Show all

சதுரங்க ஒலிம்பியாட் போட்டியையொட்டி தீபந்தம் ஏந்தி ஓட்டம்!

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய சதுரங்கக் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து சதுரங்க ஒலிம்பியாட் தீபந்தமேந்தும் ஓட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

25,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: நாற்பத்தி நான்காவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி சென்னைக்கு அருகிலுள்ள மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ளது.

இந்தச் சதுரங்கப் போட்டி எதிர்வரும் 12,ஆடி (ஜூலை 28) முதல் 25,ஆடி (ஆகஸ்ட் 10) வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், போட்டியையொட்டி பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய சதுரங்கக் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து சதுரங்க ஒலிம்பியாட் தீபந்தமேந்தும் ஓட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இனி ஒவ்வொரு முறையும் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதற்கு முன்னர் ஒலிம்பியாட் தீபந்தமேந்தும் ஓட்டம் நடைபெறும். இந்தத் தீபந்தமேந்திய ஓட்டம் சதுரங்கம் உருவான இந்தியாவில் இருந்து தொடங்கி போட்டி நடைபெறும் நகரத்தை அடைவதற்கு முன்பு அனைத்து கண்டங்களுக்கும் பயணிக்கும். இம்முறை நேரமின்மை காரணமாக தீபந்தமேந்தும் ஓட்டம் இந்தியாவில் மட்டும் நடைபெறும் எனவும், தீபந்தம் பயணிக்கும் பாதை மற்றும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை நடத்த இந்தியாவின் சதுரங்க விளையாட்டின் தலைநகரம் சென்னை அணியமாக இருக்கிறது என தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை உலக நிகழ்வுக்கு களமிறங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக ஸ்டாலின் கூறினார். உலகம் முழுவதும் உள்ள அனைத்து வீரர்கள் மற்றும் வீராங்களை சென்னை அன்புடன் வரவேற்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கீச்சுப் பதிவிட்டுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,273.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.