Show all

குழப்பத்தில் குறளிச்செலாவணி முதலீட்டாளர்கள்! காரணம்: ஒன்றிய பாஜக அரசின் குறளிச்செலாவணி சட்டமுன்வரைவு

ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்த குறளிச்செலாவணி சட்டமுன்வரைவில் உரிய தெளிவு கிடைக்காத நிலையில்- முதலீட்டாளர்கள் அச்சத்தோடும், குழப்பத்தோடும் குறளிச்செலாவணி வணிகத்தில் தொடர்கின்றனர்.

10,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்த, குறளிச்செலாவணி, எண்ணிமச்செலாவணி சட்டமுன்வரைவில் உரிய தெளிவு கிடைக்காத நிலையில்- குழப்பத்தில் குறளிச்செலாவணி முதலீட்டாளர்கள்- அதுவோ இதுவோ என்று அச்சத்தில் இயங்கி வருகின்றார்கள். 

ஒன்றிய பாஜக அரசால், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் பதிகை செய்யப்பட உள்ள 26 சட்ட முன்வரைவுகளில்- குறளிச்செலாவணி மற்றும் எண்ணிமச்செலாவணி சட்டமுன்வரைவும் உள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான குறளிச்செலாவணி வணிகத் தளத்தில் குறளிச்செலாவணி விலை தாறுமாறாகக் குறைந்து வருகிறது. 

இந்தச் சூழ்நிலையில் குறளிச்செலாவணி சட்டமுன்வரைவில் ஒன்றிய பாஜக அரசு தனியார் குறளிச்செலாவணிகளைத் தடை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. 

உண்மையில் தனியார் குறளிச்செலாவணி என்றால் என்ன? பிட்காசு எதிரியம், சிபா இனு, டோஜ்காசு போன்றவை இதில் வருமா? மக்களின் முதலீட்டுக்கு எந்த வகையில் தனியார் குறளிச்செலாவணி தடையால் பாதிப்பு ஏற்படும்? இந்த முதன்மையான வினா அனைத்து குறளிச்செலாவணி முதலீட்டார்களின் மூளையைக் கசக்கச் செய்து வருகிறது.

தனியார் குறளிச்செலாவணி என்பது அடிப்படையில் சில தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடு வேறுபாடுகளை அடிப்படியாகக் கொண்டு பிரிக்கப்படுகிறது. அடிப்படையாகவே குறளிச்செலாவணி வணிகம் அனைத்தும் பதிவு செய்யப்படும், அது எப்படிப் பதிவு செய்யப்படுகிறது, பதிவு எவ்வாறு அணுகலுக்கு ஒத்துழைக்கிறது என்பதை அடிப்படையாக வைத்தே பொது அல்லது தனியார் குறளிச்செலாவணி என்று தனித்தனியாகப் பிரிக்கப்படுகிறது.   

குறளிச்செலாவணிகளின், வணிகப் பரிமாற்றங்களை பரிமாறியபேரேட்டின் கீழ் சேமிக்கப்பட்டு அதன் பின் ஓரே இடத்தில் மைய மரபுப் பேரேட்டில் சேமிக்கப்படும். 

இந்தப் பரிமாறியபேரேட்டில் வலைப்பின்னல் உறுப்பினர்கள் மாற்றங்களைச் செய்ய அனுமதி பெற வேண்டிய கட்டாயமும் இருக்கும். அதேபோல் அனுமதி தேவைப்படாத நிலையும் இருக்கும். குறளிச்செலாவணி வலைப்பின்னல் உறுப்பினர்கள் இப்படியான பரிமாறியபேரேட்டின் அனுமதியை வைத்து தான் பொது அல்லது தனியார் எனப் பிரிக்கப்படுகிறது. 

அதாவது பரிமாறியபேரேட்டை அந்தக் குறளிச்செலாவணி வலைப்பின்னலில் இருக்கும் யார் வேண்டுமானாலும் அணுகல் முன்னெடுக்க  முடியுமெனில் அது பொது, இல்லையெனில் அது தனியார். 

அனைத்து குறளிச்செலாவணியும் கட்டச்சங்கலி தொழில்நுட்பத்தில் இயங்கி வரும் காரணத்தால் முழுமையான தனியுரிமை இல்லை என்றாலும், சில அளவீட்டில் தனியுரிமை அளிக்கிறது. இந்த வகையில் கட்டச்சங்கலி தொழில்நுட்பத்தின் உதவியுடன் பொது குறளிச்செலாவணியை பரிமாறியபேரேட்டின் உதவியுடன் தடமறிய முடியும், 

ஆனால் தனியார் குறளிச்செலாவணியைத் தடமறிய முடியாமல் உரிமையாளரின் கமுக்கம் காக்கப்படும். சுருக்கமாகப் தனியார் குறளிச்செலாவணி மூலம் பரிமாற்ற பதிவுகள் செய்யாமலே பரிமாற்றம் செய்ய முடியும், இது யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

இந்த யாராலும் கண்டுபிடிக்க முடியாத்தன்மை- ஒவ்வொரு நாடுகளுக்கும் வௌ;வேறு சிக்கல்களை உருவாக்குவதாகக் கருதப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பிட்காசு, லைட்காசு, எதிரியம் போன்றவை பொது குறளிச்செலாவணி. இதேபோல் மொனேரோ, இசட்காசு, மற்றும் டேஸ் ஆகியவை தனியார் குறளிச்செலாவணி என அறிய முடிகின்றது. 

ஆனால் ஒன்றிய பாஜக அரசு தனது சட்டமுன்வரைவில் தனியார் குறளிச்செலாவணி என்பதை இந்த மாதிரியான- தொழில்நுட்ப வழியில் குறிப்பிட்டதா அல்லது வேறு விளக்கம் வைத்துள்ளதா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. 

இத்தகைய தனியார் குறளிச்செலாவணியைத் தடை செய்வதான ஒன்றிய பாஜக அரசு அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடத்தில் இருந்து குறளிச்செலாவணி மதிப்பு மளமளவெனக் குறைந்து குறளிச்செலாவணி முதலீட்டாளர்களைப் பீதியில் வைத்துள்ளது. முதலீட்டாளர்கள் அச்சத்தோடும், குழப்பத்தோடும் தொடர்ந்து குறளிச்செலாவணி வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,079.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.