Show all

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவருக்கு

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவரும், கொலம்பியா நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வருபவருமான ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசனின் பெயரைப் பரிந்துரைக்க அதிபர் ஒபாமா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

 அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆண்டனின் ஸ்கேலியா ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். இதையடுத்து, அந்தப் பதவிக்கு ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசனின் (48), பெயரைப் பரிந்துரைக்க ஒபாமா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த மட்டத்தில் இருக்கும் மாகாண சர்க்யூட் நீதிமன்ற நீதிபதிகளிலிருந்தே உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுவது வழக்கம்.

 இந்த முறையை ஒபாமா பின்பற்றினால் இந்தியாவில் பிறந்து, தமிழகத்தைப் பூர்விமாகக் கொண்டவரான ஸ்ரீநிவாசனின் பெயரும் இடம்பெறும்.

 முன்னதாக, மறைந்த நீதிபதி ஸ்கேலியாவுக்கு பிறகு அந்தப் பதவிக்கு அடுத்த நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்க வேண்டியது எனது கடமையாகும் என்று ஒபாமா தெரிவித்திருந்தார்.

 ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன், பிப்ரவரி 23 ஆம் தேதி 1967-ஆம் ஆண்டு சண்டீகரில் பிறந்தார். இவரது தந்தை திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஆவார். தாயார் சென்னையைச் சேர்ந்தவர். இவர்கள் கடந்த 1960-ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.

 அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற ஸ்ரீநிவாசன், வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு, கொலம்பியா மாகாண சர்க்யூட் நீதிமன்ற நீதிபதியாக இவரை ஒபாமா நியமித்தார்.

 கொலம்பியா நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டது அதுவே முதல் முறையாகும்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.