Show all

இறுதி சடங்கின்போது சவப்பெட்டியில் இருந்தவர், உயிருடன் எழுந்த உண்மைச் சம்பவம்! நடந்தது நம்ம சேலத்தில்

10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சேலம் பெரமனூர் நாராயணப்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் அகவை 55. இவர் வீட்டில் வைத்து இட்லி, புரோட்டா, தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சேலம்-பெங்களூரு சாலையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரகம் செயல் இழந்துவிட்டதாகவும், ரூ. 6 லட்சம் செலவாகும் என்றும் கூறினர். அதற்கு சம்மதித்த உறவினர்கள் சிகிச்சை அளிக்குமாறு கூறினர். உடனே மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர்.

கடந்த ஒரு வாரமாக உறவினர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதற்கிடையே அவர் பேச்சு மூச்சற்ற நிலையில் இருந்ததால் தனியாக இருப்பதால் இந்த நிலைக்கு வந்ததாகவும் உறவினர்களுடன் பேசினால் சகஜ நிலைக்கு திரும்புவார் என்றும் கூறிய மருத்துவர்கள் தனி அறைக்கு அவரை மாற்றினர்.

அப்போது உடலில் பொருத்தப்பட்டிருந்த உயிர்வளி குழாய்கள் நீக்கப்பட்டதால் கடந்த திங்கட்கிழமை அன்று கோமா நிலைக்கு சென்றார். இதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் மருத்துவர்களிடம் கேட்டபோது கிறிஸ்டோபரின் மூளைக்கு ரத்தம் மற்றும் உயிர்வளி செல்லாததால் அவர் மூளைச் சாவு அடைந்து விட்டதாகவும் இனி உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை, உறவினர்களுக்கு சொல்லி இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றும் கூறினர். 

மேலும் 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மருத்துவமனைக்கு கட்டிய நிலையில் மீதம் உள்ள ரூபாயையும் மருத்துவர்கள் கேட்டனர். ஆனால் அதை அவர்கள் கொடுக்கவில்லை.

இதையடுத்து உறவினர்களும் கிறிஸ்டோபரின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த குளிர்பதன சவப்பெட்டியில் வைத்துக்கொண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.

அப்போது திடீரென்று கிறிஸ்டோபருக்கு இருமல் எடுத்தது. தொடர்ந்து அவர் எழுந்திருக்க முயன்றார். இதைப்பார்த்த உறவினர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இதைப்பார்த்து துக்கம் விசாரிக்க வந்த பொதுமக்கள் தாங்கள் காண்பது கனவா? அல்லது நனவா? என அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மேலும் அவர் உயிருடன் இருப்பதை அறிந்த உறவினர்கள் உடனே அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்ததாக கூறினார்களே தற்போது எப்படி உள்ளது? என்று உறவினர்கள் கேட்டனர். அப்போது மூளை சரியாக இயங்கி வருகிறது. அதில் எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

அவர் உறவினர்களிடம் மெலிந்த குரலில் பேசி வருகிறார். உறவினர்கள் அவ்வப்போது அவரை சந்தித்து தேற்றி வருகிறார்கள்.

இந்த சம்பவம் கிறிஸ்டோபரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,706 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.