Show all

அவசர சட்டம் அறிவிப்புக்கு பின் மெரினாவின் காட்சிகள்!

     சல்லிக்கட்டு என்றவுடன் காளை மாடு நினைவுக்கு வந்தது போன கிழமைவரை. இப்போதெல்லாம் மெரினாவில் கூடியிருக்கும் கூட்டம்தான் நினைவில் வரும் என்று சொல்லும் அளவுக்கு மெரினா போராட்டம் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டது.

     சல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்க வேண்டும். பீட்டா அமைப்பைத் தடை செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் போராடி வருகிறார்கள். அதேபோல சென்னை மெரினாவில் இந்த போராட்டம் தொடர்ந்து 5வது நாளாக  தொடர்ந்து வருகிறது.

     ஓரிரு நாட்களில் போராடுபவர்கள் ஓய்ந்துவிடுவார்கள் என கணித்த பலரை வியப்பில் ஆழ்த்தும் விதத்தில் ஒவ்வொரு நாளும் போராடும் மக்களின்  உற்சாகத்தின் அளவு அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது.

     இந்தப் போராட்டக் குணமே தமிழக முதல்வரை டெல்லிக்குச் செல்ல வைத்து, சல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற வைக்கும் முயற்சிகளைத் துரிதப் படுத்தியது. அவசர சட்டம் அமலுக்கு வந்ததையும் இன்று காலை அலங்காநல்லூரில் சல்லிக்கட்டு நடத்தவிருப்பதாக அரசு அறிவித்தது.  இதையெடுத்து, இளைஞர்கள் போராட்டத்தை முடித்துக்கொள்வார்கள் எனச் சிலர் நினைத்தனர். ஆனால் நடந்ததோ அதற்கு நேர் எதிராக இருந்தது. முந்தைய நாள் கூட்டத்தை விட அதிகளவில் மக்கள் வந்துகொண்டே இருந்தனர்.

சனி மற்றும் ஞாயிறு என்பதால் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை நாள். மனதளவில் போராட்டத்திற்கு ஆதரவளித்த அவர்களும் மெரினாவை நோக்கி படையெடுத்தனர். தனியாக வராமல் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு குடும்பம் குடும்பமாக வந்தார்கள். இதனால் கடற்கரை சாலையில் மனித தலைகள் இல்லாத இடமே இல்லை எனும் நிலையானது. ஆனபோதும் போக்குவரத்தை இளைஞர்கள் ஒழுங்குச் செய்வதில் கொஞ்சமும் சுணக்கம் காட்டவில்லை. ஆம்புலென்ஸ் சத்தம் கேட்ட அடுத்த நொடியில் பரபரப்பாகி ஒரு நிமிடமும் தேங்கிவிடாமல் செல்ல வழியைத் தயார் செய்துகொடுத்தனர்.

     போராட்டம் முடிவடையாமல் தொடர்வதற்கு என்ன காரணம் எனப் போராடிக் கொண்டிருப்பவர்களிடம் கேட்டபோது அவர்கள் சொன்ன  முதன்மையான மூன்று காரணங்கள் இவை:

     1. எங்களின் போராட்டத்தை எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என அவசரக் கோலத்தில் ஒரு நடவடிக்கையாக இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இது ஏற்கத் தக்கதல்ல.

     2. சல்லிக்கட்டுப் பிரச்னையை முறையாக தீர்க்க முயற்சிக்காமல் இன்னும் சில நாட்களில் வர இருக்கிற குடியரசு நாளினைக் கொண்டாட இந்தப் போராட்டம் இடைஞ்சலாக ஆகி விடுமோ என, அவகாசமே கொடுக்காமல் அவசர அவசரமாக சல்லிக்கட்டை ஏற்பாடு செய்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை பெயரளவில் நடத்திவிட்டு, திங்கள் கிழமை தடை ஆணை வாங்கி விடுவார்கள். இப்படி நீதிமன்றத்தின் மீது பலிபோட்டுவிட்டு தப்பிக்க பார்ப்பார்கள். இதற்கு முன்னர் நடந்த பல முன்னுதாரண நிகழ்வுகளே சாட்சி. எனவே நாங்கள் எங்கள் முடிவில் உறுதியாக உள்ளோம்.

     3. இந்தச் சட்டத் திருத்தம் இப்போது மட்டுமே சல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கும். அடுத்த ஆண்டு மீண்டும் இதே போல போராட வேண்டும். போராட நாங்கள் தயார்.  ஆனால், எங்களின் நேரத்தை ஏன் விரயம் செய்ய வேண்டும்.  சல்லிக்கட்டுக்கு நிரந்தமான அனுமதி சட்டம் கிடைத்துவிட்டால், அந்த நேரத்தில் வேறு போராட்டம் நடத்தலாமே.

     தமிழக அரசும் சரி தமிழக ஊடகங்களும் சரி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் கருத்தாக இருக்கின்றனவே யன்றி நிரந்தர தீர்வை கருத்தில் கொள்வதாகத் தெரியவில்லை.

     சல்லிக்கட்டுக்கு ஏற்பட்டிருக்கிற தடையைக் களைய வேண்டிய நிரந்தர அரசாணைக்கு முயல்வதுதாம் தமிழக அரசுக்கான கடமை. சல்லிக்கட்டை நடத்துவதை எப்போதும் போல மக்கள் பார்த்துக் கொள்வார்கள். சல்லிக்கட்டை அவசரகதியில் எல்லாம் நடத்திவிட முடியாது. மாடுபிடி வீரர்களுக்கும் மாடுகளுக்கும் சில ஆயத்த கடமைகள் உண்டு.

     ஊடகங்கள் இந்தப் போரட்டத்தின் மூலமாக நடுவண் அரசுக்கு அதன் கடமைகளை நெறிப்படுத்த வேண்டிய முயற்சிகளில் ஈடுபடாமல், 22 மணி நேரத்திற்கு முன்னதாக மோடி இட்ட பதிவுக்கு சப்பைக் கட்டு கட்டி மீண்டும் மீண்டும் புதிய பதிவு போல வெளியிட்டு போராட்டக் காரர்களை ஏமாற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

     இதனால், இளைஞர்களின் கேள்விகளும் போராடும் குணமும் நாளுக்குநாள் மெருகேறி வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.