Show all

வருமானவரித்துறையினர் சோதனை! தமிழ்த்திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவன அதிபர் எல்ரெட் குமார் வீட்டில்

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, பல வெற்றித் திரைப்படங்களையும் தயாரித்த, தற்போது விடுதலை என்கிற திரைப்படத்தையும் தயாரித்து வரும் எல்ரெட் குமார்- சிக்கியுள்ளார் வருமான வரிச் சோதனையில். 

26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: விண்ணைத்தாண்டி வருவாயா, கோ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து தமிழ்த்திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கிவருகிறது ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எல்ரெட் குமாருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரிச் சோதனை நடந்துவருவது திரையுலகத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இராமேசுவரம் அருகே உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்த எல்ரெட் குமார். பல ஆண்டுகளுக்கு முன்பாக கல்உடைப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மலையை உடைத்து அதை சல்லிக் கற்களாக மாற்றி விற்பனை செய்யும் தொழிலில் வரும் வருமானத்தைப் பார்த்தபிறகு, பல கல்உடைப்பு நிறுவனங்களைக் குத்தகைக்கு எடுத்து கற்களை விற்பனை செய்யும் ஒப்பந்தங்களை கையில் எடுத்தார் எல்ரெட் குமார். 

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் கல்உடைப்பு ஆலைகளை எடுத்து அதன்மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டிவந்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்உடைப்பு ஆலைகள் சங்கத்திற்கு பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார் எல்ரெட் குமார்.

இந்த நிலையில்தான் தென் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் திரைப்படத் தயாரிப்பு பக்கம் தலைகாட்ட அந்த தொழிலில் இவரும் இறங்கினார். பத்து ஆண்டுகளுக்கு முன்பாக திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல வெற்றித் திரைப்படங்களையும் தயாரித்தார். குறிப்பாக விண்ணை தாண்டி வருவாயா, கோ உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது தயாரிப்புகளே. அதே போல் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை என்கிற திரைப்படத்தையும் இவரது தயாரிப்பு நிறுவனமே தயாரித்து வருகிறது.

பணமதிப்பிழப்பு அறிவிப்பின்போது, அன்றைய மாண்புமிகுக்கள் இருவரிடம் பெரும் தொகையை வாங்கி கல்உடைப்பு ஆலைகளில் முதலீடு செய்து பேரளவு வருமானம் பார்த்திருக்கிறார் எல்ரெட் குமார். 

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கட்டுமானப்பொருட்கள் விலையைக் கட்டுபடுத்த முதல்வர் தரப்பு உத்தரவிட்டது. அந்த அடிப்படையில் கல்உடைப்பு ஆலைகளை நடத்தும் குமார், ஜெயராமன் உள்ளிட்டவர்களிடம் கலந்துரையாடல் நடத்தி கட்டிடத்திற்கு தேவைப்படும் கற்கள் விலையைக் குறைத்து நிர்ணயம் செய்ய கோரிக்கை வைத்தனர். ஆனால் 'நாங்கள் நிறைய செலவு செய்துள்ளோம். நாங்கள் கொடுக்கும் விலையில் எந்த மாற்றமும் இருக்காது' என்று கறார் காட்ட அதிர்ந்து போனார்கள் அதிகாரிகள்.

இந்நிலையில் தான் அண்மையில் வேலூரில் கல்உடைப்பு ஆலைகளை நடத்தி வந்த சாரதி என்பவருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையின்போது எல்ரெட் குமார் குறித்த ஆவணங்களும் சிக்கியுள்ளது. 

அப்போதே எல்ரெட் குமார் மற்றும் கல்உடைப்பு ஆலைகள் அதிபர் ஜெயராமன் ஆகியோர் வீடுகளில் எப்போது வேண்டுமானாலும் வருமானவரிச் சோதனை நடக்கலாம் என்கிற செய்தி பரவியது. அந்த செய்தியை இப்போது வருமான வரித்துறையினர் உண்மையாக்கியுள்ளனர். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,183.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.