Show all

பேராசிரியர். இரா. மதிவாணன் அறிவோம்! நாமும் கூட அந்தப் பாதையில் பயணிப்போம் வரிசையில்

தங்கள் இனமானவர்களை தேடிப்போய் அறிமுகப் படுத்திக் கொண்டு, பாரட்டுவதையும் அவர்களைக் கொண்டாடுவதையும் உலகில் இரண்டு இனங்கள் சிறப்பாக செய்து வருகின்றன. ஒன்று மலையாளிகள். இரண்டு பார்ப்பனியர்கள். நாமும் கூட அந்தப் பாதையில் நம் இனமானவர்களைக் கொண்டாடலாமே.

10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெயர்: பேராசிரியர். இரா. மதிவாணன். பிறந்தநாள்: 18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5038. தமிழ்த்தொடர்நாள்: 1839885. கிழமை: புதியம் கிழமை ஆங்கிலம்: 01.07.1936. பிறந்த இடம்: பென்னாகரம், தருமபுரிமாவட்டம், தமிழ்நாடு. தொடர்பு எண்: 9962949787.

பேராசிரியர். இரா. மதிவாணன் சிந்துவெளி எழுத்தாய்வு அறிஞர் ஆவார். இவர் கல்வெட்டு எழுத்தாய்வாளரும், சொற்பிறப்பியல் எழுத்தாளரும் ஆவார். 
திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, முனைவர் ஆய்வுப்பட்டங்களும் பெற்றவர். சேலம் அரசினர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரை இயக்குநராகக் கொண்ட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்டத்தில் பணியாற்றி ஆராய்ச்சித்திறன் பெற்றவர், அவருடன் பணியாற்றிய பெருமைக்கு உரியவர். பாவாணருக்குப் பின்னர் அகர முதலித்திட்டத்தில் இயக்குநராகி, திறமுடன் பல மடலங்களை உருவாக்கினார், சொற்பிறப்பியல் அகர முதலியின் 6 தொகுதிகளை வெளியிட்டார். 

சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிய ஆய்விலும், எழுத்தாய்விலும் உலகப்புகழ் பெற்றவர், நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டவர். வடநாடு முழுவதும், மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா போன்ற பல பகுதிகளில் சொற்பிறப்பியல் மொழி ஆய்வுக்காகப் பயணம் செய்தவர்.

உண்மைக்குப் புறம்பாக, ‘சிந்துவெளி ஆய்வில் கிடைக்கப் பெற்ற எழுத்துக்களை இதுவரை படிக்க முடியவில்லை’ என்று ஊடகங்கள், களஞ்சியங்கள், ஆய்வு வெளியீடுகள் ஆகியவற்றில் திட்டமிட்டு தொடர்ந்து பரப்பரை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. 

ஆனால் சிந்துவெளி ஆய்வில் கிடைக்கப்பெற்ற  ஐயாயிரம் சொற்களையும் படிக்க முடிந்தது, அவை அனைத்தும் தமிழ்ச் சொற்கள், அதுவும் அனைத்துச் சொற்களும் சங்க இலக்கியங்களோடு தொடர்புடைய சொற்கள், சிந்துவெளி நாகரிகம் இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன்பு தொல்காப்பியத்தில் எல்லையாக குறிப்பிட்ட வகையாக வாழ்ந்த தமிழர் நாகரிகம். 

சிந்துவெளி ஆய்வில் கிடைத்த எழுத்துக்களைப் படித்து விட்டேன் என்று தெரிவித்து, படிப்பது எப்படி என்று நாடுதோறும் சென்று கடந்த இருபது ஆண்டுகளாகவும், இன்றுவரையும் பயிற்சி வகுப்புகள் நடத்தியும் வருகிறார் பேராசிரியர். இரா. மதிவாணன் அவர்கள்.

பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டை, அமெரிக்காவின் சிகாகோ நகரில் 4 நாட்கள் நடைபெறும் நிகழ்வாக, உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், வட அமெரிக்க தமிழ் சங்கம், சிகாகோ தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து மிகச் சிறப்பாக நடத்தி முடித்தன மூன்று மாதங்களுக்கு முன்பு.

இந்த மாநாட்டிற்கான மைக்கரு “கீழடி நம் தாய் மடி” என்பதாக இருந்தது. மதுரையை அடுத்த கீழடியில் ஏராளமான தொல்பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன. அவை பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையை விளக்குகின்றன. கீழடியில் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, தமிழர்களின் வாழ்க்கையை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று இந்த மநாட்டில் பலராலும் குரல் கொடுக்கப் பட்டது.

இந்த பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டிலும் பேராசிரியர். இரா. மதிவாணன் அவர்கள், சிந்துவெளி ஆய்வில் கிடைத்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களே என்றும், அவற்றை முழுமையாக தமிழர்களால் படிக்க முடியும் என்றும், எப்படி படிப்பது என்பதுமான ஆய்வு கட்டுரை ஒன்றைப் படித்தார்கள்.

