Show all

விவசாயி அழகர் தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கும் செய்தி வேதனையளிக்கிறது

அரியலூர் அருகே கடனில் வாங்கிய டிராக்டரை தனியார் நிதி நிறுவனம் ஜப்தி செய்ததால் விரக்தியில் இருந்த விவசாயி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அரியலூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகேயுள்ள ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அழகர்(26). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர், தோகைமலையிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனம் (சோழமண்டலம் பைனான்ஸ்) மூலம் ரூ.7 லட்சத்தில் டிராக்டர் வாங்கியிருந்தார்.

 

இதில் அவர் ரூ.5 லட்சம் வரை கடனை அடைத்துள்ளார். மீதி தொகையான ரூ.2 லட்சத்தை கட்டுமாறு நிதி நிறுவனம் பல முறை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. ஆனால் அவர் தவணைத்தொகையை சரிவர கட்டாதினால் கடந்த 10 ஆம் தேதி வி.கைகாட்டிக்கு வந்த நிதி நிறுவன ஊழியர்கள் அங்கு நின்று கொண்டிருந்த அழகரை தரக்குறைவாக திட்டியும் பின்னர் அவரை தாக்கிவிட்டு டிராக்டரை ஜப்தி செய்துள்ளனர்.

 

இதனால் விரக்தியில் இருந்த அழகர் அன்று இரவு விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு கீழப்பழுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று வௌ;ளிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து கயர்லபாத் காவல்துறையினர் இன்று சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

இரு தினங்களுக்கு முன் தஞ்சாவூரில் விவசாயி பாலன் என்பவர், வாங்கிய கடனைச் செலுத்த தவறியதால் நிதி நிறுவனத்தினரும், காவல்துறை அதிகாரிகளும் கைகோர்த்துக் கொண்டு அவரை அடித்து இழுத்து சென்றனர். அந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

தஞ்சையில் விவசாயி பாலன் கடுமையாக தாக்கப்பட்ட ஈரம் காய்வதற்கு முன்பே விவசாயி அழகர் தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.