Show all

கடவுளிடம் நீங்கள் உருவாக்கிய உங்கள் சொந்தஇடமே உங்கள் அதிகாரம்

நீங்கள் சொந்தமாக வீட்டு மனையோ, நீங்கள் சொந்தமாக வீடோ அமைத்துக் கொள்வது போல கடவுளிடம் உங்களுக்கான ஒரு சொந்தமான இடம் அமைப்பது பெரியபாடெல்லாம் இல்லை. சொந்த மனைக்கும், சொந்த வீட்டிற்கும் கூட சட்ட சமூக அமைப்பிற்கு நாம் வரி கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. உங்கள் கடவுள் இடத்தில் உங்கள் முழுமையான அதிகாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை.

13,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: முதலெனப்படுவது இடமும் காலமும் என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். இது பழந்தமிழர்தம் காப்பிய (இலக்கணம்) நூலான தொல்காப்பியத்தில் காணக்கிடைக்கும்.

எல்லையில்லாத, இயக்கமில்லாத வெளியை இடம் என்றனர் தமிழ்முன்னோர். 

அதில் இறைந்து கிடக்கிற நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்களின் அடிப்படையான தனி ஒன்றுகளைக் காலம் என்றனர் தமிழ்முன்னோர். 

அவைகள் (தனிஒன்றுகள்) எல்லையும் கொண்டு, இயக்கமும் கொண்டுள்ளதால் அவை காலத்தைக் கொண்டுள்ளன என்கிற நுட்பச் செய்தியைப் பத்தாயிரத்திற்கு மேலான ஆண்டுகளுக்கு முன்னேமேயே தமிழ்முன்னோர் புரிந்திருந்தனர். 

அதன் பொருட்டே மூல முதல் குறித்த ஆய்வில் வாகைசூடிய தமிழ்முன்னோர், முதலெனப்படுவது இடமும் காலமும் என்று நிறுவியுள்ளனர்.

தமிழ்முன்னோர் காலம் என்று கொண்டாடிய மிக மிக நுட்பமான, அனைத்தின் அடிப்படையான, தனி ஒன்றுகளின் வெவ்வேறு எண்ணிக்கையிலான கூட்டியக்க நிலைதாம் இந்த நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்கள். 

இவற்றை ஆற்றல் மூலம் என்று பட்டியல் படுத்தும் போது அதற்கான தலைப்பாக இறை என்ற சொல்லை நிறுவினர் தமிழ்முன்னோர்.

அடுத்ததாக எல்லையும் இயக்கமும் இல்லாத இடத்தை ஆற்றல் மூலம் என்று பட்டியல் படுத்தும் போது அதற்கான தலைப்பாக கடவுள் என்ற சொல்லை நிறுவினர் தமிழ்முன்னோர்.

ஆக கடவுள் என்கிற சொல்லில்- இறைந்து கிடக்கிற, கூட்டியக்கங்களான நாற்திரங்களைக் கடந்தும் உள்ளும் இருக்கிறது இடம். அந்த இடம் ஆற்றல் மூலப்பட்டியலில் கடவுள் எனப் பெயர் பெறுகிறது என்பதாகப் பொருள் பொதிக்கப்பட்டுள்ளது.

இடம் அல்லது கடவுள் 1.வெளி 2.விண்வெளி 3.விசும்பு என்கிற மூன்று நிலைகளை எய்துவதாக தமிழ்முன்னோரால் கண்டறியப்பட்டுள்ளது. அந்த மூன்றாவது நிலையில் விசும்பு என்பது- நிலம் நீர் தீ காற்று போல இயக்கமும் எல்லையும் பெற்றுள்ள காரணம் பற்றி அதையும் திரங்களில் ஒன்றாக்கி திரங்கள் ஐந்துஎன்று ஐந்திரம் என்பன நிலம் நீர் தீ காற்று விசும்பு என்கின்றனர் தமிழ் முன்னோர்.

திரம் என்பது திரண்டிருத்தல், திரள், திரட்சி என்கிற சொற்களில் உள்ளவாறு குவிந்திருக்கிற ஆற்றல் என்கிற பொருளைக் கொண்டுள்ளது. திறன் என்கிற சொல் திறப்பு திறவுகோல், திறந்திடு என்கிற சொற்களில் உள்ளவாறு வெளிப்படுகிற ஆற்றலைக் குறிப்பதாவதைப் போல.

நிலம், நீர், தீ, காற்று என்பனவற்றைக் குவிக்கப்பட்ட ஆற்றலாக புரிந்து கொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. இயக்கமும் எல்லையும் இல்லாத வெளியின் மூன்றாவது நிலையான விசும்பு எப்படி குவிக்கப்பட்ட ஆற்றலாக மாறியது என்பது தமிழர்க்கு மட்டும் சொந்தமான புரிதல் ஆகும்.

உங்கள் செயல், எண்ணம், மொழி ஆகிய மூன்றும் ஒவ்வொரு தற்பரை நேரமும் வெளியில் பதிவாகி, உங்கள் செயல், எண்ணம், மொழி ஆகிய மூவகை இயக்கத்தால் வெளி- விண்வெளியாக்கப்பட்டு, உங்களிடம் இருந்து இயக்கம்பெற்ற வகைக்கு- உங்களை இயக்கப் போகிற விசும்பாகிறது. 

