Show all

கெஜ்ரிவால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: பாரதீய ஜனதாகட்சி

பிரதமர் மோடியை கோழை என்று வர்ணித்த அரவிந்த் கெஜ்ரிவால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் பாரதீய ஜனதா வலியுறுத்தியுள்ளது.

டெல்லி மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் இன்று காலை சிபிஐ சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியது. அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந்த சோதனைக் குறித்து கருத்து கூறிய  கெஜ்ரிவால், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத மோடியின் கோழைத்தனமான செயல் இது என்று கண்டனம் தெரிவித்துள்ளதோடு, எனது அலுவலகத்தில் சோதனை நடத்தவில்லை என சிபிஐ கூறுவது பொய் என்றும், சோதனை என்ற பெயரில் முதல்வர் அலுவலக ஆவணங்களை சிபிஐ பார்த்துள்ளது என்றும் கூறியிருந்தார்.

பாராளுமன்றத்தில் பேசிய நடுவண் அமைச்சர் அருண் ஜெட்லி, அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தவில்லை என்று தெரிவித்து இருந்தார்.  இந்த நிலையில், சோதனை குறித்து விளக்கம் அளித்த சிபிஐ,  புதுடெல்லி முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் அலுவலகத்தில்தான்  சோதனை நடத்தப்பட்டது.

ராஜேந்திரன் உள்பட 6 பேர் தங்களது பதவியை தவறாக பயன்படுத்தி ஒப்பந்தங்களை வெளியிட்டு உள்ளனர். 2007 முதல் 2014-ம் ஆண்டு வரையில் விடுக்கப்பட்ட ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்து உள்ளது. நீதிமன்றத்தின் அனுமதிபெற்ற பின்னரே டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது என தெரிவித்தது.

இதனிடையே, பிரதமரை கடுமையான வார்த்தைகளால் சாடிய அரவிந்த் கெஜ்ரிவால், மோடியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், நடுவண் அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரவி சங்கர் பிரசாத்,

கோழைத்தனமான செயல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக  அரவிந்த் கெஜ்ரிவால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அவரின் பேச்சு நீதியற்ற, வெட்கக் கேடான செயல் மற்றும் கண்டனத்திற்குறியது. என்றார்.

பாஜகவின் கோரிக்கைக்கு பதில் அளித்துள்ள டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா,  

உங்கள் செயல்களுக்காக நீங்கள் மன்னிப்பு கேளுங்கள், பிறகு நாங்கள் பயன்படுத்திய வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். காங்கிரஸைப் போலவே பாரதீய ஜனதாவும் சிபிஐ-ஐ தவறாக பயன்படுத்தி வருகிறது என்றார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.