Show all

ஏமாற்ற! நயவஞ்சகமாக, கொஞ்சமாக கொடுத்துக் கொண்டிருக்கிற இழப்பீட்டை, இலவசம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்

24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்கார் படத்தில் முன்வைக்கப் படுகிற புரட்சிகரமான கருத்தாக 'இலவசம் வேண்டாம்' பார்க்கப் படுகிறது. புரட்சிகரமான கட்சி என்று தம்மை வெளிப்படுத்திக் கொள்கிற பல கட்சிகள் கூட 'இலவசம் வேண்டாம்' என்பதை புரட்சிகரமான கருத்து போல கொண்டாடுகின்றன. அதுவும் அவர்களுடைய கருத்து இலவசம் கொடுக்க வேண்டாம் என்பது கூட அல்ல. இலவசம் வாங்க வேண்டாம் என்பது.

செயலலிதா அவர்கள் மக்களுக்குக் கொடுக்கிற பொருளை இலவசம் என்று சொல்லி மக்களை இழிவு படுத்த விரும்பாமல்- விலையில்லா அரிசி, விலையில்லா மின் விசிறி என்றார்கள். ஆனால் அதுவும் கூட நிறைவான சொல் கிடையாது என்பதுதான் உண்மை.

அரசு என்பது எதற்காக? மக்கள் தொழில் செய்து வருமானம் ஈட்டி அரசுக்கு வருமானம் தருவது எதற்காக? 

மக்களுக்குப் பொதுவான கல்வி, மக்களுக்குப் பொதுவான ஏரி, குளம், அணைக்கட்டு, சாலை வசதி, போக்குவரத்து வசதி, மருத்துவம், கடனுதவி ஆகியவற்றை அவர்கள் தேவைக்கு ஏற்ப முழுமையாக உருவாக்கித் தருவதற்கே.

மேற்கண்ட வசதிகள்- குறிப்பாக கல்வி மற்றும் மருத்துவம் அனைவருக்கும் பொதுவாக இல்லை. தகுதி என்ற பெயரில் ஒருவகையான குலுக்கல் அடிப்படையில், அதாவது தகுதியானவர்கள் என்று தேர்ந்தெடுக்கப் படுகிறவர்கள் குலுக்கல் முறையில் பரிசு பெற்றவர்கள் என்பது போலத்தான் காணப்படுகிறது. 

அரசு எல்லோருக்கும் கட்டாயம் மேற்கண்ட வசதிகள் அனைத்தும் தந்தாக வேண்டும். அந்த வசதிகள் காலத்தே கிடைக்கப் பெறாதவர்கள்தான் ஏழைகள். 

ஆக ஏழைகள் அவர்களாக உருவாகுவதில்லை. அனைத்து மக்களுக்கும் பொதுவானதான அரசால் கல்வி, கடனுதவி, மருத்துவம் மறுக்கப் பட்டவர்கள் ஏழைகள். 

அவர்களை வேறுவகையாக திருப்தி படுத்துவதற்காக, அவர்கள் ஏழைகளாக இருப்பதற்கான காரணம் அவர்களே என்பது போல கூனி குறுக வைத்து, இலவசம்- விலையில்;;லாப் பொருள்கள் என்றெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் அவைகள் இலவசங்களோ, விலையில்லாப் பொருள்களோ அல்ல. நயவஞ்சகமாக, கொஞ்சமாக தந்து கொண்டிருக்கின்ற இழப்பீடுகள். அவற்றை வாங்குகிற இடத்தில் இருக்கிற யாரும் வெட்கப் படத்தேவையே யில்லை. தனக்கான இந்த இழப்பீடு போதுமானதல்ல என்று போராடத் தகுதியானவர்களே.

இலவசங்களை மறுக்கிற அறிவாளித்தனங்களை புரிந்து கொள்வோம். ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகளின் இருப்பில் உள்ள ஒட்டு மொத்த தொகைகளையும், இந்திய மக்களின் எண்ணிக்கையால் வகுத்தால் வரும் தொகை ஒவ்வொரு இந்தியனுக்குமான உரிமைத் தொகையாகும். அந்தத் தொகைக்கு ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உரிய வசதிகளை கேட்டுப் பெற உரிமையுள்ளவர்கள் ஆவர். மோடி மட்டுமே உலகம் முழுக்க சுற்றுவதற்கான உரிமை படைத்தவர் அல்லர். ஒவ்வொரு குடிமகனுக்கும் அந்த உரிமை உண்டு.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,967. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.