Show all

நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு! நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது எல்லாம் இறை கூறு

கடவுளும், இறையும் பல்வேறு உருவாக்கங்களில் தொய்ந்திருக்கிற காரணம் பற்றி, நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு. நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது இறை கூறு என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர் என்று பேசுவதற்கானது இந்தக் கட்டுரை.

03,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்முன்னோர் நிறுவியுள்ள முதலெனப்படுவது இடமும் காலமும் என்பதில்- இடம் என்பது விசும்பு என்கிற திரம், அது கடவுள் என்றும் பேசப்படுகிறது. காலம் என்பது அடிப்படையில் தனிஒன்றுகள், வழிநிலையில் நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரம், அது இறை என்றும் பேசப்படுகிறது. 

கடவுளும், இறையும் பல்வேறு உருவாக்கங்களில் தொய்ந்திருக்கிற காரணம் பற்றி, நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு. நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது எல்லாம் இறை கூறு. கடவுள் கூறையும், இறைக் கூறையும் தெய்வமாக வழிபடுவது தமிழர் மரபு. 

கடவுள் ஒன்றே ஒன்று. இறை நான்கு. அவற்றின் கூறுகளாக அமைந்த தெய்வங்கள் பற்பல. ஐந்திரம் என்ற பொருள்பொதிந்த சொல்லில் தமிழர் நிறுவிய ஐந்து திரங்கள் இந்தக் கடவுளும் இறையும். 

கடவுள்- வெளி, விண்வெளி, விசும்பு என்கிற மூன்று நிலைகளை உடைய ஒற்றைத் திரம் ஆகும். இறை- நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்கள்.

நம்மால் உருவான தமிழ் (மொழி), முதலாவது கடவுள் கூறு ஆகும்.

குறிஞ்சி நிலத்திற்கான தெய்வத்தை சேயோன் அல்லது முருகன் என்று பட்டியல் இட்டுள்ளனர் தமிழ்முன்னோர். சேயோன் முருகனைத் தமிழ்த் தெய்வம் என்று அடையாளப்படுத்துகிற போது, தமிழ்- நமது, மகளாகவோ, மகனாகவோ தமிழ்முன்னோர் நிறுவியதை உய்த்துணர முடியும்.

ஆக கடவுள் நம்மை படைத்தான ஒன்று அல்ல. கடவுள் வெளி, விண்வெளி, விசும்பு என்ற மூன்று நிலைகளைக் கொண்டது. நம்பிக்கைக்கு உரியதல்ல கடவுள். அறிந்து பயன்படுத்திக் கொள்வதற்கானது கடவுள். கடவுள் எல்லை இல்லாதது. கடவுள் தான்தோன்றி இயக்கம் உடையது அல்ல. கடவுள் நம்மிலிருந்து இயக்கம் பெற்று நம்மை இயக்குகிறது. 

எனவேதான் கடவுளை- நமக்கு உள்ளும் வெளியிலும் அமைந்து- நம்மை தக்கவரா தகவிலரா என்று அடையாளம் காட்ட வல்ல- நமது எச்சமான பிள்ளைக்கு அடையாளமாக்கி- சோயோன் என்றனர் குறிஞ்சி நிலத்திற்கான தெய்வத்தை தமிழ்முன்னோர்.  

நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திர ஆற்றல்கள்தாம் நம்முள் இருக்கின்றன. அவைகளை தாயென்றோ தந்தையென்றோ அடையாளப் படுத்துவது பொருந்தும். 

ஐந்தாவது ஆற்றலான விசும்பு பொருள் அல்ல. அது கட்டளைகள் மட்டுமே. அது அறிவு மட்டுமே. நாற்திரங்களும் தரும் இயக்கம் பெற்று அவைகளை இயக்கும் பேரறிவு ஆகும் விசும்பு என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். விசும்பு தாய்மொழி ஆகும். விசும்பு தமிழர்களுக்கு தமிழ் என்கிற மென்பொருள் ஆகும். தமிழ் உண்மையில் நமது சேய் ஆகும்.

நமது மெய், வாய், மூக்கு, கண், காது என்கிற ஐம்புலன்களால் பட்டறியப்படுகிற அறிவின் சேமிப்பகமாகவும், அந்த புலன்களின் அறிவால் பதிவு பெற்ற வகைக்கு அவற்றை இயக்கும் நம் ஆறாவது புலன் ஆன மனம் இரண்டாவது கடவுள் கூறு ஆகும்.

நம்மிலிருந்து தான்தோன்றி கூட்டியக்கமாக உருவான நம் பிள்ளைகள், மூன்றாவது கடவுள் கூறு ஆகும்.

நம்மால் உருவாக்கப்பட்ட பல்வேறு கருவிகள், நாம் கொண்டாடத்தக்க நான்காவது கடவுள் கூறு என்கின்றனர் தமிழ்முன்னோர். 

நம் பெற்றோர் உள்ளிட்ட முன்னோர்கள் நாம் கொண்டாடத்தக்க இறைக் கூறு என்கின்றனர் தமிழ்முன்னோர்.

கடவுளும் இறையும் ஆற்றல் மூலங்கள். தெய்வங்கள் மட்டுமே வழிபாட்டு மூலங்கள். வழிபடும் தெய்வங்கள் அனைத்தும் கடவுள் கூறோ, இறைக் கூறோ அன்றி கடவுளோ, இறையோ ஆக மாட்டா. 

உலகமொழிகள் எதுவும்- கடவுள், இறை என்கிற சொற்களில் தமிழ்முன்னோர் பொருள் பொதித்த வகைக்கு, நேரான சொற்களைக் கொண்டிருக்க வில்லை. ஆகவே உலகினர் சுட்டும் எந்த தெய்வத்தையும் உள் நுழைந்து அறிந்து அது கடவுள் கூறா இறைக் கூறா என்று நிறுவவேண்டிய கட்டாயம் தமிழர் யாருக்கும் தேவையில்லை. 

அந்தத் தெய்வங்களை முன்மொழியும் வழிகாட்டிகள், மதங்கள், அரசியல் கோட்பாடுகளில் ஆகியவற்றை ஏற்று தனியாகவோ, குடும்பமாகவே தமிழர் யாரும் பின்தொடர- எந்தத் தடையும் இல்லை. அதை தமிழில் அவர்கள் நுழைக்கும் போது, அவர்கள் தமிழில் இருந்து விலகுகிறார்களேயன்றி அது தமிழில் நிற்பதோ, தமிழியலைச் சிதைப்பதோ இல்லை. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,466. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.