Show all

குழம்பி குழம்பி குழப்பும் ஒன்றிய பாஜக அரசு! குறளிச்செலாவணிப்பாட்டில்

குறளிச்செலாவணியின் எதிர்காலத்தினை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, பலர் இந்தியாவில் குறளிச்செலாவணிகளில் வருமானத்தினைப் பார்த்திருக்கிறார்கள். அதனால் அதில் அரசுக்கு வருமானம் வருவதற்கான வாய்ப்பினை பார்க்கிறேன் என்று நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

25,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: நடப்பு ஆண்டில் பதிகை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வெளியான முதன்மை அறிவிப்புகளில் ஒன்று, குறளிச்செலாவணி (கிரிப்டோகரன்சி) மூலம் பெறப்படும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் என்று கூறியது தான்.

அப்படி வரிவிதிக்கப்பட்டால் குறளிச்செலாவணி முதலீடுகளை அரசு அதிகாரப்பாடாக அங்கீகரிக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்தது.

ஆனால் இதற்கும் ஒரு முட்டுகட்டையை போட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அண்மையில் ஒரு அறிக்கையில் குறளிச்செலாவணிகளுக்கு வரி விதித்தால், அது சட்டபாடானதாகிவிடுமா? என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதுவே ஒன்றிய பாஜக அரசு எந்தளவுக்கு குறளிச்செலாவணிகள் குறித்து யோசிக்கிறது என்பதை தெளிவாக சுட்டிக் காட்டியது. இதற்கிடையில் இன்று வெளியான அறிக்கை ஒன்றில் குறளிச்செலாவணிச் சொத்துகள் மூலம் அரசுக்கு வரி வருவாய் ஈட்டுவதற்காக சாத்தியக் கூறு இருப்பதாக கூறியுள்ளார்.

நிதிநிலை அறிக்கையில் அரசின் அறிவிப்பினால் குறளிச்செலாவணி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 30விழுக்காட்டு வரி செலுத்த வேண்டியிருக்கும். எனினும் அது சட்டப்பாடானது அல்ல, அதனைத் தடை செய்யவும் இல்லை என்று கூறப்பட்டது. மேலும் குறளிச்செலாவணிகளை முறைப்படுத்த சட்டமுன்வரைவு பதிகை செய்யப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரையில் அப்படி எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாறாக ஒன்றியக் கட்டுப்பாட்டு வங்கி மூலம் அதிகாரப்பாட்டு எண்ணிமச்செலாவணி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் இந்தியா குளோபல் போரம் குறளிச்செலாவணியின் எதிர்காலத்தினை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, பலர் இந்தியாவில் குறளிச்செலாவணிகளில் வருமானத்தினைப் பார்த்திருக்கிறார்கள். அதனால் அதில் அரசுக்கு வருமானம் வருவதற்கான வாய்ப்பினை பார்க்கிறேன் என்று நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

குறளிச்செலாவணிகளைச் சட்டப்பாடாக்குவது தொடர்பான கருத்தினை கூறிய நிதியமைச்சர், இது குறித்தான கலந்துரையாடல் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடல் முடிந்த பிறகு, சட்டப்பாடான யோசனைகளும் ஆலோசிக்கப்படும். அதன் பிறகு அரசு இதனை பற்றிய இறுதி முடிவினை எடுக்கலாம் என கூறியுள்ளார்.

ஒவ்வொரு குடிமகனின் குடுமியையும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, கார்ப்பரேட்டுகளுக்கு மலர்ப்பாதை அமைக்கிற கொள்கைத் திட்டம் உடையது ஒன்றிய ஆட்சியில் அமைந்துவிட்ட பாஜக. இந்த வகைக்கு, குடுமி சிக்காமல் தப்பித்துக் கொண்டு இருக்கும் இரண்டு துறைகளில் ஒன்று உடல்உழைப்பாளிகளின் வேளாண்துறை. மற்றொன்று உளஉழைப்பாளிகளின் இந்த குறளிச்செலாவணித்துறை. இரண்டு துறைகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது எப்படி? என்கிற யோசனையில் கடும்பாடாற்றிக் கொண்டிருக்கிறது, வேளாண் போராட்டங்கள் தந்த தோல்வியில் நொந்து போயுள்ள ஒன்றிய பாஜக அரசு. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,182.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.