Show all

கோமதி- ஊக்க மருந்து! இரண்டு மாதங்களுக்கு பிறகான இந்தத் தோண்டல்களுக்கு ஏதாவது புதுப்பெயர் வைத்தால் தேவலாம்.

தோகா ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி, என்று விழுந்து விழுந்து போற்றிக் கொண்டிருந்தோம்! இன்றைக்கு ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளாராம் கோமதி, என்றும் பரபரப்பு கிளப்புகிறோம். 

08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தோகா ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி! தடகளப் போட்டியின்போது, அவரிடத்தில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை  பரிசோதனை நடத்தியது.

போட்டியின் போது ஊட்டச்சத்து உணவு அல்லது நோய்க்கால சத்து மருந்துகள் தொடர்பான மருந்துகளை எடுத்துக் கொள்ள முழுவதும் தடையில்லை. ஆனால் சில வேளைகளில் இத்தகைய ஊட்டச்சத்து உணவில் தடைசெய்யப் பட்ட மருந்தின் தாக்கம் இருக்கலாம். நோய்க்கால மருந்துகளில் தடைசெய்யப் பட்ட மருந்து கலக்கப் பட்டிருந்து அதனை உற்பத்தியாளர் தெரிவிக்காமல் இருக்கலாம். ஆனால், 'உலக ஊக்க மருந்து தடுப்புக் கழகம்' இதை ஏற்காது. தடகள வீரர்களே இந்த விசயத்தில் நல்லது எது என்று முடிவெடுத்து செயல் படவேண்டும்.

அந்த வகையாக, கேமாதி சாப்பிட்ட உணவுப் பொருளிலேயே கூட சோதனையில் ஊக்க மருந்து பயன்படுத்தியது போன்ற 'சோதனை முடிவு' வரவும் வாய்ப்பு உள்ளது. 

இந்தக் கதைகள் எல்லாம் இயல்பாக போகும் வரை சரிதான். ஆனால் இப்படி எதாவது ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டால் சிக்கினவன் செத்தான் என்கிற கதையாகி விடும்.

'முறைப்படி, எங்களுக்கு தகவல் அளிக்கப்படவில்லை. ஊக்கமருந்து சோதனை முடிவை தாமதமின்றி அறிவித்திருந்தால், நாங்கள் அவரை ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்க அனுமதித்திருக்க  மாட்டோம்' என்று இந்திய தடகள சம்மேளன அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அதிகாரிகள்: யாருக்கும் அப்படியெல்லாம் பொறுப்பு எடுக்க மாட்டார்கள். அதுவும் சிக்கினவன் தமிழன் என்றால், இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் கதைதான்; ஏழுபேர்கள் விடுதலை கதைதான்; நமக்கேன் வம்பு என்று அதிகாரிகள் கழண்டு கொள்வார்கள்; தொங்கலில் விட்டு விடுவார்கள்.  

தற்போது, கோமதி தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுனம் தெரிவித்துள்ளது.  அடுத்தபடியாக, 'ஆ' மாதிரியும் பரிசோதிக்கப்படும். இந்தச் சோதனை முடிவைப் பொறுத்தே முடிவுகள் எடுக்கப்படும். கோமதி ஊக்கமருந்து பயன்படுத்தியதாகவே அந்த முடிவும் வந்தால்; ஆசிய தடகளத்தில் அவர் வென்ற தங்கம் பறிக்கப்படும். தற்போது, 30 அகவையான அவர், 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க முடியாது.

கோமதி, 'தன் வாழ்க்கையில் ஊக்கமருந்து எடுத்தது இல்லை' என்று மறுப்பு தெரிவித்துள்ளார். தன், 'ஆ' மாதிரியைப் பரிசோதிக்க வேண்டுமாறும் கோரியுள்ளார். கோமதியின் சகோதரர், கோமதி மீது பொறாமை காரணமாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால், அதிகாரிகளின் பொறுப்பில்லாத்தனமே இதற்கு காரணமாக சொல்ல முடியும்.

இந்நிலையில், 'சர்வதேச தடகள கூட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு'  என்ற அமைப்பு உலகம் முழுக்க தடை செய்யப்பட்ட வீரர் வீராங்கனைகள் பட்டியலில் நேற்று கடைசியாக கோமதி மாரிமுத்துவை சேர்த்துள்ளது.  

இனி கோமதி- விதிகளை, நடைமுறைகளை, சிக்கல்களில் இருந்து தீர்வுகள் குறித்து தேடித் தேடிக் கண்டு பிடித்து- கண்டுபிடித்து மீண்டு வர வேண்டும். அல்லது போனது எல்லாம் போகட்டும் என்று நான்கு ஆண்டுகள் காத்திருந்து விட்டு திரைப்பட கதைத்தலைவி போல மீண்டும் எழ வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,160.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.