Show all

எந்த அணிக்கு வெற்றி! முப்பத்தி மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலின் முடிவு, இன்று வெளியாக உள்ளது.

விசால் அணியா? ஐசரி கணேஷ் அணியா? வெற்றி யாருக்கு? முப்பத்தி மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

06,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: முப்பத்தி மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளது. 

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்க தேர்தலில் ராதாரவிக்கு எதிராக விசால் களமிறங்கிய போது கடுமையான சொல்லாடல் உச்சத்தை எட்டி இருந்தது. மாறி மாறி ஒருமையில் அழைப்பதும் அவ்வபோது நடந்தது. ராதாரவி தரப்பில் களமிறக்கப்பட்ட சிம்புவும் விசாலை நரி என கூறி தேர்தல் சூட்டை அதிகப்படுத்தினார். ஏறத்தாழ ஒரு பொது தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்பட்டது.

இந்த தேர்தலில் விசால் அணி அனைத்து பதவிகளிலும் வெற்றி பெற்று நாசர் தலைமையில் விசால் செயலாளராக பதவி ஏற்றது. இந்தச் செயற்குழு பதவிக்காலம் முடிந்த நிலையில்- முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதிய செயற்குழுவுக்கான தேர்தல்  அறிவிக்கப்பட்டது. 

செயற்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னர் அறங்கூற்றுவரை நியமித்து தேர்தலை அறிவித்தது செல்லாது என்ற புகாரோடு இந்தத் தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியது. 
விசாலுக்கு எதிராக புதிய அணியை கட்டமைத்த ஐசரி கணேஷ் உள்ளிட்டோர், நாங்கள் இன்னும் விரைவாக நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டுவோம் என்பதை தாண்டி சொல்லாடலில் கடுமை காட்டுவதை தவிர்த்தே வந்தனர். இன்னும் ஒரு படி மேலே சென்ற பாக்யராஜ் நாங்கள் கட்டடம் கட்டி முடித்தால் முதல் மரியாதை நாசருக்கும் விசாலுக்கும் என நட்பு பாராட்டினார்.

ஆனால் இரு தரப்பும் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழக்க தொடங்கினர். பாக்யராஜ் அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஐசரி கணேஷ் மீது தனி மனித தாக்குதலை தொடங்கினார், விசால் தரப்பில் உள்ள கருணாஸ்.

இதனால் பொறுமை இழந்த பாக்யராஜ் அணியும் விசால் பேசும் ஒவ்வொரு சொல்லிலும் குற்றம் கண்டுபிடித்து புகார் சொல்ல தொடங்கியது.

சொல்லுக்குச் சொல்  நாங்கள் ஒரே குடும்பம் என பேசினாலும், சொல்லாடலில் கடுமை நாளுக்கு நாள் கூடியது. தேர்தல் நடைபெறுமா நடைபெறாத என்ற குழப்பத்திற்கு இடையே 08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5120: (23.06.2019) அன்று தேர்தல் நடைபெற்று முடிந்தது.

ஆனாலும் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களின் வாக்குரிமை புறக்கணிக்கப்பட்டது, பதவிக்காலம் முடிந்து தேர்தலை அறிவித்தது என பல்வேறு சிக்கல்கள் அடுத்தடுத்து அறங்கூற்றுமன்றக் கதவுகளைத் தட்ட- நடைபெற்று முடிந்த வாக்குப்பதிவின் முடிவுகள் வங்கி பாதுகாப்பு பெட்டக அறையில் பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டது. பூட்டி வைக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு விரைவில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மீண்டும் விசால் அணி வெற்றி பெறுமா அல்லது விசால் அணிக்கு எதிராக களமிறங்கிய ஐசரி கணேஷ் அணி வெற்றி பெறுமா என்பதை விரைவில் தெரிந்து கொள்ளலாம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,193.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.