Show all

செயலலிதாவாக நடிக்க வடக்கத்திய திரையுலகில் தேர்வாம்! விஜய் இயக்கத்தில் செயலலிதா வாழ்க்கை வரலாறு

31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் தவிர்க்க முடியாத தலைவராக இருந்தவர். செயலலிதாவின் வாழ்க்கை முழுவதும் முற்களால் நிரம்பியது. இரும்புப் பெண்மணி, தன்னம்பிக்கையின் தாரக மந்திரம், துணிச்சலின் சிகரம் என தமிழக அரசியலின் அடையாளமாய் திகழ்ந்தவர் செயலலிதா.  

அரசியல் மட்டுமின்றி திரைத்துறையிலும் ஒளிர்ந்தவர் செயலலிதா. நடிப்பு, நடனம், சண்டைக்காட்சிகள், இசை என அவர் கை வைக்காத துறையே இல்லை. செயலலிதா சிறந்த எழுத்தாளரும் ஆவார். கிழமை இதழுக்கு தொடர்கதை எழுதியுள்ளார். இப்படி பன்முகங்களை கொண்டவர் மறைந்த முதல்வர் செயலலிதா. 

மொழி வல்லமை மொழி ஆளுமை மிக்கவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மற்றும் வட இந்திய மொழிகளிலும் வல்லமை பெற்றவர். 

செயலலிதா அவர்கள் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை மதராசபட்டிணம், தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களை இயக்கிய விஜய் இயக்க உள்ளார். இந்நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் விஷ்ணு இந்துரி அண்மையில் இந்த திட்டம் குறித்து தெரிவித்து இருந்தார். செயலலிதா வேடத்தில் நடிக்க தீபிகா படுகோனே, தபு, வித்யா பாலன், ஆகியோர் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர். 

செயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு ஒரு வடக்;கத்திய நடிகையை எதிர் பார்ப்பதாக தயாரிப்பாளர் இந்தூரி தெரிவித்துள்ளார். இது ஒரு தேசிய, பன்மொழி படம். இந்தக் கதை இந்தியா முழுவதும் பயணிக்க வேண்டும் என்றும் செயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோதிலும், அவரது கதையானது உலகளாவிய முறையீடு என்றும் அவர் கூறியுள்ளார். தாங்கள் இரண்டு மூன்று சிறந்த வடஇந்திய நடிகைகளை அணுகினோம் என்று கூறியுள்ள இந்தூரி, இயக்குனர் விஜய் படத்தின் முன் தயாரிப்புப் பணிகளை கவனித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு சிமி கார்வெல்  நடத்திய 'ரெண்டேஸ்வஸ்'  என்ற பிரபல நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்  செயலலிதா. செயலலிதாவின் இன்னொரு முகத்தை காட்டுவதாக அமைந்தது  இந்த பேட்டி. மிகவும் உற்சாகமான பேட்டியான  இதில் சிமி கார்வல்  செயலலிதாவின் பள்ளிப் பருவத்தைப் பற்றி பேசும்பொழுது, அப்பொழுது  உங்கள் மனதைக் கவர்ந்த ஆண்கள் யாரும் இருந்தனரா என்று கேட்க, கிரிக்கெட் வீரர் நாரி கான்ட்ராக்டர் மீது மதிப்பு இருந்ததாகவும், அவரைப் பார்ப்பதற்காகவே அப்பொழுது கிரிக்கெட் போட்டிகளை காணச் சென்றதாகவும் கூறினார். மேலும் ஹிந்தி திரைப்பட நடிகர் சமி கபூரையும் தனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று கூறினார்.  தொகுப்பாளர் சிமி, செயலலிதாவிற்கு பிடித்த பாடல் பற்றி கேட்டு, அதை பாடச் சொன்னார். முதலில், இப்பொழுது பழக்கத்தில் இல்லை என்று கூறி பாட மறுத்த செயலலிதாவை, சிரித்துக் கேட்டு, பாடவைத்துவிட்டார் சிமி. ஆஜா சனம் என்ற அந்த ஹிந்தி பாடலை  அழகாக பாடினாராம் செயலலிதா. இந்தப் பேட்டி செயலலிதாவின்  குதூகலத்துடனும் சிரிப்புடனும் தொடக்கத்திலிருந்து இறுதி வரை இருக்கும். இந்தப் பேட்டியில் செயலலிதாவாக நடிக்க ஏற்றவர் ஐசுவர்யாராய் என்று செயலலிதாவே தெரிவித்ததாக ஒரு செய்தி அடிபடுகிறது. அவர் கூட தேர்வு செய்யப் படலாம் என்றும் எதிர்பார்ப்பும் உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,881.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.