Show all

கொண்டாடுவதற்கானதன்று; புரிந்துகொள்வதற்கானது! தங்கம் அளவிற்கு உயர்த்திவிட்டு தகரம் அளவிற்கு குறைப்பது: பெட்ரோல்விலை

ஒட்டுமொத்த இந்தியாவின் அனைத்து அதிகாரங்களையும் ஒற்றைக் கட்சி பாஜகவிடம் தூக்கிக்கொடுத்த மக்களுக்கு கிடைத்தவை சுமைகள் மட்டுமே. முதலாவதாக ஐந்து மாநிலத்தில் வெற்றியை மற்ற கட்சிகளுக்கு பகிர்ந்ததிலிருந்து மக்கள் பெற்று வருவது ஆதயங்கள் மட்டுமே, இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஊடகங்களுந்தாம். 

20,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒட்டுமொத்த இந்தியாவின் அனைத்து அதிகாரங்களையும் ஒற்றைக் கட்சி பாஜகவிடம் தூக்கிக்கொடுத்த மக்களுக்கு கடந்த ஆறேழு ஆண்டுகளாக கிடைத்த இன்னல்கள் எல்லை அற்றவை. பணமதிப்பிழப்பு என்ற பெயரில் மக்களின் உடைமை பறிப்பு, சரக்கு சேவைவரி என்ற பெயரில் மாநில வரி வாங்கும் உரிமை பறிப்பு, நீட் என்ற பெயரில் மருத்துவக் கனவு பறிப்பு, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மக்களின் கல்வி பறிப்பு என்று இன்னல்களைப் பட்டியல் இட்டால், பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

கொரோனா பேரிடரை எதிர்த்து இந்தியாவில் மாநில ஆட்சிகளுக்கு முனையும் கட்சிகள் மட்டுமே போராடி வந்த நிலையில், ஒன்றிய பாஜக- ஒரு ஆணியும் பிடுங்காது கையைத்தட்டி கொரோனா விரட்டிட மக்களுக்கு ஆலோசனை சொல்லி வந்த நிலையில், ஐந்து மாநிலங்களில் அவர்களுக்கு மக்கள் தோல்வியைக் கொடுத்த போதுதாம், ஒரு கோடி கொரோனா தடுப்பூசி இந்திய மக்களுக்கு கிடைத்தது.

மாநில ஆட்சிகளுக்கு முனையும் கட்சிகளையே ஒன்றியத்திற்கும் பரிந்துரைத்து அதிகாரத்தை பல மாநிலக் கட்சிகளிடம் பகிர்ந்தளிக்க வேண்டும். அதிகாரத்தை ஒருபோதும் ஒன்றிய ஆட்சிக்கு முனையும் பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட எந்த ஒற்றைக் கட்சியிடமும் தூக்கிக் கொடுத்தால் அவர்கள் இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் போல நாட்டை கெடுத்து குட்டிச் சுவர் ஆக்குவார்கள் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு கடந்த ஆறேழு ஆண்டுகள் ஒன்றிய ஆட்சியில் பாஜகவிடம் நாம் கற்ற அனுபவம்.

அடுத்து வரவிருக்கிற சில பல மாநிலத் தேர்தல்களில் கிடைக்கப் போகிற தோல்வி அச்சத்தில்- நடுத்தர மக்களைப் பாடாய் படுத்தி வந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மிகச் சிறியதொரு தளர்வைக் கொடுத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்த நிலையில் வியாழக்கிழமை முதல் மக்கள் குறைக்கப்பட்ட புதிய விலையின் படி பெட்ரோல், டீசலை வாங்கி வருகின்றனர்.   

பெட்ரோல், டீசல் விலையில் ஒன்றிய அரசு கொடுத்த விலை தளர்வுகளை விடவும் இந்தியாவில் பல மாநிலங்களில் அதிகப்படியான விலை குறைப்பு செய்யப்பட்டு உள்ளது. 

இதனால் விரைவில் காய்கறி விலை மற்றும் உணவு பொருட்களின் விலைகளும் ஓரளவிற்கு குறைய வாய்ப்பு உள்ளது. 

தற்போதைய குறைப்பு நிலையில் பெட்ரோல் விலை சென்னை - 101.40 ரூபாய், டெல்லி - 103.97 ரூபாய், கொல்கத்தா - 104.67 ரூபாய், மும்பை - 109.98 ரூபாய், பெங்களூர் - 100.58 ரூபாய், ஹைதராபாத் - 108.20 ரூபாய், கோழிக்கோடு - 104.46 ரூபாய், போபால் - 107.23 ரூபாய், இந்தூர்- 112.59 ரூபாய் ஆகும். 

டீசல் விலை சென்னை - 91.43 ரூபாய், டெல்லி - 86.67 ரூபாய், கொல்கத்தா - 89.79 ரூபாய், மும்பை - 94.14 ரூபாய், பெங்களூர் - 85.01 ரூபாய், ஹைதராபாத் - 94.62 ரூபாய், கோழிக்கோடு - 91.72 ரூபாய். ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,059.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.