Show all

தமிழர் தேச பற்றோடு போட்டியிட இந்தியாவில் யாருக்கும் தகுதியில்லை: ஸ்டாலின்

நடுவண் அரசில் உண்மையான கூட்டாட்சியை நிறுவவும், மாநிலங்களில் சுயாட்சி நிர்வாகத்தை உருவாக்கவும் மக்களாட்சியைப் பாதுகாக்கவும் அனைத்து மக்கள் இயக்கச் சக்திகளை ஒருங்கிணைக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது.

மாநாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். கேரள முதல்வர் பிரணாய் விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஸ்டாலின் பேசியதாவது:

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி, என்ற தத்துவத்தை முதலில் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றாக அறிவித்தது திராவிட முன்னேற்றக் கழகம். சட்டமன்ற ஜனநாயகத்தின் குரல்வளை ஒட்டுமொத்தமாக அறுக்கப்பட்டு, பச்சைப் படுகொலை நடைபெறுகிற நேரத்தில், மாநில சுயாட்சி தேவைப்படுகிறது. அடிமைகளால் ஆளப்படும் மாநில அரசை மத்தியிலே ஆட்சியில் இருப்பவர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதை வாக்களித்த மக்கள் வேதனையுடனும் விரக்தியுடனும் ஆத்திரத்துடனும் ஆவேசத்துடனும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக 48 ஆண்டுகள் கழித்து, நாம் மீண்டும் மாநில சுயாட்சி மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றால், மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து முதல்வர்கள் நிலைமை சென்ற 2014 பாராளுமன்ற தேர்தலை சற்று திரும்பிப் பார்த்தால், ‘கூட்டுறவு கூட்டாட்சிஎன்ற தத்துவத்தை முன்னிறுத்தி வாக்காளர்களைச் சந்தித்தது பா.ஜ.க. அது பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த நேரம். 2014-ல் அப்படியொரு முழக்கத்தை முன் வைத்த நரேந்திரமோடி நாட்டின் பிரதமரானார். அவர் ‘கூட்டுறவு கூட்டாட்சியைமறந்து மாநிலத்தில் உள்ள முதலமைச்சர்கள் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். நான் ஏதோ எதிர்கட்சிகளின் முதலமைச்சர்களைப் பற்றி மட்டும் கூறவில்லை. இன்றைக்கு நாட்டில் பா.ஜ.க.வின் முதலமைச்சர்களுக்கும் அதுதான் நிலைமை. பா.ஜ.க.வின் கூட்டணியில் இருக்கும் முதலமைச்சர்களுக்கும் அதுதான் நிலைமை.

மாநில அரசு எதற்கு? மாநிலங்களின் உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்படுகிறது என்று சற்று சிந்தித்துப் பார்த்தால் கல்வி மாநிலங்களின் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு நெருக்கடி நிலையின் போது எடுத்துச் செல்லப்பட்டது. ஆனாலும் மாநில கல்வி முறையில் நடுவண் அரசு பெருமளவில் தலையிடாமலேயே இருந்தது. ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, இன்றைக்கு நீட் தேர்வு மூலம் மாநிலங்களுக்குள் நுழைந்து மருத்துவக் கல்வி அதிகாரத்தை பறித்துக் கொள்கிறது நடுவண் அரசு. மாநிலத்தில் ஒருவர் மருத்துவராக, மாவட்ட அறங்கூற்றுவராக, நடுவண் அரசே தகுதி நிர்ணயம் செய்யும் என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு எதற்கு? மாநில அரசுகளை கிராமப் பஞ்சாயத்துகளைப் போல் மாற்றும், கூட்டாட்சி விரோத போக்கில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஆர்வம் காட்டுவது ஏன்?

மாநிலத்திற்கு அதிகாரம் கேட்பதோ, மாநிலத்திற்கு உரிமை கேட்பதோ நாட்டின் மீது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அக்கறை இல்லை என்று அர்த்தம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் மாநில சுயாட்சி தீர்மானத்தின் மீது பேசிய தலைவர் கருணாநிதி உறுதியாக கூறியது போல், யாருடைய தேச பக்திக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் தேசபக்தி எள்ளளவும்- இம்மியளவும் குறைந்தது இல்லை.

ஏன் தமிழர்களுக்கு உள்ள தேச பக்தி இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தில் உள்ளவர்களுக்கும் எள் முனையளவும் குறைந்தது அல்ல. உரிமைக்கு குரல் கொடுப்போம் இன்றைக்கு தமிழகத்தில், கமிஷனும், காவியும் கைகோர்த்து, பெரும்பான்மை இழந்த அரசை நீடிக்க வைத்து, இன்றைக்கு மாநிலத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு பறித்துக் கொண்டிருக்கிறது. மாநில உரிமைகளை பொறுத்தவரையில், தலைவர் கருணாநிதியின்,

உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.