Show all

வழக்கம் போல் கமல் வெற்றி சாத்தியமே! விஸ்வரூபம் 2க்கு ஒரு சின்ன சிக்கல்! பிரமிட் சாய்மிரா நிறுவனம் வழக்கு

18,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இந்த நிலையில் பிரமிட் சாய்மிரா நிறுவனம் இப்படத்திற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்துள்ளது.

கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், ஷேகர் கபூர், ஜெய்தீப் அஹ்லாவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சனு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம்தாத் சய்னுதீன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாராகியுள்ள இப்படம், தெலுங்கில் மறுபதிப்பு செய்து வெளியிடப்படுகிறது. கமல்ஹாசன் இப்படத்தின் முன்னோட்ட வேலைகளில் சுறுசுறுப்பாக இருக்கிறார்.

கடந்தமுறை விஸ்வரூபம் முதல்பாகத்திற்கு நடந்தது போன்று எதுவும் நடக்காமல் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரமிட் சாய்மிரா நிறுவனம் படத்தின் தடைகோரி மனு பதிகை செய்துள்ளது.

 

பத்து ஆண்டுகளுக்கு முன்பு மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டு, 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்டது. இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக  ரூ6.90 கோடியும், படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 4 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.

ஆனால் மர்மயோகி படத்தை தயாரிக்காத நிலையில் 6.90 கோடியை திரும்பக் கேட்டு பிரமிட் சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், விஸ்வரூபம் 2 படத்தை வரும் வெள்ளியன்று வெளியிடும் வேலைகளில் கமல் இறங்கியுள்ளார்.

மர்மயோகி படத்திற்கு சம்பளமாக கொடுத்த ரூ. 4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடியாக கமல் திருப்பி தரவேண்டும் அந்தத் தொகைளை தராமல் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பிரமிட் சாய்மீரா நிறுவனம் புதிய வழக்கை தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கை சென்னை உயர் அறங்கூற்று மன்றம் ஏற்குமா? ஒருவேளை ஏற்றாலும், விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை விதிக்க மறுக்குமா? வழக்கை ஏற்று  விஸ்வரூபம் 2 படத்திற்கு தடையும் விதித்து வெளியீட்டு நாள் தள்ளிப் போகுமா? எது எப்படியானாலும் கமலின் சட்ட ரீதியான வெற்றி வழக்கமானதுதான். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,868.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.