Show all

'நாடு முழுவதும் முன்னெடுப்பு இந்தியா' என்றால் என்ன! இணையத்தைக் கலக்கும் தேடல்

'நாடு முழுவதும் முன்னெடுப்பு இந்தியா' (பான் இந்தியா) என்றால் என்ன! இந்தத் தேடல் இணையத்தைத் தொடர்ந்து கலக்கி வருகிறது. காரணம் பான் இந்தியா என்கிற சொற்றொடர் எரிச்சலூட்டுகிறது என்று மலையாள நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்ததுதான்.
 
07,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: மலையாள திரையுலகில் கதைத்தலைவனாக அறிமுகமான துல்கர் சல்மான் திரைத்துறைக்குள் நுழைந்து பத்து ஆண்டுகளைக் கடந்து விட்டார். முதல் ஐந்து ஆண்டுகள் மலையாள திரையுலகில் மட்டும் கவனம் செலுத்தியவர் அதன்பிறகு தமிழில் நுழைந்து அப்படியே தெலுங்கு, அதன்பிறகு ஹிந்தி என்று இந்தியாவின் பெரும்பகுதிக்குத் தெரிந்த நடிகராக மாறிவிட்டார். 

ஆனாலும் ஒரு மொழியில் அவர்களுக்குரிய கலாச்சாரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தை 'நாடு முழுவதும் முன்னெடுப்பு' வெளியீடு என்று சொல்லி வெளியிடுவதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை என அண்மையில் காட்சிமடை (சேணல்) ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது கூறியுள்ளார் துல்கர் சல்மான்.

இதுபற்றி மேலும் அவர் கூறும்போது, 'நாடு முழுவதும் முன்னெடுப்பு இந்தியா' என்கிற சொற்றொடர் உண்மையிலேயே என்னை எரிச்சல் அடைய வைக்கிறது. இந்த சொற்றொடரைக் கேட்பதற்கு கூட நான் விரும்பவில்லை. திரைத்துறையில் உள்ள திறமையாளர்கள் ஒவ்வொரு மொழியிலும் சென்று தங்களது திறமைகளைப் பரிமாறி கொள்ளட்டும். அது வரவேற்கத்தக்கது. 

தற்போது இந்தியா முழுவதும் பயணிக்கின்ற 'நாடு முழுவதும் முன்னெடுப்பு இந்தியா' படம் என சொல்லப்படுகின்ற படம் உறுதியாக அனைத்து மொழிகளுக்கும் ஆன படமாக எடுக்கப்படுவதில்லை. 

நாடு முழுவதும் முன்னெடுப்பு இந்தியா (பான் இந்தியா) படம் என்கிற ஒன்றை நாம் கட்டமைக்க முடியாது. அப்படி வெளியாகும் படங்கள் எல்லாம் குறிப்பிட்ட ஒரு சந்தையை மையப்படுத்தி மட்டுமே எடுக்கப்பட்டவை. ஒரே சந்தைக்காக எடுக்கப்பட்டிருந்தாலும் எந்த ஊருக்கும் பொருந்தும் என்கிற ஒரு கதையை, எல்லா ஊர்களிலும் வெளியீடு செய்தால் அதுதான் இந்தியா படம் என்று கூறியுள்ளார் துல்கர் சல்மான். 

தெரிந்தோ தெரியாமலோ பாஜகவின் ஹிந்தி-ஹிந்துத்துவா பரப்பரைக்கு ஆதாயம் தேடும் வகையான தலைப்பாகவே இருக்கிறது இந்த 'நாடு முழுவதும் முன்னெடுப்பு இந்தியா' தலைப்பு. இப்போதைக்கு இந்தத் தலைப்பில் தென்னிந்திய நடிகர்கள் தூக்கிப் பிடிக்கப்பட்டாலும், மாநிலக் கலாச்சாரத்தை உதறியெறிகிற இந்த முன்னெடுப்பு, நாளைக்கு வட இந்திய நடிகர்களை மட்டுமே தூக்கிப்பிடிக்கும் கலாச்சாரமாக எளிதாக மாற்றப்பட்டு விடும் காரணம் அவர்களின் கலைத்துறை சந்தை பெரியது.

துல்கர் சல்மானின்; இந்த விழிப்புணர்வு பாராட்டிற்குரியது. இதே அவர் தமிழ்நாட்டுக்காரராக இருந்திருந்தால் வெறுமனே தீயாகும் இணையத் தேடலாக பார்க்கப்படாமல், அவருக்கு வேறு வண்ணம் தீட்டும் பரப்புரை முன்னெடுக்கப்பட்டிருந்திருக்கும். 

