டுப் அநாகரிகமாக பேசிவருகிறார்.

எச்.ராஜாவின் பேச்சு சாதி - மதவெறியை கொண்டதாகவும் வன்முறையைத் தூண்டும் விதத்திலும் பொது அமைதியைக் குலைக்கும் விதத்திலும் உள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்கெனவே தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசிப் பதற்றத்தை உருவாக்கினார். பின்னர் இடதுசாரி இயக்கங்களை அவதூறு செய்தார். நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தகராறு செய்தார்.

தற்போது கவிஞர் வைரமுத்துவும், அவரது கட்டுரையை வெளியிட்ட நாளேடும் வருத்தம் தெரிவித்த பின்னரும் அநாகரிகமான வார்த்தைகளில் அவதூறு செய்துள்ளார். என்னையும் எமது கட்சியையும் இதே போல அவர் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்ததையும் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதையும் நாடறியும்.

எச்.ராஜா தந்தை பெரியாரை இழிவுபடுத்தியபோது மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை. இடதுசாரிகளை இழிவு செய்தபோது ஏனையோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விடுதலை சிறுத்தைகளை வம்புக்கு இழுத்தபோது ஓரிருவரைத் தவிர மற்ற கட்சிகளின் தலைவர்கள் மவுனம் காத்தனர். அரசும் வேடிக்கை பார்த்தது. அதனால் தான் மேலும் மேலும் வன்முறையைத் தூண்டும் விதத்தில் அவர் பேசிவருகிறார்.

எச்.ராஜாவின் பேச்சு எப்படியாவது தமிழ்நாட்டில் கலவரத்தை மூட்டிவிட வேண்டும் என்ற அவரது தீய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இத்தகைய வெறுப்புப் பேச்சையும் பயங்கரவாதச் செயலாகவே கருத வேண்டும் எனவே தொடர்ந்து சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசி வரும் எச்.ராஜாவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.”

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

‘தமிழை ஆண்டாள் என்ற கவிஞர் வைரமுத்துவின் கட்டுரையை முன்வைத்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, வைரமுத்தையும், கம்யூனிஸ்ட்டுகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளையும், பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களையும் அநாகரீகமான முறையில் அவதூறு செய்ததோடு வன்முறையைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பாஜக தமிழகத்தில் வழக்கமாக நடத்தும் இருக்கை திருவிழா ஒன்றில் பேசியிருக்கிறார்.

மிகக் கடுமையான முறையில் தனிநபர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலான. எச்.ராஜாவின் பேச்சை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இதற்கு முன்னரும் எச்.ராஜா இதுபோன்று சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கிற, சமூகப் பதட்டத்தை உருவாக்குகிற பல பேச்சுக்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார். அவரது பேச்சு மாற்றுக் கருத்துள்ள படைப்புகள், பேச்சுக்கள் ஆகியவற்றை முன்வைப்போருக்கு எதிரான நேரடியான மிரட்டலாகவே அமைந்திருக்கிறது.

மாற்றுக் கருத்துகளை ஆரோக்கியமாக விவாதிப்பதற்கு பதிலாக கொலைவெறியைத் தூண்டும் வகையில் அவர் தொடர்ச்சியாக பேசி வருவதை திட்டமிட்ட முறையில் தமிழகத்தில் சாதி, மத மோதலை உருவாக்குவதற்கு வழிவகுப்பதாக உள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன், நடிகர் விஜய், இப்போது கவிஞர் வைரமுத்து என்று அவரது வன்முறை பேச்சும், கொலைவெறி மிரட்டல்களும் அத்துமீறி தொடர்வது இதை திட்டமிட்டே அவர் செய்து வருகிறார் என்பதன் வெளிப்பாடே ஆகும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு தனிநபர்களுக்கு இடையே நடந்த மோதலை இரண்டு சமூகங்களுக்கு இடையிலான மோதல் போன்று சித்தரிக்க அவர் முயற்சித்தார். இதேபோன்று பாஜகவைச் சார்ந்த கல்யாணராமனும் தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். கவிஞர் வைரமுத்துவை அலைபேசியில் அழைத்து அருவருக்கத்தக்க முறையில் மிரட்டியுள்ளார். எனவே, அவர்களது இத்தகைய வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களை கண்டிப்பதோடு, தமிழக அரசு உரிய முறையில் வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,666

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.