Show all

உச்சஅறங்கூற்று மன்றத்தின், சபரிமலை உள்ளிட்ட மூன்று அதிரடித் தீர்ப்புகளின் மீதான பார்வைகள்!

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மையில் உச்சஅறங்கூற்று மன்றத்தால் வழங்கப் பட்ட மூன்று தீர்ப்புகள் மிகவும் அதிரடியான தீர்ப்புகள் என்று கருதப் படுகின்றன.

இந்த தீர்ப்புகள் குறித்து ஒரு நாளேடு பொதுமக்களில் 8250 பேர்களிடம் கருத்து கேட்டு, முடிவை வெளியிட்டிருக்கிறது. கருத்துக் கணிப்பு முடிவு: உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்புகளில் மூன்றும் தவறு என்பதாக பெரும்பான்மையோர் கணிப்பாக தெரிவித்திருக்கிறது.    

உச்ச அறங்கூற்று மன்றத் தீர்ப்பு ஒன்று: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 அகவை வரையிலான பெண்கள் செல்ல ஆண்டாண்டு காலமாக தடை இருந்து வரும் நிலையில், அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச அறங்கூற்றுமன்றம் சபரிமலை கோவிலில் அனைத்து அகவை பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியது. 

சபரிமலைக்கு எல்லா பெண்களும் போய்தாம் தீரவேண்டும். போகாவிட்டால் தண்டனை கிடைக்கும் என்பதல்ல தீர்ப்பு. சபரிமலைக்கு போவதை சில பெண்கள் தங்கள் உரிமையாக கருதுகிறார்கள். அவர்களை மறுக்கக் கூடாது. மறுத்தால் அது குற்றம். இதுதான் தீர்ப்பு. 

இந்த தீர்ப்பு தவறு என்று நினைப்பவர்கள் பெண்களுக்கான உரிமை குறித்து சரி அல்லது தவறு என்று சிந்தித்து எதிர்க்க வில்லை. தமது சுயம் சார்ந்த கட்டமைப்பிற்குள் இருக்கிற கோயில் நடவடிக்கைகளுக்குள். பொது நிலையில் இருக்கிற அறங்கூற்று மன்றம் நுழைவது ஆபத்தானது என்றே எதிர்க்கிறார்கள். இந்தியா முழுக்க கோயில் என்பது ஹிந்துத்துவா உடைமையாக புராண, இதிகாச கட்டுக்கதைகளால் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. அந்தக் கோயில்களை கட்டிய மன்னர்களும் அந்தக் மூளைச்சலவைக்கு தங்கள் அறிவை அடகு வைத்தவர்கள்தான். அந்த சுயத்திற்குள் நிலவி வருகிற, பிறப்பு அடிப்படையிலாக உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கிற ஆண்டான், அடிதைத் தன்மையை உணர்ந்து- பெரியார், ராசாராம் மோகன்;ராய் போன்றவர்கள் உள்நுழைந்து கலகம் விளைவித்து திருத்தம் கொண்டு வந்தார்கள்.

இன்றைய பாஜக சித்தாந்த ஹிந்துத்துவா அமைப்பில், பெரியார், ராசாராம் மோகன்;ராய் போன்றவர்களை நுழைய விட்டது கூட தவறு என்று வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் பெரும்பான்மை மக்களின் உழைப்பில் கட்டப்பட்ட, கோயில்களில் பிறப்பு அடிப்படையிலான சாதிய அடிப்படையில் பாகுபாடு கடைபிடிக்கப் படும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. அதில் பொது அமைப்பான அறங்கூற்று மன்றம் தலையிடுவதுதான்  நூறு விழுக்காடும் சரி.
 
அடுத்த இரண்டு வழக்குகள்: ஒன்று குடும்ப அமைப்புக்குள் பிணக்கில் அறங்கூற்று மன்றத் தலையீடு. இரண்டாவது குடும்பமே அமையாமல் பொது வெளியில் குடும்ப உறவு என்பதானதில் அறங்கூற்று மன்றத் தலையீடு. அதாவது முன்னது கள்ளத்தொடர்பு பின்னது ஓரினச் சேர்க்கை. 