பரோடா பல்கலைக்கழகத்தில் சிந்துவெளி எழுத்துக்களைப் படிக்கும் முறைகள் என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவுகள்
ஐதராபாத்து மாநிலத் தொல் பொருளாய்வுத் துறையில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்.
அனைத்திந்திய பாறை ஓவியக் கருத்தரங்கம். (ஆக்ராவில் தென்னாட்டுப் பாறை ஓவியங்களிலுள்ள சிந்துவெளி எழுத்துச் சான்று தொடர்பான ஆய்வுத்துறை.)
கருநாடக மாநில உடுப்பி இயல்அறிவு கலைக் கல்லூரியில், சிந்துவெளி எழுத்தைப் படித்தறிந்த முறைகள் குறித்த சொற்பொழிவு.
திருவனந்தபுரம் பன்னாட்டுத் திராவிட மொழியியல் மறை மாநாட்டில் சிந்துவெளி எழுத்துகள் குறித்த உரை.
நோபல் பரிசு பெற்ற கவிஞர் தாகூரால் நிறுவப்பட்ட சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்தில் சித்துவெளி தொடர்பான எழுத்துகள் உரை
கலிபோர்னியாவில் பேராசிரியர் சியார்ச்சு ஆர்ட்டு அவர்கள் முன்னிலையில் சிந்துவெளி எழுத்துகள் படித்தறிந்த முறை பற்றிய விளக்கம் மற்றும் கலந்துரையாடல்.
புது தில்லி சாகித்திய அகாதமியின், இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு ஆசிரியர்களை ஊக்குவிக்கும் சிறப்புச் சொற்பொழிவுச் சுற்றுலாத் திட்டத்தின் கீழ், தமிழிலக்கியம் குறித்த சொற்பொழிவு.(குசராத்து, இராசத்தானம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் நிகழ்த்தப்பட்டது. அம்மாநிலங்களிலுள்ள இலக்கிய மன்றங்கள் தமிழிலக்கியச் சொற்பொழிவுகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தன.)
கனடா நாட்டுத் தொரண்டரோ நகரத்துத் கலை இயல்அறிவுக் கல்லூரியில் திருக்குறள் சிறப்புச் சொற்பொழிவு 
சென்னை, பெரியார் திடலில் இருக்கு வேதபேருரை 18தொடர் சொற்பொழிவுகள். என்பன பேராசிரியர். இரா. மதிவாணன் அவர்கள் கலந்து கொண்ட கருத்துரை தளங்கள்.

அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறளின் 1330 குறளையும் முழுமையாக ஒப்பித்ததற்காகத் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி முதற் பரிசு வழங்கியது.
தமிழக அரசு ‘திருக்குறள் நெறிபரப்பு மையம்’ ‘ திருக்குறள் செம்மல்’ என்னும் விருது வழங்கியது.
‘இலெமூரியா முதல் அரப்பா வரை’ என்னும் நூலுக்குச் சென்னை கிறிஸ்துவ இலக்கிய கழகம் முதற்பரிசு வழங்கியது.
வங்கிக் கலைச்சொல் அகராதி பதிப்புக் குழுவில் பணியாற்றியதற்காகப் இந்திய மாநில வங்கி பாராட்டுச் சான்றிதழ் வழங்கியது.
மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் குமரிக்கண்டம் என்னும் வரலாற்றுக் குறும்படம் திரையிடப்பட்டது. இது இவருடைய ‘இலெமூரியா முதல் அரப்பா வரை’ என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டதாலும், திரைப்பட உருவாக்கத்திற்கு இயக்குநர் ப.நீலகண்டனாருடன் உடனிருந்து பணியாற்றியதற்காகவும், தமிழ்நாடு முதலமைச்சரின் பாராட்டும் தஞ்சாவூர் கலைத்தட்டும் வழங்கப்பட்டன.
மலேசியத் தமிழ்க் குயில் முனைவர் கா.கலியபெருமாள் அவர்கள் தம் சொந்தச் செலவில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் சிறப்பு சொற்பொழிவுக்கு அழைத்துச் சென்றார். மலேசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் தாமும் உடனிருந்து, இவரது பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்தார். 
ஈப்போவிலுள்ள பாவாணர் தமிழ்மன்றமும் வள்ளலார் ஒளிநெறி மன்றமும் இணைந்து ‘’தமிழ்ஞாயிறு’’ என்னும் விருது அளித்தன. பாரிட் புந்தர் தமிழ்மன்றம் ‘’வரலாற்று ஒளிஞாயிறு’’ எனப் பாராட்டி சிறப்பித்தது.
சிகாகோவிலுள்ள அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, பாவாணர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுத் சிறப்புச் சொற்பொழிவுக்கு அழைத்தது. 'சிந்துவெளி முத்திரைகளில் உள்ள எழுத்து தமிழே” என்றும், தென்னாட்டிலிருந்து சிந்து வெளி நாகரிகம் வடநாட்டிலும் பாகித்தானத்திலும் ஆபகானித்தானத்திலும் பரவியது. சிந்துவெளி எழுத்துகள் இந்தியப் பிற மாநில ஒதுக்குப் புறங்களிலும் தென்னாட்டு மக்களின் அன்றாட வாழ்விலும் புழக்கத்தில் உள்ளன. மலைக்குகைகளிலும் பாறை ஓவியங்களிலும் சிந்துவெளி எழுத்துகள் தென்னாட்டில் உள்ளன எனும் உண்மைகளை தன் ஆங்கில நூல்கள் வெளிப்படுத்தியதால் பேருண்மையாளர்’ என்னும் பட்டயமும் விருதும் வழங்கிச் சிறப்பித்தது. அட்லாண்டா, பிளோரிடா, கலிபோர்னியா, தமிழ் மன்றங்களும் பாராட்டிப் பெருமைப்படுத்தின. ஆகியன பேராசிரியர். இரா. மதிவாணன் அவர்கள் பெற்ற விருதுகள் ஆகும்.

