Show all

தேசியவாதியாக பீற்றிக் கொள்கிறவர்களுக்கு சம்மட்டி அடி! மக்களுக்கு அதிகாரம் கொடுப்பதன் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்: ராகுல்

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'மக்களுக்கு அதிகாரம் கொடுப்பதன் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும். வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் பாலின சமத்துவம் அதிகமாக உள்ளது.' 

தேசியவாதியாக பீற்றிக் கொள்கிறவர்களுக்கு சம்மட்டி அடியாக இந்த வைர வரிகள் ராகுல் காந்தி அவர்களால் தெரிவிக்கப் பட்டது.

மக்களுக்கு அதிகாரம் கொடுப்பதன் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும். தொழில் முதலீடுகளை காஷ்மீரில் அதிகரிக்கச் செய்தால் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த முடியும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இந்தக் கோணத்தில் அறிஞர் பெருமக்களைத் தவிர- அரசியல்வாதிகளும், இந்தியாவில் தேசியவாதியாகப் பீற்றிக் கொள்கிற எவரும் பேசியதில்லை. 

மாற்றம் உருவாக்கிகள், என்ற தலைப்பில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் காந்தி ராகுல் பங்கேற்றார். அவருடன் கல்லூரியில் படிக்கும் பல்வேறு மாணவிகள் கலந்துரையாடினர். 

அப்போது, எத்தகைய தலைவர் வேண்டும் என மாணவிகளின் கருத்தை அறிய விரும்புகிறேன். சுலபமாக இல்லாமல் கடினமான கேள்விகளை கேளுங்கள் என ராகுல் காந்தி தனது உரையை தொடங்கினார். அப்போது எழுந்த ஒரு மாணவி ராகுலை ஐயா என்று கூறி வாழ்த்திய போது, ஐயா வேண்டாம் ராகுல் என்றே கூறுங்கள் என்று தெரிவித்தார். அப்போது அரங்கம் கைத்தட்டலால் அதிர்ந்தது. 

தொடர்ந்து மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய ராகுல், இந்தியாவில் கல்வி மற்றும ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். கல்வி தனியார் மயமாக மாற்றப்படுவதில் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்விக்கான வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்கும். 

பாலின சமத்துவத்தை வட இந்தியாவை விட தென்னிந்தியா அதிகம் முன்னெடுத்து வருகிறது. பெண்களை இரண்டாம் நிலை என கருத வேண்டாம். சமநிலை என்றே கருத வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நடுவண் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும். 

இந்திய மக்களின் கோடிக்கனக்கான பணத்தை தொழிலதிபதிகள் கொள்ளையடித்துள்ளனர். தொழிலபதிபர் நீரவ் மோடிக்கு நடுவண் அரசு ரூ. 35 ஆயிரம் கோடி பணத்தை தந்தது. அவர் எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கினர். அவர் இந்தியாவிலிருந்து தப்பியோடியதை குறித்து பேசும் போது, நீரவ் மோடி என்பதற்கு பதிலாக நரேந்திர மோடி என்று ராகுல் காந்தி கூறினார். அப்போது அரங்கத்தில் சிரிப்பலைகள் எழுந்தன. 

மேலும் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது சரக்கு-சேவை வரி குறைந்தளவில் நிர்ணயம் செய்யப்படும். சரக்கு-சேவை வரியால் சிறு மற்றும் நடுத்தர குடும்பங்கள் பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்துள்ளன. சீனா தொடர்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. அதுபோல இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். 

ராபர்ட் வதேரா குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, யாரையும் எவரையும் விசாரிக்கும் உரிமை அரசுக்கு உண்டு. ஆனால் குறிப்பிட்ட சிலரை மட்டும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவருவது ஏன் என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, ரபேல் விவகாரத்தில் நரேந்திர மோடியை விசாரிக்க வேண்டும். அனில் அம்பானி ஒருபோதும் விமானங்களை தயாரித்தது கிடையாது. எதனடிப்படையில் எச்.ஏ.எல் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு அனில் அம்பானிக்கு தர வேண்டும் என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். 

தொடர்ந்து எழுந்த மாணவி ஒருவர் ராகுல் காந்திக்கு 'வணக்கம்' என்று தமிழில் வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு தமிழில் வணக்கம் கூறினார் ராகுல் காந்தி. இதற்கு மாணவிகள் அரவாரம் செய்தனர். 

தலைமை அமைச்சரைத் தேர்வு செய்வதில் முதன்மைப்  பங்காற்றும் தென்னிந்தியாவுக்கு என்ன செய்வீர்கள்? என அம்மாணவி கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்து பேசிய அவர், இன்று நடுவண் அரசில் இருப்பவர்கள் வட இந்தியாவை மையப்படுத்தி சிந்திக்கிறார்கள். என்னை பொறுத்தவரை இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் முதன்மைத்துவம் அளிக்கப்பட வேண்டும். நடுவண் அரசில் தமிழகத்திற்கும் முதன்மைப் பங்கு இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய தடையாக இருப்பது ஊழல். அனைவரும் ஒற்றுமையாக நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும். வடக்கு தெற்கையும், தெற்கு வடக்கையும் போட்டியாக நினைக்காமல் இணைந்து முன்னேற வேண்டும் என்று ராகுல் பதிலளித்தார். 

தொடர்ந்து எழுந்த மாணவி, பயங்கரவாதத்தை ஒழிக்க காங்கிரஸ் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கேட்டார். அதற்கு பதில் தெரிவித்த ராகுல், மக்களுக்கு அதிகாரம் கொடுப்பதன் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும். தொழில் முதலீடுகளை காஷ்மீரில் அதிகரிக்கச் செய்தால் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த முடியும் என்றார். 

இறுதியாக எழுந்த மாணவி ஒருவர், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதற்காக தலைமை அமைச்சர் மோடியை கட்டிப்பிடித்தீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு சில நொடிகள் அமைதிக்காத்த ராகுல், தொடர்ந்து பேசினார். அன்பின் மூலம் கோபத்தை குறைக்க முடியும். என் மீது அவருக்கு அன்பு இல்லாவிட்டாலும் அவர் மீது எனக்கு அன்பு உள்ளது. அரசியல் எனக்கு கற்றுக் கொடுத்ததால் அவர் மீது அன்பு ஏற்பட்டது. அன்பால் ஆத்திரத்தை அடக்குவது எனது குணம் மட்டுமல்ல, அது நாட்டின் குணம் என்று ராகுல் தெரிவித்த போது அவருக்கு மாணவிகள் கைத்தட்டல்களோடு வாழ்த்துக்களை கூறினர். 

மக்களிடம் இருந்து மட்டுமல்ல, மாநில அரசுகளிடம் இருந்து அதிகாரத்தைப் பிடுங்குவதுதான் பாஜகவின் தேசியத்திற்கான வேதாந்தம் என்கிற நிலையில், ராகுல் அவர்களின் இந்த சிந்தனைத் தெளிவு மிக்க பேச்சை மாணவிகள் கொண்டாடத் தவறவில்லை. இந்த செய்தி மக்களிடம் சென்று சேரும் போது தமிழக மக்களும் ராகுலைக்  கொண்டாடத் தயங்க மாட்டார்கள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,090.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.