Show all

காலம் கடந்து நிற்கும் வெற்றியாளர்கள்! தனக்குள் தமிழுக்கு ஒரு தடம், கடவுளில் தனக்கு ஓர் இடம் அமைத்துக் கொண்டவர்கள்

தனக்குள் தமிழுக்கு ஒரு தடம், கடவுளில் தனக்கு ஓர் இடம் அமைத்துக் கொண்டவர்கள் வெற்றியாளர்களாக மட்டும் அல்லாமல் காலம் கடந்தும் நிற்பார்கள் என்பது வரலாற்றில் கிடைக்கும் தரவு ஆகும். நீங்கள் வெற்றியாளர் ஆக வேண்டும் என்றாலும் காலம் கடந்து நிற்க வேண்டும் என்றாலும் நீங்கள் முன்னெடுக்க வேண்டியது உங்களுக்குள் தமிழுக்கு ஒரு தடம் கடவுளில் உங்களுக்கு ஓர் இடம் என்பதை தெளிவு படுத்துவதற்கானது இந்தக் கட்டுரை.

12,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5125: திருவள்ளுவர்! காலம் கடந்து நிற்கும் வெற்றியாளர் என்பதை யாரும் மறுக்க முடியாது அல்லவா? காலம் கடந்து நிற்கும் திருக்குறளை தமிழின் முதல் எழுத்தான அகரத்தில் தொடங்கி னகர மெய்யில் முடித்து  தனக்குள் தமிழுக்கு ஒரு தடம் அமைக்கிறார் திருவள்ளுவர். 

'அகர முதல' என்று சொன்னால்போதுமே உலகின் அத்தனை தமிழரும் திருவள்ளுவர் என்று முழங்குவார்களே! 

கோள்களில் எல்லாம் முதன்மையானது ஆதி பகவன் (ஞாயிறு) போல தமிழ் அடிப்படையாகக் கொண்டுள்ள முதல் எழுத்துக்கள் முப்பதில் முதலாவதான எழுத்து அகரம் ஆகும். அந்த 'அகர முதல' என்பது தமிழ் என்று கடவுள் வாழ்த்தின் முதல் குறிளில் தமிழைக் கடவுள் ஆக்கியிருக்கிறார் திருவள்ளுவர். தமிழைக் கடவுள் கூறு என்று தமிழ்முன்னோர் நிறுவியும் உள்ளனர் என்பது தனிக்கட்டுரை ஆகும்.

'அறிவின் தொடர்ச்சியான தமிழ்' என்பதை 'வாலறிவன்' என்று தெரிவித்து தமிழில் தடம் பற்றாதவன் கற்றதனால் என்ன பயனை அடைய முடியும் என்று நம்மையும் நமக்குள் தமிழுக்கு ஒரு தடம் பற்ற அழைக்கிறார் திருவள்ளுவர்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.  
இந்தக் குறளைத் திரும்பத் திரும்பப் படித்துப் பாருங்கள். நான் சொல்லுகிற பொருளுரை உங்களுக்கு விளங்கும்.

ஏட்டில் அல்லது புத்தகத்தில் அச்சாகிய தமிழின் தடம் பற்றுவது, யாருக்கும் தமிழ் தடம் அளிக்கும் என்கிற வேண்டுதல் வேண்டாமை இல்லாத தமிழ், இருள்சேர் இருவினையும் சேரா தமிழ், ஐந்திர இலக்கணத்தில் ஒழுக்கத்தை நிறுவிய தமிழ், உவமை சொல்ல முடியாத ஒற்றையான தமிழ், அறவாழி தமிழ், எண் குணத்தான் தமிழ், பிறவி பெருங்கடலை நீந்துவதற்கான தெப்பம் தமிழ் என்று பத்து குறளிலும் தனக்குள் தமிழுக்குத் தடம் அமைக்க வேண்டிய கட்டாயத்தை தெளிவு படுத்துகிறார் திருவள்ளுவர்.

'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று சொன்னால்போதுமே, இப்படி தனக்குள் தடம் அமைத்தவரின் பெயரை உலகின் அத்தனை தமிழரும் கணியன் பூங்குன்றனர் என்று முழங்குவார்களே! 

'ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே' என்று சொன்னால்போதுமே, இப்படி தனக்குள் தடம் அமைத்தவரின் பெயரை உலகின் அத்தனை தமிழரும் பொன்முடியார் என்று முழங்குவார்களே! 

