Show all

மருத்துவர்களை இழிவுபடுத்தும் ‘பிச்சைக்காரன்’ திரைப்பட விளம்பரப் பாடல் வரிகள்

அண்மையில் வெளியாகி உள்ள, ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தின் விளம்பரப் பாடல் வரிகள் மருத்துவர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதற்கு சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

     இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்து வரும் பிச்சைக்காரன் திரைப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்வி பயின்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மருத்துவர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன.

 அவ்வாறு இட ஒதுக்கீடு மூலம் படித்த மருத்துவர்கள் தவறாக ஊசியைப் போட்டு நோயாளிகளைக் கொல்கிறார்கள் என்ற பொருளில் அமைந்துள்ள வரிகள் சமூக நீதிக்கு எதிரானது.

 தமிழகத்தில் நீண்ட காலமாக இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இப்போது 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பகிரங்கப் போட்டியிலேயே இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ இடங்களைப் பெறுகின்றனர். தமிழகத்தில் சிறந்து விளங்கும் மருத்துவர்கள் பெரும்பாலும் இடஒதுக்கீட்டில் பயின்றவர்கள்தான். அவர்களது திறமையை உலகமே பாராட்டுகிறது.

 உண்மை இவ்வாறு இருக்க, இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவர்கள் ஆனவர்களால் நோயாளிகள் இறப்பதாகக் கூறுவது கண்டனத்துக்குரியது. எனவே இந்தப் பாடலுக்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும். பாடலாசிரியர், இசை அமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.