குடியாட்சி முறையில் சிறந்து விளங்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டை விட, கடந்தஆண்டு இந்தியா 10 இடங்கள் பின்தங்கியுள்ளது. 09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியாட்சி முறையில் சிறந்து விளங்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது- இங்கிலாந்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பொருளாதார புலனாய்வு அமைப்பு. இதன்படி கடந்தாண்டுக்கான பட்டியலை இந்த அமைப்பு வெளியிட்டது. இந்த ஆய்வில் பங்கேற்ற 167 நாடுகள் முழுமையான குடியாட்சி, வீழ்ச்சியடைந்த குடியாட்சி, கலப்பு குடியாட்சி, சர்வாதிகார குடியாட்சி என்ற பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவில் இந்தியா 10 இடங்கள் பின்தங்கி 51வது இடத்திற்கு சரிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் இந்தியாவின் மதிப்பு 7.23 புள்ளிகளாக காணப்பட்ட நிலையில், கடந்த ஆண்டில் இது 6.90 புள்ளிகளாக குறைந்துள்ளது. காஷ்மீர் சிறப்புத் தகுதி நீக்கத்துக்கு பின், தொலைபேசி, இணையதள சேவைகள் முடக்கம், குடியுரிமை திருத்த சட்ட விவகாரம், வகுப்புவாத வன்முறைகள் ஆகியவைகளே இதற்கு காரணம் என தெரிகிறது. இந்த பட்டியலில் முதலிடத்தில் நார்வேயும், 2வது, 3வது இடங்களில் முறையே ஐஸ்லாந்து, சுவீடன் நாடுகளும் உள்ளன. இதில் பாகிஸ்தான் 108-வது இடத்திலும், இலங்கை 69-வது இடத்திலும் உள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