பேராசிரியர். இரா. மதிவாணன் அவர்களின் ஆய்வும் கண்டுபிடிப்புகளும்:
தொல்காப்பியம் அரங்கேற்றிய ஆண்டு கி.மு.835
சிந்துவெளி முத்திரைகள் அனைத்தும் தமிழில் எழுதப்பட்டுள்ளன.
சிந்துவெளி நாகரிகம் தமிழர்களால் தென்னாட்டிலிருந்து வடநாட்டில் பரப்பப்பட்டது.
சிந்துவெளி எழுத்து இரண்டாம் தமிழ்ச் சங்க காலத்து எழுத்துமுறை. முதல் தமிழ்க் சங்க காலத்தில் பட எழுத்து நிலவியது எனத் தெரிகிறது.
தமிழி எனப்படும் எழுத்துமுறை மூன்றாம் தமிழ்க் கழகக் காலத்தில் சிந்துவெளி எழுத்தை மாற்றியமைத்த தமிழ்ப் புலவர்களால் உருவாக்கப்பட்ட புதிய எழுத்துமுறை ஆகும். பாலி, பிராகிருதம், திபெத்தியம் ஆகிய வட இந்திய மொழியினரும் இந்தத் தமிழ் எழுத்து முறையை அக்கால இந்திய மொழிகளுக்கு பொது எழுத்து முறையாக ஆண்டுவந்தனர். தமிழிக்கு பிராமி என்பது அண்மைக் காலத்தில் இடப்பட்ட புதியபெயர்.
நியூ கினியாவுக்கு அருகிலுள்ள சாலமன் தீவில் இயற்கையாக விளைந்த கரும்புப் பயிரை கி.மு. 3000 கால அளவில் தமிழகத்திற்கு கொண்டு வந்து பயிரிட்ட சேரனின் பெயர் அதியஞ்சேரல்.
சிந்துவெளி எழுத்துகளும் குறியீடுகளும் குமரி முதல் இமயம் வரை வாழும் கல்லாத மக்களிடையில் இன்றும் அடையாளக் குறியீடுகளாக ஆளப்பட்டு வருகின்றன. இவை சிந்துவெளி நாகரீகக் காலத்து எழுத்து முறை என்பது அவர்களுக்கு தெரியாது.
வடக்கு இந்திய தாய் மொழிகளுக்கு மூலத்தாய் மொழி தமிழே.
பரதநாட்டியக் கலையின் தந்தை அவிநயர்
2000 ஆண்டுகளுக்கு முந்தய கிரேக்க நாடகத்தில் 22 தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.
அன்றில் பறவை இன்றும் வாழ்கிறது.
இயற்றிய நூல்கள்
குளிர்காவிரி
எல்லைப்போர் வில்லுப்பாட்டு
ஒரு பூமாலையின் பாமாலை
குறள் அறிமுகம்
குறள்வழி பிராகிருத இலக்கிய இன்பம்
திருக்குறள் தேனமுதம்
பாவாணார் ஆய்வு நெறி
சொல் என்ன சொல்கிறது
சொல்லாய்வுக் கட்டுரைகள்
பாவாணாரின் ஞால முதன் மொழிக் கொள்கை
தமிழ் வளர்ச்சி
தமிழாய்வில் கண்ட உண்மைகள்
இலெமூரியா முதல் அரப்பா வரை
கடல்கொண்ட தென்னாடு முதல் சிந்துவெளி வரை
உலக நாகரிகத்துக்குத் தமிழரின் கொடை
நாவினில் நற்றமிழ்
சாதிகளின் பொய்த்தோற்றம்
அகர முதலி (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி, தமிழக அரசு. 6 தொகுதிகள் )
அயல்சொல் கையேடு
சிவகோட்டாச்சாரியரின் நல்லறக் கதைகள் 
கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல்
பி.எம்,சீகண்டையா
டி. பி. கைலாசம்
சங்கர குருப்பு
அபிநவகுப்தர்
தொல்காப்பியர் காலம்
சிலம்பின் காலக்கணிப்பு
கடைக்கழக நூல்களின் காலமும் கருத்தும்
சிந்துவெளி நாகரிக ஆராய்ச்சி
திரவிட மக்களின் சிந்துவெளி எழுத்துகள்
சிந்துவெளி எழுத்தின் திறவு
தருமபுரி மாவட்டப் பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துக்கள் என்பனவாகும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,288.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.