Show all

தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வங்காளதேசம்

வங்காள தேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டர்புரில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசத்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 46 ஓவர்களில் 162 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக பாப் டு பிளிஸ்சிஸ் 41 ரன்களும், பெஹர்டைன் 36 ரன்களும், கேப்டன் அம்லா 22 ரன்களும் எடுத்தனர். வங்காளதேச தரப்பில் முஸ்தாபிஜூர் ரஹ்மான், நசிர் ஹூசைன் தலா 3 விக்கெட்டுகளும், ருபெல் ஹூசைன் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.வங்காளதேசத்திற்கு எதிராக தென்ஆப்பிரிக்காவின் மோசமான ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2007–ம் ஆண்டு 184 ரன்களில் சுருண்டதே தென்ஆப்பிரிக்காவின் குறைந்த ஸ்கோராக இருந்தது.

தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 27.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்கா–வங்காளதேசம் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்டகாங்கில் நாளை மறுதினம் (புதன்கிழமை) நடக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.