Show all

தென்னிந்திய நடிகர் சங்கத்தின்; தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015-18-ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (அக். 18) நடைபெறுகிறது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ஈ.பத்மநாபன் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் தேர்தலை நடத்துகின்றனர். வாக்குப் பதிவு முழுவதுமாக விடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

சங்கத்தின் 29 நிர்வாகப் பதவிகளுக்கு 61 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சரத்குமார் தலைமையிலான அணியினருக்கும், நாசர் தலைமையிலான அணியினருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தலைவர் பதவிக்கு சரத்குமார், நாசர் ஆகிய இருவரும், பொது செயலர் பதவிக்கு ராதாரவி, விஷால் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர். இரு பதவிகளுக்கும் சிவசாமி என்பவரும் போட்டியிடுகிறார்.

பொருளாளர் பதவிக்கு சரத்குமார் அணியின் சார்பில் மறைந்த எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகன் எஸ்.எஸ்.ஆர்.கண்ணனும், நடிகர் கார்த்தியும் களத்தில் உள்ளனர்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு சரத்குமார் அணியின் சார்பில் விஜயகுமார், சிம்பு ஆகிய இருவரும், நாசர் அணியின் சார்பில் பொன்வண்ணன், கருணாஸ் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர்.

24 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு இரு அணிகளிலும் சார்பில் 48 பேர் போட்டியிடுகின்றனர்.

டி.பி.கஜேந்திரன், நளினி, நிரோஷா, ராம்கி உள்ளிட்டோர் சரத்குமார் அணியிலும், ஜூனியர் பாலையா, கோவை சரளா, பூச்சி முருகன், ராஜேஷ் உள்ளிட்டோர் நாசர் அணியிலும் களத்தில் உள்ள வேட்பாளர்கள்.

பொதுத்தேர்தலைப் போல, இரு அணியினரும் ஒருவருக்கொருவர் விமர்சனங்கள், விவாதங்களுடன் பிரசாரத்தை முடித்துள்ளனர்.

தேர்தலில் 3,139 உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நாடக நடிகர்களின் வாக்குகள் என்பதால், அந்த வாக்குகளே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாகக் கருதப்படுகிறது.

இன்று இரவே முடிவு தெரியும்.

வாக்குப் பதிவு நிறைவு அடைந்தவுடன், வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. இதையடுத்து, இரவே முடிவுகள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 ஆண்டுகளுக்கு பின்னர் சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கு வாக்குப் பதிவு நடைபெறுவதால், முடிவை திரையுலகத்தினர் மட்டுமல்லாமல், பொதுமக்களும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

200 போலீஸார் பாதுகாப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான பாதுகாப்புப் பணியில் இரு துணை ஆணையர்கள் தலைமையில் 200 போலீஸார் ஈடுபடுகின்றனர்.

வாக்குப் பதிவின்போது, அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் தே.க.ராஜேந்திரனை நடிகர் விஷால் அணியினர் அண்மையில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறும் செயின்ட் எப்பாஸ் மெட்ரிக். பள்ளி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்கு போலீஸார் கொண்டுவந்தனர். பள்ளி வளாகம், வெளிப்புறப் பகுதிகளில் ரகசியமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பள்ளியில் இரு துணை ஆணையர்கள், 4 உதவி ஆணையர்கள் தலைமையில் 200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு தொடங்கி, முடிவு அறிவிக்கப்படும் வரை இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

பிரபல நடிகர், நடிகைகள் வாக்களிக்க வருவர் என்பதால், அதற்கு ஏற்றவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திரையுலகினரைக் காண மக்கள் அதிகமாக திரளுவார்கள் என கருதப்படுகிறது. இதனால், அவர்கள் வாக்களிக்க வரும்போது, எந்த இடையூறுமின்றி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.