Show all

அது ஒரு நிலான் காலம்-3

நீச்சல் தெரியாமல் நீருக்குள் விழுந்தால் நம்மை பூமாதேவி கடவுள் மூன்று முறை நீருக்கு மேல் தூக்கி விடுமா? இது நம்பிக்கையா இல்லை மூடநம்பிக்கையா? என்று வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு எனது பட்டறிவை விடையாக்க, கட்டுரை உருவாக்கத் தொடங்கி, 'அது ஒரு நிலான் காலம்-3' ஆக இந்தக் கட்டுரை நிறைவு செய்யப்படுவதாகிவிட்டது.

17,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: நீச்சல் தெரியாமல் நீருக்குள் விழுந்தால், இயல்பூக்கமாக கையைக் காலை ஆட்ட அவர் நீரின் மேல்மட்டத்திற்கு வருவார். பக்கத்தில் எதையாவது பற்றி தப்பிக்க வாய்ப்பிருந்தால் அவர் உறுதியாகத் தப்பிக்க முடியும். 

நான் உங்களைக் காப்பாற்றுகிறேன் என்று, நன்கு நீச்சல் தெரிந்த என் நண்பன் இராமய்யா என்;னை குதிரைக்கல்மேடு தடுப்பணை நீர்தேக்கத்தில் குதிக்கச் சொன்னார். 

சரி. நானே நீந்தி நாம் நிற்கிற இந்தப் பாறைக்கு வரமுடிகிறதா பார்க்கிறேன். முடியாவிட்டால் காப்பாற்று நண்பா என்று கூறிவிட்டு தேக்கத்தில் குதித்தேன்.

குதித்த வேகத்தில் என்னை அறியாமல் நான் தண்ணீருக்கு மேலே வந்தேன். அதே வேகத்தில் நான் தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு அரைகுறையாக நீந்தத் தொடங்கினேன். 

நான் குதித்த இடத்திற்கும் பாறைக்கும் மூன்றடி தூரமே இருக்கும். ஆனால் அந்த தூரத்தை கடக்க நான் பலமுறை தண்ணீரில் துடுப்பு மாதிரி கைகளை மாற்றி மாற்றி அசைக்க வேண்டியிருந்தது.

நண்பரின் உதவியில்லாமல் நானே பாறைக்கு வந்து பாறையைப் பற்றி ஏறிவிட்டேன்.

நான் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மின்பணியாளர் தொழிற்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த காலம்.

என் அண்ணன் மகள் தேன்மொழியின் கணவர் வடிவேல் குதிரைக்கல்மேடு அக்கரை பகுதியான கோனேரிப்பட்டியில் கிராம நிருவாக அலுவலராகப் பணியில் இருந்தார்.

நான், என் அம்மா, தேன்மொழியின் அப்பாவான என் பெரிய அண்ணன், அண்ணி காவேரி, அவர்களின் பிள்ளைகள் மணிமொழி, சரவணமொழி, மதியழகன், பாபு, என் சிறிய அண்ணன் செல்வக்குமார் அகியோர் மேட்டூர் அணை தங்கமாபுரிப் பட்டணத்தில் குடியிருந்தோம்.

எங்கள் வீட்டிலிருந்து உறவுப்பாலமாக நான்தான் தேன்மொழி வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவேன். தேன்மொழி வீட்டிற்கு எங்கள் வீட்டில் இருந்து செல்வதற்கு- சந்தைப் பேட்டை வழியாக நடந்து சென்று, தொடர்வண்டி நிலைய பேருந்து நிறுத்ததிற்கு வந்து, அங்கிருந்து நகரப்பேருந்தில் கீழ் மேட்டூருக்குச் செல்ல வேண்டும்.

கீழ் மேட்டூரில்தான், பிரித்தானிய இந்தியாவில் கட்டப்பட்ட அணை மின்நிலையம் இருக்கிறது. இதிலிருந்து 40மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 

அதன் பக்கவாட்டில் விடுதலை பெற்ற இந்தியாவில். இரசிய நாட்டு தொழில் நுட்பத்தில் 200 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான மின்நிலையம் அமைக்கப்பட்டது.

மேட்டூரில் இருந்து ஈரோடு செல்லும் காவிரிப்பாதையில் சப்பானிய தொழில் நுட்பத்தில், 40மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக நான்கு தடுப்பணைகள், நான் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மின்பணியாளர் தொழிற்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் கட்டப்பட்டு வந்தது.

கீழ் மேட்டூருக்குச் சென்ற நான் அங்கிருந்து ஈரோடு செல்லும் பேருந்தில் ஏறி குதிரைக்கல் மேடு பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். குதிரைக்கல் மேட்டிலிருந்து மூன்று கீலோ மீட்டர் தூரத்தில் காவிரி ஆறு இருக்கிறது. காவிரி ஆற்றுக்கு நடந்து சென்று பரிசல் ஏறி அக்கரைக்குச் சென்றால் அந்தக்கரையில் இருப்பது கோனேரிப்பட்டி.