இப்படி வெளியில் உங்களுக்கான ஒரு இடம் உருவாகி, உங்களின் அனைத்துப் பதிவுகளும் தரவுகளாக உங்களுக்கான இடத்தில் நீங்கள் வாழுங்காலம் முழுவதும் இயங்கு (dynamic) பக்கமாக இருக்கும். ஒருவரின் வாழுங்காலம் முடிந்த நிலையில், அந்தப் பக்கத்தின் இயங்கு நிலை சுழியமாகி நிலையான (static) பக்கமாக நின்று விடுகிறது. இதைத்தான் உயிர் காலமாகிறது என்கிறது தமிழ். 

நீங்கள் யாரையும் பின்பற்றாது, ஒரு மதத்தையோ வழிகாட்டியையோ சாராது, உங்கள் செயல், உங்கள் எண்ணம் உங்கள் தமிழ் (எண்ணமொழி)  என்று பயணிக்கும் நிலையில்தான் உங்களுக்கு சொந்தமான ஓர் இடம் கடவுளில் அமைகிறது. 

உங்கள் செயல், எண்ணம், தமிழ் (எண்ணமொழி) இயல்பூக்கமாக, தனி அடையாளமாக உங்களால் முன்னெடுக்கிறபோதுதான் உங்களுக்கு சொந்தமான ஓர் இடம் கடவுளில் அமைகிறது. 

நீங்கள் யாரையும் ஆசிரியராகக் கருதி அவர்களுடைய செய்தியை அங்கீகரிப்பதில் உங்கள் இடம் உங்கள் கைவிட்டுப் போவதில்லை. மாறாக நீங்கள் ஒரு தலைமையை, குருவை, மதத்தை, அரசியல் கோட்பாட்டை பின்பற்றி நின்றால் உங்களுக்கான கடவுள் இடத்திற்கு அவர்களை உடைமையாளர் ஆக்கி நீங்கள் கடவுள் இடத்திற்கு வாடகை கொடுக்க வேண்டியுள்ளது.

நீங்கள் சொந்தமாக வீட்டு மனையோ, நீங்கள் சொந்தமாக வீடோ அமைத்துக் கொள்வது போல கடவுளிடம் உங்களுக்கான ஒரு சொந்தமான இடம் அமைப்பது பெரியபாடெல்லாம் இல்லை. சொந்த மனைக்கும், சொந்த வீட்டிற்கும் கூட சட்ட சமூகஅமைப்பிற்கு நாம் வரி கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. உங்கள் கடவுள் இடத்தை நீங்கள் யாரையும் பின்பற்றாத வரை இழக்க மாட்டீர்கள். 

உங்கள் கடவுள் இடத்தை உங்கள் வாழ்நாள் முழுவதும் இயங்கு பக்கமாகவும், அதற்குப் பிறகும் பெருவெடி வரை நிலைப்பக்கமாகவும் கொண்டிருக்க நீங்கள் உங்கள் செயல், உங்கள் எண்ணம், உங்கள் தமிழ் (எண்ணமொழி) என்று தனித்துவம் பேணுதல் மட்டுமே உங்களுக்கான கடமையாகும். 

நீங்கள் தாயின் வயிற்றில் கருவுற்றவுடன் கடவுளில் உங்களுக்கென்று ஒரு சொந்த இடம் உங்களால் உருவாக்கப்பட்டு விடுகிறது. உங்கள் தாயின் ஒத்துழைப்பு அளவிற்கு உங்கள் சொந்த வீட்டை அழகும், விரிவும் படுத்திக் கொண்டுதான் உள்ளீர்கள். 

நீங்கள் குழந்தையாகப் பிறந்து விட்ட பிறகும் உங்கள் கடவுள் இடம் உங்கள் அதிகாரத்தில்தான் இருக்கிறது. நீங்கள் நடை பழகுவதும், நீங்கள் தமிழ் (எண்ணமொழி) முழுமையாகக் கற்பதும் உங்கள் கடவுள் இடத்தின் பேரற்றலில்தாம். 

ஆனால் உங்கள் பெற்றோர் உங்களை மூன்று அகவையிலேயே ஆங்கில வழிப்பள்ளியில் கையளித்து உங்கள் தமிழாற்றலைச் படிப்படியாகச் சிதைக்கத் தொடங்குகிறார்கள். அதையொட்டி உங்கள் எண்ணமும் செயலும் கூட இயல்பூக்கம் இழந்து விடுகிறது. உங்கள் கடவுள் இடம் உங்கள் உடைமையாக இல்லாமல், தமிழர் உடைமையான கச்சைத்தீவை யாருக்கோ யாரோ பறித்துக் கொடுத்து போல, உங்கள் கடவுள் இடம் உங்களிடம் இருந்து களவாடப்பட்டு விடுகிறது. 

தமிழ்ச்சொல்லான கடவுளை, தமிழ்- பொருள் பொதித்திருக்கிற வகையில், புரிந்து கொண்டு, பின்பற்றுதல்களையும், அயல் சார்புகளையும் நீங்கள் தூக்கி வீசிவிடுவீர்களேயானல் உங்களுக்குச் சொந்தமான கடவுள் இடம் உங்களால் எளிதாக மீட்கப்பட்டுவிடும். 

உங்களுக்குச் சொந்தமான கடவுள் இடம் உங்கள் அதிகாரத்தில் இருந்தால்- உங்கள் வாழ்க்கை மிக மிக எளிமையாகும். நன்மைகளும் நலமும் வளமும் எளிமையாகும். உங்கள் பயணப்பாதை- அடுத்த அடுத்த தலைமுறைகளின் எளிமையான பயணத்திற்கும் மென்மையான மலர்ப்பதை ஆகிறது.   
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,417.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.