Show all

நாய்க் குட்டியை அரவணைத்து உணவுட்டிய அன்புள்ளம் மிக்க குரங்கு

இன்று 28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மனிதர்கள் மட்டும் தான் அன்புணர்வு உள்ளவர்களா? அதற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உணர்த்தும் வகையில் சாலையில் சுற்றிய நாய்குட்டியை ஒரு குரங்கு அரவணைத்து உணவு ஊட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவையை அடுத்த பெரியநாயக்கன் பாளையத்தில் நடுவண் அரசு தொலைத் தொடர்பு அலுவலகம் எதிரே ஏராளமான புளிய மரங்கள் உள்ளன. இந்த மரங்களுக்கு அவ்வப்போது மலைபகுதிகளில் இருந்து குரங்குகள் வந்து செல்லும். அதே போல் இன்றும் குரங்குகள் அதிகளவில் வந்து மரக்கிளையில் குரங்குகள் விளையாடி கொண்டு இருந்தது.

அந்த நேரத்தில் புளியமரத்தின் கீழ் ஒரு நாய்குட்டி குளிரில் நடுங்கியப்படி தவித்து கொண்டு இருந்தது. இதை நீண்ட நேரமாக பார்த்த ஒரு குரங்கு திடீரென மரத்தில் இருந்து வேகமாக கீழே இறங்கியது. பின்னர் குட்டி நாயை தூக்கி கொண்டு அதே வேகத்தில் மரத்துக்கு சென்றது. பின்னர் அந்த குட்டி நாயை தனது மடியில் வைத்து தடவி கொடுத்தது. மேலும் நாயின் தலை மற்றும் உடலில் தட்டி கொடுத்து அரவணைத்தது.

இதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர். பின்னர் அவர்கள் ரொட்டி வாங்கி கீழே போட்டனர். அப்போது நாய்குட்டியை, பத்திரமாக வைத்து விட்டு குரங்கு கீழே இறங்கி ரொட்டியை எடுத்து சென்றது. தொடர்ந்து நாய் குட்டியை பத்திரமாக தூக்கி கொண்டு மரத்தின் உச்சிக்கு சென்றது. அங்கு நாயை தனது மடியில் வைத்து குரங்கு ரொட்டி ஊட்டியது. இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பலரும் செல்பேசியில் படம் பிடித்தனர். தொடர்ந்து நாய்குட்டி குரங்கின் அரவணைப்பிலேயே இருந்துவருகிறது. குரங்கின் இந்த தாய்மை குணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்தக் காட்சியை காண அங்கு அதிகளவில் கூட்டம் கூடியது. ஆனாலும் எதைப்பற்றியுமே கண்டு கொள்ளாமல் நாயை அரவணைப்பதில் மட்டுமே குறியாக இருந்தது அந்த குரங்கு!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.