குதிரைக்கல் மேடு ஆற்றில் ஒரு தடுப்பணைக்கான கட்டுமான வேலையை ஹிந்துஸ்தான் கட்டுமானக் குழுமம் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறது. 

அந்தக் குழுமமும் தங்கள் பணியாளர்கள் ஆற்றைக் கடப்பதற்கு பரிசலை ஒப்பந்த அடிப்படையில் நிறுவியிருக்கிறது. அந்தப் பரிசலில் பொதுமக்களை ஏற்றமாட்டார்கள். இது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. பரிசல் ஓட்டுகிறவர் என்னையும் குழுமப் பணியாளர் என்று நினைத்து ஏற்றிக் கொண்டார். 

பரிசல் நடுஆற்றில் சென்று கொண்டிருக்கும் போது, குழுமத்தின் பொறியாளர் ஒருவர் என்னை தள்ளி அமரும்படி ஹிந்தியில் சொன்னார். எனக்கு அவர் என்ன சொன்னார் என்று தெரியாததால் எதிர்வினை ஏதும் ஆற்றமல் இருந்தேன். 

பக்கத்தில் அமர்ந்திருந்த செந்தில், (பிற்காலத்தில் இவர் எனக்கு நெருங்கிய நண்பராக வருவார் என்று அப்போது தெரியாது) என்ஜினியர் சாப் உங்களைத் தள்ளி உட்காரச் சொல்கிறார் என்று ஹிந்தி கலந்த தமிழில் சொன்னார். 

தள்ளி அமருவதற்கு இந்தப் பக்கம் இடம் இல்லையே என்றேன் நான். இதையும் அவருக்கு மொழிபெயர்த்தார் செந்தில்.

அந்தக் குழும ஹிந்தி பொறியாளர், ஏன் தமிழ்நாட்டில் யாருக்கும் ராஷ்டிரபாஷா ஹிந்தி தெரியமாட்டேன் என்கிறது என்று செந்திலிடம் பகடியாடினார். 

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்பது உண்மையில் அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் நான், என் தமிழ்ப்பற்றின் காரணமாகவும், பள்ளிநாளில் ஹிந்தித்திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவன் என்ற உணர்வோடும், எனக்கு உலகமொழிகளின் தாய்மொழியான தமிழ் தெரியும். அடாவடி திணிப்பு மொழியான ஹிந்தியை நான் அறிந்திருக்க வேண்டியதில்லை, தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் செய்கிற கட்டாயத்தில் இருக்கிற உங்களுக்குத்தான் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்று உரக்கச் சொன்னேன். 

செந்தில் சிரி சிரி என்று சிரித்து விட்டு, நான் சொன்னதை ஹிந்தியில் மொழிபெயர்க்க முயலவே இல்லை. நான் சொன்னது புரிந்திருந்த பக்கத்துப் பயணிகளும் படகோட்டியும் சிரித்தார்கள்.

கோனேரிப்பட்டியில் படகை விட்டு இறங்கியதும், படகில் என்னோடு பயணித்திருந்த ஒருவர், எனக்கு கைகுலுக்கி தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

அவர் தமிழ்நாடு மின்வாரியத்தில், கோனேரிப்பட்டி தடுப்பணைத் திட்டத்தில், துணை கட்டிடப் பொறியாளராக பணியில் இருக்கிறார். பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இதழின் புரவலர். அவர் என்னைப்பற்றி முழுமையாக விசாரித்தார். நாளை திரும்ப வாருங்கள் ஹிந்துஸ்தான் குழுமத்தில் உங்களை வேலைக்குச் சேர்த்து விடுகிறேன் என்று சொன்னார்.

அவர் என்னை வேலைக்குச் சேர்த்து விட்ட பிறகு, உடன் மின்பணியாளராக திருச்சியில் இருந்து பணிக்கு வந்த இராமய்யா எனக்கு நெருங்கிய நண்பர் ஆனார். எங்களை நட்பாக இணைத்தது மின்சாரப் படிப்பும், தமிழ்ஆர்வமும் ஆகும். 

அந்த இராமய்யாதான் என்னை ஆற்றில் குதிக்கச் சொல்லி நீச்சல் பழக்க முயற்சித்தவர். ஆனாலும் நான் நீச்சல் பழகும் வாய்ப்பு அந்த நிகழ்வுக்குப்பின் தொடரவில்லை. 

இராமய்யா நட்பு, தென்மொழி.நா.இளமாறன் நட்பு, செந்தில் நட்பு குறித்தும் கேனேரிப்பட்டியில் என் மகள் வீட்டில் தங்கியிருந்து குழுமத்தில் வேலை பார்த்தது குறித்த நினைவுகளையும் இன்னொரு முறை பேசுவோம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,539.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.