Show all

தமிழர் கொண்டாடவேண்டிய படமே! இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

ஈடுபாட்டோடு, தான் இழந்த ஒன்றை மீட்க தனிமனிதன் ஒருவன் தொடர்ந்து முயன்றாலே, அவன் இழந்தது மட்டுமல்ல அவன் வாழும் சமுதாயமே இழந்ததும் கிடைத்துவிடும். இதைத் தடுக்க முடியாது, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் என்கிறது இந்தப்படம்.

18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: யார் ஆண்டாலும் (இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்) எளிய மக்களின் வாழ்க்கையில் பெரிதாக மாற்றமில்லை எனச் சொல்லத் தொடங்கி- 
ஈடுபாட்டோடு, தான் இழந்த ஒன்றை மீட்க தனிமனிதன் ஒருவன் தொடர்ந்து முயன்றாலே, அவன் இழந்தது மட்டுமல்ல அவன் வாழும் சமுதாயமே இழந்ததும் கிடைத்துவிடும். இதைத் தடுக்க முடியாது, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும். என்ற தமிழ்முன்னோர் முன்னெடுத்திருந்த மந்திரக் கலையை தெரிந்தோ தெரியாமலோ வலியுறுத்துகிறது.

குன்னி முத்து - வீராயி இணையர் வளர்க்கும் வெள்ளையன், கருப்பன் காளை மாடுகள் காணாமல் போக, அவற்றைத் தேடித் திரிகிறார்கள். ஒருகட்டத்தில் இது ஒன்றிய அளவில் கவனம் ஈர்க்கும் செய்தியாக மாறுகிறது. படையெடுக்கும் செய்தியாளர்கள், அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கும் அரசியல்வாதிகள் நடுவே, இவர்களின் மாடுகள் கிடைத்தனவா என்பதுதான் மீதிக்கதை.

குன்னிமுத்துவாக நடித்திருக்கும் மிதுன் மாணிக்கத்திற்கு படம் நெடுக கருப்பன் வெள்ளையன் தேடல், பிரிவு குறித்த கவலை, மட்டுமே படத்தில் அவருடைய வேலை. 

வீராயியாக நடித்திருக்கும் இரம்யா பாண்டியன் கிராமத்துப் பெண்ணின் உடல்மொழியை, பேச்சு வழக்கைச் சுமக்க முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். 

தொலைக்காட்சி செய்தியாளராக வரும் வாணிபோஜனுக்கு முதன்மைக் கதாபாத்திரம் என்றாலும் மனதில் பதியும் அளவு இல்லை. 

வெக்கையே வாழ்க்கையாகிப்போன சிற்றூரின் பரப்பை கண் முன் நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். 

குன்னிமுத்துவும் வீராயியும் காளைமாடுகளை உயிராய் நினைக்கிறார்கள் என்பதற்காக ஒவ்வொரு காட்சியிலும் 'எங்க புள்ளை மாதிரி', 'எங்க புள்ளை மாதிரி' என்று திரும்பத் திரும்பப் பேசுகிறார்கள்.

அவர்கள் இழந்த காளைகளுக்கு இழப்பீடு தரும் வகையில் காட்டப்படும் அரசியல்வாதி எடப்பாடி பழனிசாமியை நினைவுக்குக் கொண்டு வருகிறார்.

அவர்கள் இழந்த காளைகள் கிடைக்க ஆதரவு வினையாற்றுவதாக காட்டப்படுகிற சிலரால், பாஜக அரசியல்வாதிகளும் நம் நினைவுக்குக் கொணரப்படுகி;ன்றார்கள்.

இவர்களுக்காக போரட்டக் களத்தில் இறங்கி முழங்குகிற கருப்புச்சட்டைக் குழுவின் தலைவரை சீமான் போல காட்ட முயல்வது கொஞ்சம் கூடவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

காணாமல் போன காளை மாடு குறித்து காவல்துறையும், அரசியல் தளமும், ஊடகமும் பரபரக்கிறது. இழப்பீடு வரை கூட நகர்கிறது. ஆனால் தடம் அறியவும் இல்லை, தேடிப்போகவும் இல்லை. 

ஆனால் அந்த சமுதாயம் இழந்த பள்ளிக்கூடம், கழிப்பிடம், குளம், கதைத்தலைவனின் காளைமாடுகள் அனைத்தும் கிடைக்கின்றன. 
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதூஉம்- என்கிற சிலப்பதிகார வகைக்கு. 
அதற்கு ஊக்கியாக அமைகிறவர்கள் செய்தியாளர் பதவியை இழந்த வாணிபோஜன் மற்றும் அந்த சமுதாயத்தின் முன்னால் குடிமகன் இந்நாள் வழக்கறிஞர் ஒருவர்.

கதைத்தலைவனின் எண்ணம் ஈடேறுகிறது.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் 
திண்ணியர் ஆகப் பெறின்
என்கிற திருக்குறளுக்கு ஒப்ப. 

கதைத் தலைவன் தன் சமுதாயத்தில் அதிர்வுகளை ஏற்படுத்த அந்த அதிர்வுகள் ஒன்றியம் முழுவதும் எதிரொலித்து- சிலப்பதிகாரம் காட்டும் விதியான
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் என்கிற கருத்து அடிப்படையாக கதைத்தலைவன் வாழ்ந்துகொண்டிருக்கும் சமுதாயம் இழந்ததும் கிடைக்கிறது.

 

அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்    

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்      

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்    

சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்                

சிலப்பதி காரம் என்னும் பெயரால்                

நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்.
என்று தொடங்குவார் சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,116.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.