Show all

மகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

மகளிர் 6-வது டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸில் நேற்று தொடங்கியது. இத்தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன, இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இத்தொடரின் தனது முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்துடன் மோதியது. இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா (9 ரன்), மந்தனா (2 ரன்) மற்றும் ஹேமலதா (15 ரன்) என அனைவரும் குறைவான ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். எனினும் அதன் பின்னர் வந்த ஜெமிமா ரோட்ரிக்சும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் சிறப்பாக விளையாடினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 59 ரன்களும், ஹர்மன்பிரீத் கவுர் 51 பந்துகளில் 103 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். இவர்கள் 4-வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. 20 ஓவர் உலக கோப்பையில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்ததே சிறந்த ஸ்கோராக இருந்தது.

இதையடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 160 ரன்களே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.