இந்த இரண்டுக்குள் அடுத்தவர் தலையீடு என்பது பொது வெளியானது அல்ல. கணவன் மனைவிக்கு இடையிலான பிணக்கில் யார் வேண்டுமானலும் தலையிட்டு விட முடியாது. அப்படியான தலையீடு பலநேரங்களில் தலையிடுகிறவருக்கு அற்ப மகிழ்ச்சியைத் தருவதானதாகி விடும். பெண்ணுக்கு பெண்ணின்; தாய் நல்லது சொல்லலாம். பெண்ணின் தந்தையின் தலையீடே ஆசாபாசம் ஆகிவிடும். ஆணுக்கு ஆணின் தாய்தந்தையர் இணைந்து நல்லது சொல்லலாம். தனித்தனியாகச் சொல்லுவது ஆசாபாசம் ஆகிவிடும். 

அடுத்தது உரிய காலத்தில் திருமணம் செய்து கொள்ள முடியாமல் பொருளுக்காக அலைந்து திரியும் போதான  பாலியல் வேட்கை சார்ந்தது. தனிமனித வாழ்மானம் குறித்து கவலைப் படாத சமூகம் அந்தவகையான குற்றத்திற்கு வழிகோலுகிறது.
இவை இரண்டும் தவறுகள். திருத்திக் கொள்ளக் கூடியவைகள். குற்றங்கள் அல்ல. தண்டனைகள் தேவையில்லை. அறங்கூற்று மன்றத் தலையீடு தேவையில்லை. குடும்ப அமைப்புக்குள் நாங்கள் தலையிடப் போவதில்லை என்கிற அறங்கூற்றுமன்ற தீர்ப்புகள் நூறு விழுக்காடும் சரியானவைகளே.

தமிழர்களால், இந்தியாவிற்கு வழங்கப்பட்ட தமிழ்க் குடும்ப அமைப்புமுறை ஐயாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழமைக்குரியது. குடும்பத்தில் பிள்ளைகளைச் சான்றோர்களாக வளர்த்தெடுப்பதற்கான பொறுப்பை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைப்பாட்டை தமிழ்க் குடும்பம் கட்டமைத்திருக்கிறது. இன்றைக்கு நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற சட்டசமுக அமைப்பு தன் அங்கமாக கருத வேண்டிய குடும்பங்கள்மீது எந்தப் பொறுப்பும் இல்லாமல்,
அனைத்துக் குற்றப்பின்னனிகளுக்கும் பயிற்றுக் களமாக இருக்கிற சாராயக் கடைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழ்க் குடும்பங்களுக்கு தம்பிள்ளைகளை இற்றைச் சமுதாய அமைப்பில் இருந்து காப்பாற்றி சான்றோர்களாக வளர்த்தெடுப்பது கூடுதல் சுமையாக இருக்கிறது. 

இப்படியான குடும்ப அமைப்புக்கள் சமூக சட்ட அமைப்பின் தலையீடு இல்லை என்கிற உறுதிப்பாட்டினைத் தருகிற இரண்டு தீர்ப்புகளோடு, ஹிந்துத்துவா உடைமையாக்கிக் கொண்டுள்ள புறம் சார்ந்த கோயில்களில் நியாயத்தை நிலைநாட்டி அறங்கூற்றுமன்றத்தின் தலையீடு இருக்கும் என்கிற சபரிமலைத் தீர்ப்போடு, 

இந்த மூன்று அறங்கூற்று மன்றத் தீர்ப்புகளிலுமே தவறு சரி என்பதை விட அறங்கூற்று மன்றத் தலையீடு சரியா தவறா என்று  பார்க்க வேண்டிய அடிப்டை உள்ள தீர்ப்புகளாகும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,972.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.