அமெரிக்காவின் இன்றைய கூகுள் தேடலில் முன்;னிலை பெற்றது இதுதானாம். அப்படியா அமெரிக்கவில் இது கூகுளில் தேடும் அளவிற்கு கிடைக்காத பொருளா? தேவலாமே. 19,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க மக்கள் மட்டுமின்றி பன்னாட்டு அளவில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளனர். பன்னாட்டு அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கொரோனா நெருக்கடிக்கு நடுவே நடைபெற்ற இந்தத் தேர்தலில், அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணைக் குடிஅரசுத் தலைவர் ஜோ பைடன் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவியது. துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோருக்கிடையே கடும் போட்டி இருந்தது. நேற்று மாலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 538 பேராளர்களில் அதிபரை தேர்ந்தெடுக்க 270 பேராளர்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 129 பேராளர் வெற்றியுடன் முன்னிலை பெற்றார். டிரம்ப் 108 பேராளர் வெற்றியுடன் சற்று பின்தங்கியிருந்தார். பன்னாட்டு அளவில் இந்தத் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளனர். தொலைக்காட்சி வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் முடிவுகளை தெரிந்தவண்ணம் உள்ளனர். ஆனால், அமெரிக்காவில் இன்று கூகுள் தேடலில் முதலிடம் வகித்த சொல் அல்லது சொற்றொடர் எது என்று பார்த்தால் வியப்பாக உள்ளது. டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் நிலையில், உற்சாக பானங்களை வாங்குவதற்கும் ஆர்வம் காட்டி வருகின்றனர். என் அருகில் உள்ள மதுக்கடைகள் ( Liquor stores near me) என்ற சொற்றொடர் கூகுள் தேடலில் இன்று முதலிடத்தில் இருந்ததாக செய்தி வெளியாகியிருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



