Show all

அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேட்டில் தமிழர் வீர விளையாட்டான ஏறுதழுவுதல் நளை முதல் தொடக்கம்

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாளை அவனியாபுரத்தில் தமிழர் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், ஏராளமான இளைஞர்கள் மாடுபிடிக்க பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஏறுதழுவுதல் உலகப்பிரசித்தி பெற்றவை. இங்கு ஏறுதழுவுதல் நடத்துவதற்காக கடந்த ஒரு கிழமையாக முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர். அவனியாபுரத்தில் நாளையும், பாலமேட்டில் நாளை மறுநாளும், அலங்காநல்லூரில் செவ்வாய் அன்றும் ஜல்லிக்கட்டு ஏறுதழுவுதல் நடைபெறுகிறது.

அவனியாபுரத்தில் 675 வீரர்களுக்கும், பாலமேட்டில் 1,188 வீரர்களுக்கும் பதிவுஎண்கள் வழங்கப்பட்டுள்ளன. அலங்காநல்லூரில் நடக்கும் ஏறுதழுவுதல் விளையாட்டில் பங்கேற்க 1241 வீரர்களுக்கு பதிவு எண்கள் வழங்கப்பட்டன. இதேபோல் அவனியாபுரத்தில் 954 காளைகளும், பாலமேட்டில் 1000 காளைகளும் பங்கேற்க உள்ளன. இன்று அலங்காநல்லூரில் காளைகளின் பதிவு நடைபெறுகிறது.

அவனியாபுரத்தில் நாளை காலை 8 மணிக்கு ஏறுதழுவுதல் போட்டிகள் தொடங்குகிறது. இதற்காக குருநாதசுவாமி கோவில் அருகில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் போட்டியை பார்ப்பதற்காக அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் சாலையின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவனியாபுரம் ஏறுதழுவுதல் விளையாட்டில் வெற்றிபெறும் வீரர்களுக்கு தங்க காசு, தங்க சங்கிலி, நிலைபேழை, கட்டில், மிதிவண்டி, பாத்திரங்கள் மற்றும் பரிசுகளை வழங்க விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஏறுதழுவுதல் நடைபெறும் இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு மாடுபிடி வீரர்கள், காளைகள், பொதுமக்கள் எந்த தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,666

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.