'அறம் செய விரும்பு' என்று சொன்னால்போதுமே, இப்படி தனக்குள் தடம் அமைத்தவரின் பெயரை உலகின் அத்தனை தமிழரும் ஒளவையார் என்று முழங்குவார்களே! 

இன்றைக்கும், தனக்குள் தமிழுக்கு ஒரு தடம் பதித்தவர் மட்டுமே நிற்கிறார்கள். ம.கோ.இராமச்சந்திரன் என்று தமிழ்ப் படுத்திச் சொன்னாலும் விளங்கிக் கொள்ளாதவர்கள் 'இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்பே' என்று சொன்னால்போதுமே, இப்படி தனக்குள் தடம் அமைத்தவரின் பெயரை உலகின் அத்தனை தமிழரும் மக்கள் திலகம் என்று முழங்குவார்களே! 

'என் இனிய தமிழ் மக்களே' என்று சொன்னால்போதுமே, இப்படி தனக்குள் தடம் அமைத்தவரின் பெயரை உலகின் அத்தனை தமிழரும் இயக்குநர் பாரதிராசா என்று முழங்குவார்களே! 

'என் இனிய தமிழ் மக்களே' என்று ஒவ்வொரு முறையும் கூறி பேச்சைத் தொடங்குவது ஏன் என்பதற்கு பாரதிராசா செய்தியாளார் சந்திப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

நான் பெரிதாக கல்லூரிகளில் போய் படித்ததில்லை. புழுதி மண், என் மக்கள், செடிகள், பக்கத்து வீட்டுக் கிழவிகள் என இவற்றைத்தான் படித்தேன். இவ்வளவு பெரிய ஆளாக இன்று இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் சொந்த மக்கள்தான். இவர்கள் தான் பாசத்துக்குரிய என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

என் மக்கள், என் மொழி, என் இனம் என்றே நான் வாழ்ந்துவிட்டேன். அவர்கள்தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறார்கள். அதனால்தான் என் இனிய தமிழ் மக்களே என்று சொல்லத் தொடங்கினேன். இவ்வாறு பாரதிராசா தெரிவித்துள்ளார்.

இப்படிப் தனக்குள் தமிழுக்கு தடம் அமைத்தவர்களின் பட்டியலை நீட்டித்துக் கொண்டே போகலாம். இதுவரை சொல்லப்பட்ட அனைவரும் தனக்குள் தமிழுக்கு ஒரு தடம் பதித்தவர்கள் மட்டும் அல்லர், கடவுளில் தனக்கு ஓர் இடம் அமைத்துக் கொண்டவர்களும் ஆவார்கள்.

கடவுளில் சொந்தமான இடம் அமைப்பது குறித்த கட்டுரையில் இதை விரிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

உங்களுக்குள் தமிழுக்கு தடம் அமைப்பது என்பது: உறவுகள், நண்பர்கள், தொண்டர்கள், தலைவர், தொழிலாளிகள், முதலாளி, மேலதிகாரி, பணியாளர்கள், அனைவரும் எளிதாக, இனிதாக உங்களுக்குள் பயணப்படுவதற்கான நெடுஞ்சாலை ஆகும். 

அடிப்படையான கேள்விகளைக் கேட்டால் சினக்கும் சிடுமூஞ்சி என்கிற சுங்கம் தண்டும் நெடுஞ்சாலையாக இருக்கக் கூடாது உங்கள் தமிழ்த்தடம். சுங்கச் சாவடிகள் சுங்கம் கேட்பது போல உங்களுக்குள் பயணிக்கிறவரிடம் சில அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது அல்ல நீங்கள் அமைக்கிற தமிழுக்கு தடம்.

நடப்பு நிலையில் நல்ல உறவாக, நல்ல தலைவராக, நல்ல தொண்டர்களாக, நல்ல கலைஞராக, நல்ல பாடகராக, நல்ல நடிகராக, நல்ல அதிகாரியாக, நல்ல முதலாளியாக திகழ்கிற அனைவரும் தனக்குள் தமிழுக்கு தடம் அமைத்தவர்களே ஆவார்கள். அவர்களே கடவுளில் தனக்கு ஓர் இடம் அமைத்தவர்கள் என்றால் அவர்களைக் காலம் கடந்தும் உலகம் கொண்டாடும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,594.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.