தற்போதைய நிலவரப்படி 'நாடு முழுவதும் முன்னெடுப்பு இந்தியா' என்கிற பெயரில் பல திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

திரைத்துறையில் இந்தியாவின் ஐந்து முதன்மை மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டால் அது தான் 'நாடு முழுவதும் முன்னெடுப்பு இந்தியா' வகைத் திரைப்படம்.

அது ஏன் இந்த ஐந்து மொழிகளில் மட்டும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிட வேண்டும் என்கிற கேள்வி தற்போது உங்களது மனதில் தோன்றி இருக்கலாம். அதாவது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தான் கதைத்தலைமைக்கு முதன்மை தரும் மிகுந்த வணிகப்பாடான கதைகளும், அதற்கான அதிக கொண்டாடிகள் மிகுந்த கதைத்தலைவர்களும் இருக்கின்றனர். 

இதில் இன்னொரு புறம் பேரளவான திரையரங்கம் என்பதும் கருத்தில் கொள்ளப்படுகிறது. அது தலைநகரங்களில் உள்ள டால்பி, ஐ மேக்ஸ், மல்டி பிளக்ஸ் என்பது தொடங்கி, நகர் புறங்களில் உள்ள கியூப், பேரூராட்சி பகுதிகளில் உள்ள பேஸ் மற்றும் கிராமப் புறங்களில் உள்ள ஸ்டீரியோ என்று சவுண்ட் சிஸ்டமும் இந்த குறிப்பிட்ட ஐந்து மொழிகளை கொண்ட மாநிலங்களில் தான் அதிகளவில் இருக்கிறது.

இவ்வாறு முதன் முறையாக தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழியில் இந்தியாவில் முதன் முறையாக 'நாடு முழுவதும் முன்னெடுப்பு இந்தியா' என்கிற பெயரில் வெளியான திரைப்படம், பாகுபலி.

இயக்குநர் ராஜமௌளியின் இயக்கத்தில் பேரளவாக உருவாக்கப்பட்டு, எந்தவொரு மாநில மொழியிலான கொண்டாடிகளும் ஏற்றுக் கொள்ள முடியாத காட்சிகளையும் வைக்காமல், மிகவும் எளிய கருத்தியல் அன 'பதவி ஆசை' என்கிற புள்ளியை கருவாக வைத்து சிறந்த திரைக்கதையாக உருவாகி வெளியானது. மேலும் இதன் இரண்டாம் பாகமும் வெளியாகி அதுவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

இதனைத் தொடர்ந்து அண்மையில் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானது. ஆனால் இந்தப்படத்தில் மாநில அடிப்படைகளை நையாண்டி செய்யும் வகையான சில கருத்தியல் இடம்பெற்று இது இந்தியாவிற்கான படம் அல்ல, குறிப்பாக இது தமிழ்நாட்டு அடிப்படைக்கு ஏற்றபடம் அல்ல என்று பேசப்பட்டு வருகிறது.

இதே வரிசையில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ள எதற்கும் துணிந்தவன், இயக்குநர் ராஜமௌலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர், இயக்குநர் ஓம் ராவ்த் இயக்கத்தில் அடிபுருஷ் மற்றும் இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கி வரும் லிகர் ஆகிய திரைப்படங்களும் இந்த வரிசையில் களமிறக்கப்படவுள்ளன.

மக்கள் நடுவே பேரறிமுகமாக இருக்கும் கதைத்தலைவர்களாக வைத்து, மிகச்சிறிய கதைக் கருவினை மிகவும் பேரளவாக காண்பித்து, அதனை பல்வேறு மொழிகளில் வெளியிட்டு, செலவை விட இரு மடங்கு லாபத்தினை பெரும் நவீன திரையின் சிறு முயற்சி தான், இது என்று பார்க்கும் வகைக்கு இப்போதைக்கு இருக்கிறது. 

ஆனாலும் துல்கர் சல்மானின் விழிப்புணர்வு பொருளற்றது என்று தள்ளிவிடாமல் கருத்தில் கொள்ளும் வகைக்கு- இந்தியாவில்; முன்பு காங்கிரஸ் ஆட்சியாளர்களிடமும், தற்போது பாஜக ஆட்சியாளர்களிடமும், நாம் பெற்று வரும் அனுபவம் நம்மை எச்சரிக்கிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,194.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.