Show all

சனா விளையாட்டு! விளையாட்டாய் காசுபார்த்து வந்த அப்பாவை அரசியலில் இழுத்துவிட்டு அலைமோத விட்டுவிட்டார்

விளையாட்டில் விளையாட்டாய் காசுபார்த்து வந்த அப்பா கங்குலியை அரசியலில் இழுத்துவிட்டு அலைமோத விட்டுவிட்டார் அன்பு மகள் சனா. “தயவுசெய்து இந்த எல்லா சிக்கல்களிலிருந்தும் சனாவை ஒதுக்கி வைக்கவும். இந்தப் பதிவு உண்மையல்ல. அரசியலில் எதைப்பற்றியும் தெரிந்து கொள்ளும் அகவையை எட்டவில்லை சனா” என கங்குலி அலைமோதுகிறார்.

05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவர்களுக்கு ஆதரவாக நாடெங்கும் மாணவர்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என அனைத்தும் குடியுரிமை திருத்தச்  சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புகழாளர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

முன்னாள் மட்டைப்பந்து வீரரும், இந்நாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் மகள் சனா கங்குலி குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும்விதமாக படவரியில்  பதிவிட்டு அப்பாவை அறச்சிக்கலுக்கு ஆளாக்கியிருக்கிறார்.

படவரியில் அந்தப் பதிவை, சனா கங்குலி தன் நிலைப்பாடாக வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான, தி எண்ட் ஆப் இந்தியா குஷ்வந்த் சிங்கால் எழுதப்பட்ட புத்தகம். இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சில வரிகளான, “இன்று, நான் முஸ்லிம் அல்ல கிறிஸ்தவன் அல்ல என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளும் நபர்களே நீங்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள் என்பதை உணர வேண்டும். இவர்கள் ஏற்கெனவே இடதுசாரி வரலாற்றாசிரியர்களையும் மேற்கத்தியமயமாக்கப்பட்ட இளைஞர்களையும் குறிவைத்து வருகிறார்கள். நாளை இது உங்களின் மீதும் பாயும்.

உங்களை அடக்குமுறைக்குள் கொண்டு வருவார்கள். பெண்கள் அணியும் பாவாடை இப்படித்தான் இருக்க வேண்டும். இறைச்சி சாப்பிடக்கூடாது, மது அருந்துவது கூடாது, வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கக் கூடாது, ஆண்டாண்டு யாத்திரையாக கோயிலுக்குச் செல்லக் கூடாது, அவர்கள் கூறும் பற்பசையைத்தான் பயன்படுத்த வேண்டும், பொது இடங்களில் கை குலுக்குதல் அன்பை வெளிப்படுத்திக் கொள்ள முத்தம் கொடுப்பது இதற்கு பதிலாக நீங்கள் ஜெய் சிறிராம் என்று தான் முழங்க நேரிடும். ஒருவரும் இங்கு பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்தியாவை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள நீங்கள் இதை உணர வேண்டும்" என்று சனா குறிப்பிட்டிருந்ததாக திரைப்பிடிப்பு (ஸ்க்ரீன்ஷாட்) ஒன்று வெளியானது.

ஜாமியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான ஷாரூக் கான், வீரேந்திர சேவாக் உட்பட பல முதன்மைப் புகழாளர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்காத நிலையில், 18 அகவையே ஆகும் சனா கங்குலியின் எதிர்ப்பு முதன்மையான ஒன்றாக விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் சனா பெயரில் வெளியான இந்தப் பதிவு போலியானது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கீச்சில் பதிவிட்டுள்ள அவர், தயவுசெய்து இந்த எல்லா சிக்கல்களிலிருந்தும் சனாவை ஒதுக்கி வைக்கவும். இந்தப் பதிவு உண்மையல்ல. அரசியலில் எதைப்பற்றியும் தெரிந்து கொள்ளும் அகவையை சனா எட்டவில்லை என்று கங்குலி கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,372.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.